பாஜகவின் குறுக்குவழி அரசியலில் ஒருபோதும் எடுபடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் இன்று (ஏப்ரல் 22) தெரிவித்துள்ளார்.
சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் ஸ்டாலினை இன்று முத்தரசன், சிபிஐ நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் உள்ளிட்டோர் சந்தித்தனர். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், “இந்தியாவின் 18வது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் முதல்கட்ட நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது.
முதல்கட்ட வாக்குப்பதிவு என்பது இந்தியா கூட்டணிக்கு கிடைத்த முதல் மற்றும் மகத்தான வெற்றியாகும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி வாகை சூடுவார்கள்.
சென்ற நாடாளுமன்றத் தேர்தல் போன்றே இந்த தேர்தலிலும் தோழமை கட்சிகளை சிறந்த முறையில் வழிநடத்தி சென்ற திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி.
தேர்தல் சிறப்பாக நடைபெற துணையாக இருந்த முதலமைச்சருக்கு நானும் கட்சி நிர்வாகிகளும் நேரில் சென்று நன்றி செலுத்தினோம். அப்போது அவரும் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இந்தியா கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பது நமது நாட்டின் மற்ற மாநிலங்களிலும் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு வழிவகை செய்துள்ளது.
அதேபோல், தமிழகத்தில் நடந்த முதல்கட்ட தேர்தல் வட மாநிலங்களிலும் இந்தியா கூட்டணிக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தி உள்ளது.
இதன்காரணமாக, ஜூன் 4-ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும். மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். பாஜக கூட்டணி 3-வது முறையாக மத்தியில் ஆட்சி அமைப்பது முற்றிலுமாக சாத்தியமில்லாத ஒன்று.
தேர்தல் பிரச்சாரத்தின்போது, பாஜகவினர் கடந்த 10 ஆண்டுகளில் அவர்கள் செய்த நலத்திட்டங்களை கூறி வாக்குச்சேகரிக்காமல் மத கலவரத்தை ஏற்படுத்தினர்.
பாஜகவினருக்கு நாட்டின் நலன் மீதும், நாட்டு மக்களின் நலன்மீதும் எந்தவித அக்கறையும் இல்லை. பாஜகவினர் மக்களிடையே மதரீதியான குழப்பங்களை ஏற்படுத்தி, அவர்களை பிளவுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். பாஜகவின் குறுக்குவழி அரசியலில் ஒருபோதும் வெற்றி பெறாது” என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹீரோவாக அறிமுகமாகும் சீரியல் நடிகர்… ஹீரோயின் யார் தெரியுமா…?!