முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய கருத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது தமிழக பி.ஜே.பி.
கேரள மாநிலம் திருச்சூரில் மலையாள மனோரமா நியூஸ் சார்பில் நடைபெற்ற ‘இந்தியா – 75’ என்ற கருத்தரங்கில், காணொலி மூலம் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஒரே நாடு ஒரே மொழி என்பவர்கள் நாட்டின் எதிரிகள்; இந்தியாவுக்கு ஒரு தேசிய மொழி என்பது சாத்தியமில்லை. இந்தியாவில் பல மொழி பேசும், பல கலாசாரத்தை பின்பற்றும் மக்கள் உள்ளனர்” எனப் பேசியிருந்தார். முதல்வரின் இந்தக் கருத்துக்கு பிஜேபி வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தன் முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் தமிழக பிஜேபி மாநில பொதுச் செயலாளர் இராம ஸ்ரீநிவாசன், “பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்திவரும் கருத்தை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவுசெய்திருக்கிறார். அந்தக் கருத்தை நான் வரவேற்கிறேன். ஒரே நாடு ஒரே மொழி என்பது எப்போதுமே பாஜகவின் நிலைப்பாடு அல்ல, மொழிகளின் பன்மியம் பாஜக கொண்டாடும் ஒரு கொள்கை. ஒரே ஒரு உலக மொழி வேண்டும் என்று பலரும் பேசியபோதுகூட உலக மொழி சாத்தியமல்ல.
இது மொழிகளின் உலகமாக இருக்க வேண்டும் என்று சொன்னது பாரதிய ஜனதா கட்சி. இந்தியாவில் ஒரே தேசிய மொழி சாத்தியமில்லை என்பது பாரதிய ஜனதா ஏற்றுக்கொண்ட கொள்கை. இந்தியத் தாய் பேசுகிற அத்தனை மொழிகளுமே தேசிய மொழிகள்தான். அதனால்தான் இந்தியாவின் ரூபாய் நோட்டுக்கு பின்பக்கம் 15 மொழிகளில் அச்சடிக்கப்பட்டிருக்கிறது. ரூபாய் நோட்டு உதாரணம் சொன்னால்தான் திமுகவினருக்கு புரியும் என்பதால் இதைச் சொல்கிறேன்” என்று கிண்டலும் அடித்துள்ள ஸ்ரீனிவாசன்,
“தமிழும் சமஸ்கிருதமும் ஹிந்தியும் மலையாளமும் குஜராத்தியும் ராஜஸ்தானியும் தெலுங்கும்கூட தேசிய மொழிகள்தான். அலுவல் மொழியாக மட்டுமே ஹிந்தி அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது, அதுவும்கூட நிர்வாக வசதிக்காகத்தான். பாஜகவைவிட்டு விலகிச் செல்கிறேன் என்பதை நிரூபிப்பதற்காக ஏதோ பேசி ஏதோ எழுதி பாஜகவுடன் நெருங்கி வருகிறீர்களே மிஸ்டர் ஸ்டாலின்?? உங்களை வரவேற்கிறேன்!!!” என அதில் பதிவிட்டுள்ளார்.
ஜெ.பிரகாஷ்