மொழிப்போர் இன்னும் முடியவில்லை : போராட்டம் அறிவித்த ஸ்டாலின்

Published On:

| By christopher

யுஜிசி புதிய வரைவு விதிகளுக்கு எதிராக திமுக மாணவர் அணி சார்பில் டெல்லியில் போராட்டம் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மொழிப்போர் தியாகிகள் தினமான இன்று (ஜனவரி 25) சென்னை மூலக்கொத்தளத்தில் நடராசன் – தாளமுத்து ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து வீர வணக்கம் செலுத்தினார்.

தொடர்ந்து திமுக சார்பில் சென்னை பல்லாவரத்தில் மாலை நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அன்னை தமிழை அழிக்க அந்நிய இந்தி..

அப்போது அவர், “தமிழை தமிழ் என்று சொல்லி அழைப்பதைவிட வேறு எதுவும் இன்பமாக இருக்க முடியாது. வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்.

மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து மற்றும் நடராஜன் ஆகியோர்களுக்கு சென்னை எழும்பூரில் சிலை அமைக்க வேண்டும் என்ற திருமாவளவனின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும்.

இன்றும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இந்தியை திணிக்கலாமா, சமஸ்கிருதத்தை திணிக்கலாமா என மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

அன்னை தமிழை அழிக்க அந்நிய இந்தி நுழைக்கப்படுகிறது. 1938ஆம் ஆண்டு மொழிப்போர் தொடங்கிய நேரத்தில் இந்தி திணிப்பை முதலில் கடுமையாக எதிர்த்தது பெரியார். நடராசனும், தாளமுத்துவும் உயிர்தியாகம் செய்தனர்.

அப்போது பெரியார், ’இந்தியை அல்ல, எத்தனை மொழிகளை திணித்தாலும் நம் தமிழ் அழிந்துவிடாது. ஆனால் தமிழரின் பண்பாடு அழிந்துபோகும்’ என மொழிப்போர் போராட்டத்தை பண்பாட்டு போராட்டமாக கொண்டுவந்தார் பெரியார்.

அதன் தொடர்ச்சியாக தான் 1948-ல் அண்ணா போராட்டத்தை நடத்தினார். அவர், மொழி ஆதிக்கம், நிர்வாக, பொருளாதார ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும் என்று சொன்னார்.

மூன்றாவதாக 1963-ல் கலைஞர் தலைமையில் இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழகம் முழுவதும் நடந்தது. இந்த போராட்டம் மூன்றாண்டு காலம் நீடித்தது. கலைஞர் பாளையங்கோட்டை தனி சிறையில் அடைக்கப்பட்டார். நூற்றுக்கணக்கானவர்கள் மொழிக்காக உயிர் துறந்தனர்.

தொடர்ந்து 1967ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகுதான் திமுக தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையை உருவாக்கினோம். தற்போது அதற்கு சிக்கலை ஏற்படுத்த தான் மும்மொழி கொள்கையை மத்திய அரசு கொண்டு வருகிறது.

முதலில் இந்தி… அப்புறம் சமஸ்கிருதம்…

தேசிய கல்வி கொள்கையை கொண்டு வருவதே இந்தி அல்லது சமஸ்கிருதத்தை திணிப்பதற்கு தான். இதனை எதிர்த்து தான் நாம் தொடர்ச்சியாக கடந்து வந்திருக்கிறோம்.

தொல் சமூகமான தமிழ் இனத்தில் ஆரிய மொழியை தமிழில் நேரடியாக திணிக்க முடியாமல் கல்வி என்ற பெயரில் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மூலமாக திணிக்க பாஜக முயற்சி நடக்கிறது.

தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழங்களுக்கு துணைவேந்தரை நியமிக்க அதிகாரம் கிடையாதா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதல்வர் ஏன் வேந்தராக இருக்க முடியாது?

யுஜிசி புதிய வரைவு விதிகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு முதன்முறையாக நாட்டில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தற்போது கேரள அரசும் நிறைவேற்றியுள்ளது.

தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய இயற்கை பேரிடர் நிதி, பள்ளிக்கல்வி நிதி மறுக்கப்படுகிறது. ஆனால் இந்தி திணிப்பு, மாநில உரிமை மீறல்கள் என மாநில அரசுக்கு எதிராக தொடர்ந்து செயலாற்றி வருகின்றனர்.

பாஜகவை பொறுத்தவரை குறுகில கால செயல்திட்டத்தை விட, நீண்ட கால செயல்திட்டத்தின்படி செயலாற்றுபவர்கள்.

இந்தியை அரியணையில் அமரவைத்த பிறகு சமஸ்கிருதத்தை கையில் எடுப்பதுதான் பா.ஜ.கவின் கொள்கை. தமிழ்நாட்டின் மீது அரசியல், பொருளாதார, சமூக பண்பாட்டு படையெடுப்பை மத்திய பா.ஜ.க அரசு நடத்திக் கொண்டிருக்கிறது.

இந்தி மொழியை எல்லா இடத்திலும் ஆதிக்க மனப்பான்மையுடன் திணிக்கின்றனர். தமிழ்நாட்டின் வளர்ச்சியை சிதைக்க நினைக்கின்றனர். அதுதான் அவர்கள் நோக்கம்.

வான் நோக்கி வளர்ந்து வரும் தமிழ்நாட்டை பார்த்து சில சக்திகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ள திராவிட நல் திருநாடும் என்ற வார்த்தையைக் கூட அவர்களால் பாட முடியவில்லை.

தமிழ்நாடு அமைதியான மாநிலமாக உள்ளது. அதனால் தான் தேசிய அளவை விட அதிகளவில் பணிபுரியும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளாது. முதலீடுகள் குவிந்து கொண்டிருக்கிறது.

டெல்லியில் திமுக போராட்டம்!

மொழிப்போர் இன்னும் முடியவில்லை. இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மீண்டும் மும்மொழிக் கொள்கையை புதிய கல்விக் கொள்கை மூலம் திணிக்க முயற்சி நடைபெறுகிறது.

மொழிப்போராட்டத்தின் மையப்புள்ளியாக திமுக இருந்தது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பலர் தங்களது உயிர்களை நீத்தனர். உயிர்நீத்த தியாகிகள்தான் தமிழ்த்தாயின் மூத்த பிள்ளைகள். அதன் மூலம் தமிழகத்தை இருமொழிக் கொள்கை கொண்ட மாநிலமாக பாதுகாத்தோம். தொடர்ந்து பாதுகாப்போம்.

மொழிப்போர் இன்னும் முடியவில்லை எனவும், இந்தி, சமஸ்கிருத திணிப்பு இன்றும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. எனினும் மொழிப் போராட்டத்தின் மையமாக திமுக இருந்து வருகிறது. யுஜிசி புதிய வரைவு விதிகளுக்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து திமுக மாணவர் அணி சார்பில் டெல்லியில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

2026 தேர்தல் என்பது திமுக மற்றும் அதிமுகவுக்கும் இடையே நடக்கும் தேர்தல்தான். கலைஞர் மறைவுக்கு பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் திமுக வெற்றிபெற்றுள்ளது. திமுகவின் வெற்றிச் சரித்திரம் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும்” என்று ஸ்டாலின் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel