காவிரி விவகாரத்தில் திமுக இரட்டை நிலைப்பாடு: வானதி சீனிவாசன்

Published On:

| By Selvam

bjp walk out assembly session

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் முன்மொழியப்பட்ட தனித்தீர்மானம் மக்களை ஏமாற்றுவதாக உள்ளதால் வெளிநடப்பு செய்ததாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (அக்டோபர் 9) துவங்கியது. கூட்டத்தொடர் துவங்கியதும் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு உரிய நீரை பெற்றுத்தர கர்நாடக அரசுக்கு  உத்தரவிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தை எதிர்த்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன்,

“தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்துள்ளார். தமிழகத்திற்கு தேவையான காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விட மத்திய அரசை வலியுறுத்துவதாக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

கர்நாடக ஆளும் காங்கிரஸ் அரசுடன் திமுக கூட்டணி அமைத்துள்ளது. கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் செல்கிறார். பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டங்களில் பங்கேற்கிறார்.

ஆனால் அங்கிருக்கக்கூடிய கூட்டணி கட்சிகளை வலியுறுத்தி காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்றுக்கொடுக்க முடியாமலும் தன்னுடைய இயலாமையை மறைப்பதற்காகவும் தனித்தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

அணை பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் திமுக எதிர்த்துவிட்டு கர்நாடக அரசை வலியுறுத்தி மத்திய அரசு நீரை பெற்றுத்தர வேண்டும் என்பது திமுகவின் இரட்டை நிலைப்பாடாகும்.

டெல்டா விவசாயிகளின் நலனுக்காக பாஜக என்றும் துணை நிற்கும். ஐந்து வருடம் கர்நாடகாவில் பாஜக ஆட்சியிலிருந்த போது காவிரி பிரச்சனை வரவில்லை.

மக்களை ஏமாற்றுகின்ற தீர்மானமாக இதை பார்ப்பதினால் தமிழக நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சட்டமன்றத்தில் தெரிவித்துவிட்டு வெளிநடப்பு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்

காவிரி விவகாரம்: சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்!

துணை முதல்வர்  வாகனம் மீது தக்காளி வீசிய விவசாயிகள்: காரணம் என்ன?

பட்டாசு கடை வெடித்து சிதறியதில் 9 பேர் பலி!

5 மாநில தேர்தல்கள் எப்போது? – வெளியான அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share