இந்தியாவின் தலைநகர் டெல்லியின் சட்டமன்றத் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் நிலையில்… பிரச்சாரம் சூடுபிடித்திருக்கிறது.
தேர்தல் ஆணையம் இன்னும் டெல்லி சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவிக்காவிட்டாலும், பிப்ரவரி நடுப் பகுதியில் சட்டமன்றத் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2015, 2020 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது முறையும் டெல்லியை கைப்பற்ற தீவிரமாக இருக்கிறது. இதற்காக மொத்தமுள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் அறிவித்துவிட்டார்.
காங்கிரஸ் கட்சி இது வரை 47 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கிவிட்டது. பாரதிய ஜனதா கட்சி 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற தீவிரத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையில் சமூக வலைத்தளங்கள் மூலமும் அறிக்கைகள் மூலமும் மோதல்கள் நடந்து வருகின்றன.
சமீபத்தில் கோவில் பூசாரிகளுக்கு மாத ஊதியம் 18000 வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். இதை பாஜக விமர்சித்து, ‘தேர்தல் கால இந்து’ என கெஜ்ரிவாலை கிண்டல் செய்தது.
இந்நிலையில் பாஜகவுக்கு பதில் அளிக்கும் விதமாக ஆம் ஆத்மி வெளியிட்டு இருக்கும் வீடியோ, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் லேட்டஸ்ட்டாக நடித்து வெளிவந்த கோட் படத்தை அடிப்படையாக க் கொண்டிருக்கிறது. இது டெல்லியில் இருக்கும் தமிழர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
அரவிந்த் கெஜ்ரிவால் ஸ்டைலாக நடந்து வருகிறார். ‘GOAT தளபதி… இளைய தளபதி’ என்ற தமிழ் வார்த்தைகள் இசையோடு ஒலிக்கின்றன.
இந்த போஸ்டர் வீடியோவில் கிரேட் டெஸ்ட் ஆப் ஆல் டைம்ஸ் ‘கோட்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி தேர்தல் களத்தில் விஜயின் கன்டென்ட் பயன்படுத்தப்படுவது சுவாரசியத்தை கூட்டியிருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேந்தன்