சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்யக் கோரி, தமிழக பாஜக சார்பில் இன்று (செப்டம்பர் 11) பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதன் ஒரு பகுதியாக இன்று சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை நோக்கி முற்றுகை போராட்டத்துக்கு அண்ணாமலை உள்ளிட்டோர் செல்ல அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதன் பின் ஆர்பாட்டம் நடத்தினார்கள்.
திமுகவை சரமாரியாக தாக்கிப் பேசினார் அண்ணாமலை. மேடையில் அண்ணாமலைக்கு அருகே பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், கரு. நாகராஜன், சமீபத்தில் மீண்டும் பாஜகவில் சேர்ந்த மைத்ரேயன் ஆகியோர் நின்றிருந்தனர். அண்ணாமலைக்குப் பின்னால் துணைத் தலைவர் சக்கரவர்த்தி மற்றும் அவருக்கு அருகே சற்று பின்னால் மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி நின்றிருந்தார்.
மேடைக்கு அருகே நின்றிருந்த வி.பி. துரைசாமி ஆதரவாளர்கள், “பாருங்க திமுகவுல எங்க ஆளு துணைப் பொதுச் செயலாளராக இருந்தாரு. எம்பியா இருந்தாரு. கலைஞர்கிட்ட பக்கத்துல நின்னு பேசுவாரு. ஆனா இங்க பாருங்க. இந்த மேடையே சனாதனம் பத்தி திமுக பேசினதை கண்டிக்கிற மேடை. ஆனா அப்படிப்பட்ட மேடையில பட்டியல் இனத்தைச் சேர்ந்த வி.பி. துரைசாமிய முன்னால நிக்க வச்சு அழகு பாத்திருக்க வேணாமா? இப்படி பின்னாடி மூணாவது வரிசையில நிக்க வச்சிருக்காங்க. இதைத்தானே சனாதனம்னு திமுககாரங்க சொல்றாங்க. இதை இவங்களும் கன்ஃபார்ம் பண்றாங்க.
ஏற்கனவே ஒரு ஆர்பாட்டத்துல வி.பி. துரைசாமி பேசிக்கிட்டு இருந்தப்ப அண்ணாமலை மேடைக்கு வந்துட்டாருனு டக்குனு அவர்கிட்டேர்ந்து மைக்கை பிடுங்கிட்டாங்க ஞாபகம் இருக்கா? இப்ப வரைக்கும் அவரை அவமதிச்சுக்கிட்டேதான் இருக்காங்க” என்று புலம்பித் தள்ளினார்கள்.
மேலும், “சென்னை பெருங்கோட்டத்துக்கு உட்பட்ட ஏழு மாவட்டங்களில் இருந்து ஒரு மாவட்டத்துக்கு 500 பேர்னா கூட 3500 பேர் வந்திருக்கணும். ஆனா மாநிலத் தலைவர் கலந்துக்குற ஆர்பாட்டத்துக்கு ஆயிரம் பேருக்கு மேலதான் வந்திருந்தாங்க” என்ற புலம்பலும் பாஜக நிர்வாகிகளிடமே கேட்டது.
-வேந்தன்
இல்லம் தோறும் ரகுமான்: அப்டேட் குமாரு
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் என்ன சாதிக்கப்போகிறீர்கள்? – உதயநிதி கேள்வி!
வேற ஏதாவது டிரை பன்னுங்க..