டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்கு நன்றி சொல்லும் பாஜக… வடக்கில் இருந்து வந்த ரிப்போர்ட்- ஸ்டாலின் டென்ஷன்!
வைஃபை ஆன் செய்ததும் சனாதன ஒழிப்பு பற்றிய உதயநிதி பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் சமூகத் தள நோட்டிபிகேஷன்களில் வந்து குவிந்தன.
அவற்றை ஒரு முறை பார்த்து முடித்துவிட்டு வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்… ‘சனாதனம் என்பது கொசுவை போல, டெங்குவை போல, மலேரியாவை போல, கொரோனாவை போல எதிர்க்கப்பட வேண்டியதில்லை ஒழிக்கப்பட வேண்டியது’ என்று கூறினார். இதை மையமாக வைத்து தான் கடந்த மூன்று நாட்களாக இந்திய அரசியல் சமூக தளங்களில் விவாதம் நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உதயநிதியின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து பேசினார். சனாதனம் மக்களின் இதயத்தை ஆள்கிறது என்று குறிப்பிட்ட அமித்ஷா, சனாதனத்தை பற்றி பேசி வாக்கு வங்கி அரசியலில் திமுக, காங்கிரஸ் ஈடுபடுகிறது என்று குற்றம் சாட்டினார்.
இதன் தொடர்ச்சியாக இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கிற பாஜக மத்திய அமைச்சர்கள் அல்லது பாஜக மாநில முதல்வர்கள் உதயநிதியின் பேச்சை பற்றி குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சனாதனம் பற்றிய பேச்சுக்கு காங்கிரஸ், திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று செப்டம்பர் 4 ஆம் தேதி இந்தியா ஸ்பீக்கிங் என்ற பெயரில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆன ஸ்டாலின் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாகவும் பாஜகவுக்கு எதிராகவும் ஆடியோ பிரச்சாரத்தை கையில் எடுத்து இருக்கிறார்.
நேற்று இரவு விடிய விடிய திமுக ஐடி வின் தொழில்நுட்ப பணியாளர்கள் இதற்காக வேலை செய்த நிலையில்… இன்று சமூகத்தளங்களில் முதல்வரின் ஆடியோ பிரச்சாரத்தை விட உதயநிதியின் சனாதன ஒழிப்பு பற்றிய விவாதமே அதிகமாக இருந்தது.
சிஏ ஜி அறிக்கையில் குறிப்பிட்ட 7.5 லட்சம் கோடி ரூபாய் ஊழல் மற்றும் அதானி- மோடி பற்றி ராகுல் காந்தி கிளப்பிய புதிய பூகம்பம் இவை எல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டு உதயநிதியின் சனாதன ஒழிப்பு பற்றிய விவாதமும் அதற்கு எதிரான கண்டனங்களுமே வட இந்திய சமூக தளங்களை ஆக்கிரமித்துள்ளன. டெல்லியில் இருக்கும் பத்திரிகையாளர்கள் சிலரிடம் பேசிய போது, ‘உதயநிதி சனாதன ஒழிப்பு பற்றி பேசி எங்களுக்கு ஒரு இக்கட்டான தருணத்தில் நல்லதொரு ஆயுதத்தை கொடுத்து விட்டார் என்று வட இந்தியாவில் பாஜகவினர் தெரிவித்து வருகிறார்கள்.
இதற்காகவே சிஸ்டமேட்டிக்காக அவர்கள் உதயநிதியின் சனாதன ஒழிப்பு பற்றி அனைத்து பாஜக தலைவர்களையும் பேச வைத்து அதை ஊடக விவாதங்களில் மையப் பொருளாக மாற்றி வருகிறார்கள். வட இந்திய அரசியல் களம் வேறு தமிழ்நாட்டின் அரசியல் களம் வேறு. தமிழ்நாட்டில் இதனால் திமுகவுக்கு அரசியல் ரீதியாக இழப்பு ஏற்படப் போவதில்லை. ஆனால் வட இந்தியாவில் சனாதன எதிர்ப்பை எதிர்க்கட்சிகள் தீவிரமாக காட்டாத நிலையில் உதயநிதியின் கருத்து இந்தியா கூட்டணிக்குள் ஒரு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி பேசிய பேச்சுக்கு சிவசேனா, சரத் பவார் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்ததை நினைவில் கொள்ளவேண்டும்’ என்கிறார்கள்.
இந்தப் பின்னணியில் தான் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே. சி. வேணுகோபால் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து, ‘காங்கிரஸ் கட்சிக்கு எல்லா மதங்களும் சமமானவையே. நாங்கள் அனைவரும் உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் மதிக்கிறோம். அதே நேரம் அரசியல் கட்சிகளுக்கு தங்களது பார்வைகளை வெளியிடும் உரிமை உண்டு’ என்று ஒரு விளக்கத்தை கொடுத்தார்.
இதன் பிறகு இன்று மாலை திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதலமைச்சரும், இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கத்தினருமான மம்தா பானர்ஜி வெளியிட்ட கருத்து தான் திமுக தலைவர் ஸ்டாலின் வரை யோசிக்க வைத்திருக்கிறது.
‘நாங்கள் சனாதன தர்மத்தை மதிக்கிறோம். நாங்கள் கோயிலுக்கும் செல்கிறோம், மசூதிக்கும் செல்கிறோம், தேவாலயங்களுக்கும் செல்கிறோம். எங்களுடைய ஆட்சியிலே புரோகிதர்களுக்கு ஓய்வூதியம் தருகிறோம். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இங்கே எந்த ஒரு பிரிவினரையும் புண்படுத்த வேண்டாம். தமிழ்நாடு எனக்கு பிடித்தமான மாநிலம். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம் என்று நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்’ என்று மம்தா பானர்ஜியும் வெளிப்படையாக கருத்து தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் ஸ்டாலினுடைய வட இந்திய நண்பர்களும் அவருக்கு உதயநிதியின் சனாதன ஒழிப்பு பற்றிய ஆவேசமான பேச்சு வட இந்தியாவில், ‘இந்தியா’ கூட்டணிக்கு எதிராக ஒரு ஆயுதத்தை பாஜக கையில் கொடுக்கும் அரசியல் சூழலை ஏற்படுத்தி விட்டது என்று தெரிவித்துள்ளார்கள். இதையடுத்து இன்று மாலை முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவின் சீனியர்களான துரைமுருகன் உள்ளிட்டோருடன் இந்த விவகாரம் பற்றி விவாதித்திருக்கிறார்.
அதே நேரம் இன்று இரவு தூத்துக்குடியில் பேசிய உதயநிதி ஸ்டாலின்… ‘சனாதனத்தை பற்றி பேசியதற்காக உத்தர பிரதசேத்தில் ஒரு சாமியார் – பெயர் பரமஹன்ஸ ஆச்சார்யா – என் தலையை சீவினால் 10 கோடி ரூபாய் தருகிறேன் என்று அறிவித்துள்ளார். 10 ரூபாய் சீப்பு இருந்தால் போதும், நானே என் தலையை சீவிக்கொள்வேன். இதெல்லாம் எங்களுக்கு புதிதல்ல. இப்படித்தான் ஒரு வடநாட்டுச் சாமியார் கலைஞரின் தலையை சீவினால் 1 கோடி என்று விலை வைத்தார்.
நானே என் தலையை சீவிக்கொள்ள முடியவில்லை. அவர் வந்து எப்படி சீவுவார் என்று கலைஞர் கேட்டார். ஆகவே, இந்த மிரட்டலுக்கெல்லாம் பயப்படுகிறவர்கள் நாங்கள் இல்லை. தமிழுக்காக தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த கலைஞரின் பேரன் நான். இந்த மிரட்டலுக்கு எல்லாம் நான் கவலைப்பட மாட்டேன் பயப்பட மாட்டேன்’ என்று பேசியிருக்கிறார்.
உதயநிதியின் இந்தத் தொடர் அட்டாக் தமிழ்நாட்டில் அவருக்கு ஸ்கோர் செய்து தரும். அதேநேரம் தென்னிந்தியாவை தாண்டி வட இந்தியாவில் ‘இந்தியா’ கூட்டணி மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது பற்றி கிடைத்த தகவல்களால் ஸ்டாலின் கொஞ்சம் டென்ஷனோடுதான் இருக்கிறார்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
குஷ்பு கோவில்ல ஒரு அர்ச்சனை: அப்டேட் குமாரு