அண்ணாமலை -தேஜஸ்வி விமான கதவு திறப்பு டேஞ்சர் : நடந்தது இதுதான்!

அரசியல்

சென்னையிலிருந்து கடந்த டிசம்பர் 10ஆம் தேதி திருச்சி சென்ற இண்டிகோ விமானத்தில் திறக்கப்பட்ட எமர்ஜென்சி கதவு விவகாரம் தற்போது தேசிய அளவில் பேசு பொருளாகியுள்ளது.

கடந்த டிசம்பர் 10ஆம் தேதி இண்டிகோ நிறுவனத்தின் 6E 7339 விமானம் சென்னையிலிருந்து திருச்சி நோக்கி கிளம்பியது. அன்றைய தினம் 10.05 மணிக்கு ரன்வேயில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே நிறுத்தப்பட்டு பயணிகள் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டு பேருந்தில் அமர வைக்கப்பட்டனர்.

காரணம், விமானத்தின் வலது பக்க எமர்ஜென்சி கதவு திறக்கப்பட்டதால் விமானத்துக்குள் இருந்த காற்று வெளியேறியிருக்கிறது. இதனால் விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு, பொறியாளர்கள் குழு வந்து சோதனை செய்தனர்.

எமர்ஜென்சி கதவு திறந்ததனால் விமானத்தில் பிரஷர் சரியாக இருக்கிறதா? மக்கள் பயணிக்கும் அளவுக்கு அனைத்தும் பாதுகாப்பாக இருக்கிறதா? என சோதனை செய்து சரி செய்தனர்.

பிறகு எல்லாம் சரியாக இருக்கிறது என உறுதி செய்த பின்னர் பேருந்தில் அமரவைக்கப்பட்ட பயணிகள் மீண்டும் விமானத்தில் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதன்காரணமாக காலை 10.05 மணிக்குப் புறப்பட வேண்டிய விமானம் இரண்டு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. சென்னையில் இருந்து விமானத்தில் திருச்சி செல்ல ஒரு மணி நேரம் 4 நிமிடங்கள் ஆகும்.

அன்றைய தினம் மதியம் 12.17 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பிய இண்டிகோ விமானம் 1.21 மணிக்கு திருச்சி சென்றடைந்தது.

BJP Tejasvi Surya annamalai indigo emergency exit dgca order

இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் எமர்ஜென்சி கதவு திறந்தது பற்றி விசாரணை நடத்த விமான போக்குவரத்து ஆணையரகம் (டிஜிசிஏ) நேற்று (ஜனவரி 17) உத்தரவிட்டது.

பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியான ஒரு விவகாரத்தில் இவ்வளவு தாமதமாக டிஜிசிஏ நடவடிக்கை எடுத்தது தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எமர்ஜென்சி கதவை யார் திறந்தது என இதுவரை விமான போக்குவரத்து ஆணையரகமோ, இண்டிகோ நிறுவனமோ தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் விமானத்தில் எமர்ஜென்சி கதவைத் திறந்தது பெங்களூர் தெற்கு தொகுதி எம்.பி. தேஜஸ்வி சூர்யா என்றும் அவர் அருகில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடனிருந்தார் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அன்றைய தினம் விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த 33 வயது பயணி ஒருவர் கூறுகையில், “இந்த நிகழ்வின் போது சென்னையில் மாண்டஸ் புயல் தாக்கம் இருந்தது. இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக விமானம் புறப்பட ஏற்கனவே 40 நிமிடங்கள் தாமதமானது.

விமானத்தில் 70 பயணிகள் அமர்ந்திருந்தோம். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா ஆகியோர் விமானத்திற்குள் இருந்தனர்.
அவர்கள் வலதுபுறத்தில் உள்ள முதல் வரிசையில் எமர்ஜென்சி கதவு அருகே உள்ள இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்.

எமர்ஜென்சி கதவு அருகில் அமர்ந்திருப்பவர்களுக்கான சிறப்பு விளக்கத்தை கேபின் க்ரூ குழுவினர் வழங்கிக் கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில், எம்பி தேஜஸ்வி சூர்யா லிவரில் கையை வைத்து கீழே இழுத்தார். உடனடியாக எமர்ஜென்சி கதவு திறந்தது. அப்போது விமானம் டாக்ஸிங்கில் (வானில் புறப்படுவதற்கு முன் அல்லது வானிலிருந்து இறங்கிய பின் தரையில் மெதுவாகச் செல்வது) சென்று கொண்டிருந்தது” என்று தெரிவிக்கிறார்.

மற்றொரு பயணி கூறுகையில், “பேருந்தில் நாங்கள் இரண்டு மணி நேரம் அமரவைக்கப்பட்டிருந்தோம். அப்போது தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கடிதம் எழுதி விமான ஊழியர்களிடம் கொடுத்தார். அண்ணாமலை வலியுறுத்தியதன் பேரில் அவர் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டார். இதுவே சாதாரண பயணி ஒருவர் செய்திருந்தால் சும்மா இருந்திருப்பார்களா?” என கேள்வி எழுப்புகிறார்.

விமானத்தில் பயணித்த திமுக செய்தித்தொடர்பாளர் அரசகுமார், “விமானத்தின் எமர்ஜென்சி கதவில் காற்று கசிவு ஏற்பட்டதாக விமானத்தில் இருந்த பயணிகளிடம் காரணம் கூறப்பட்டது. விமானத்தில் அண்ணாமலையும் தேஜஸ்வி சூர்யாவும் இருந்ததை பார்த்தேன். ஆனால் கதவை யார் திறந்தார் என்று தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

அதேசமயத்தில் இண்டிகோ விமானமோ, “இது தவறுதலாக நடந்துவிட்டது” என்று கூறியுள்ளது.

“யாரோ ஒருவர் அவசரகால கதவை திறந்துவிட்டார். அப்போது விமான ஊழியர்கள் விரைந்து செயல்பட்டனர். விமானம் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு புறப்படத் தயாரானது.

கதவைத் திறந்த பயணி, சக பயணிகளிடம் மன்னிப்பு கேட்டார். எழுத்துப்பூர்வமாகவும் மன்னிப்பு கடிதம் கொடுத்தார். பின்னர் அவர் வேறு இருக்கைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அந்த பயணி யார் என்பதைத் தெரிவிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளது.

தற்போது தேசிய அளவில் இந்த விவகாரம் பேசப்படும் நிலையில், ஒரு மாதம் 7 நாட்களுக்கு பிறகு விசாரணை நடத்த டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பில் எந்த சமசரமும் கிடையாது என்றும் கூறியுள்ளது.

BJP Tejasvi Surya annamalai indigo emergency exit dgca order

எதிர்க்கட்சிகள் கேள்வி!

இந்த சம்பவம் தொடர்பாக் கடந்த டிசம்பர் 29ஆம் தேதியே தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியிருந்தார்.

அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “கடந்த 10ஆம் தேதி ‘போட்டோஷாப்’ கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும் போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் ‘எமர்ஜென்சி’ கதவைத் திறந்து விளையாடியிருக்கிறார்கள்.

விதிமுறைகளின்படி பயணிகள் விமானத்திலிருந்து இறக்கி மீண்டும் சோதனை செய்யப்பட்டு நோகடிக்கப்பட்டிருக்கிறார்கள். மன்னிப்பு கடிதம் எழுதுவதே பரம்பரை வழக்கம் என்பதால், அன்றும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். ஊடகங்களில் இந்தச் செய்தி ஏன் வரவில்லை” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதுபோன்று, தேஜஸ்வியைக் குழந்தை என்று விமர்சித்துள்ள கர்நாடக காங்கிரஸ், “குழந்தைகள் விளையாடுவது போன்ற ஒரு செயலை தேஜஸ்வி விமானத்தில் செய்துள்ளார். பயணிகளின் உயிருடன் விளையாடுவதா?,

விமானம் நடுவானில் பறந்த பிறகு திறந்திருந்தால் என்ன ஆகியிருக்கும். அந்த விபத்துக்கு யார் பொறுப்பேற்பது. தேஜஸ்விதான் எமர்ஜென்சி கதவைத் திறந்தார் என்பது ஏன் மறைக்கப்படுகிறது? ஏன் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை” என்று கேள்வி எழுப்பியுள்ளது.

டிஜிசிஏ உத்தரவை தொடர்ந்து மீண்டும் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “2 ஆர்வக்கோளாறுகள் விமானத்தின் எமர்ஜென்சி கதவைத் திறந்து விளையாடியது பற்றி டிசம்பர் 29 அன்று நான் கேள்வியெழுப்பி இருந்தேன்.

இன்று (நேற்று) டிஜிசிஏ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு வாட்ச் கட்டுவது தேசப்பற்றென உருட்டிய பொய்யர், சுதந்திர காற்றைச் சுவாசிக்கக் கதவைத் திறந்தேன் என உருட்டாமல் இருந்தால் சரி” என்று விமர்சித்துள்ளார்.

முந்தைய நிகழ்வுகள்!

BJP Tejasvi Surya annamalai indigo emergency exit dgca order

விமான விதிகள், 1937 இன் பிரிவு 22(பி), “விமானத்தில் உள்ள விமானி அல்லது விமானியின் சார்பாக ஒரு குழுவினரால் வழங்கப்பட்ட சட்டப்பூர்வ அறிவுறுத்தலைப் பின்பற்ற எந்த நபரும் மறுக்கக்கூடாது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறுகிறது. எமர்ஜென்சி கதவை திறந்ததன் மூலம் இவ்விதி மீறப்பட்டுள்ளது.

முந்தைய காலங்களில் இவ்வாறு விதி மீறப்பட்டதால், அதாவது எமர்ஜென்சி கதவை திறப்பது உள்ளிட்ட பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் வகையில் நடந்துகொண்டதால் காவல்துறையில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் 2019ல், பெங்களூரு-லக்னோ விமானத்தில் அவசரக்கால வாயில் அருகே அமர்ந்திருந்த முதல் வகுப்பு விமானப் பயணி ஒருவர் அவசர கால கதவை, ஜன்னலென்று தவறாகப் புரிந்துகொண்டு திறந்துவிட்டார்.

இதனால், அப்பயணி விமானத்திலிருந்து இறக்கப்பட்டு கெம்பேகவுடா விமான நிலைய காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கடந்த பிப்ரவரி 2017ல், மும்பையிலிருந்து சண்டிகருக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில் பயணித்த ஒருவர், புறப்படுவதற்கு முன் விமானத்தின் எமர்ஜென்சி கதவைத் திறந்துவிட்டார்.

இதையடுத்து இண்டிகோ ஏர்லைன்ஸ் அளித்த புகாரின் அடிப்படையில் மற்ற பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதாக அவர் கைது செய்யப்பட்டார்.

இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 336 (பயணிகளின் உயிர் அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்) மற்றும் விமான விதிகளின் பிரிவு 23(1)(பி) (தாக்குதல் மற்றும் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவித்தல் அல்லது பாதிக்கக்கூடிய பிற செயல்கள்) பிரிவின் கீழ் பயணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

டிசம்பர் 10ஆம் தேதி சென்னையில் நடந்த சம்பவம் குறித்து முன்னாள் விமான பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், “இது கடுமையான விதிமீறலாகும். உடனே டிஜிசிஏவிடம் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். பயணி மன்னிப்பு கேட்டதாலும், அந்த பயணி விஐபி என்பதாலும் இது மறைக்கப்பட வேண்டிய விஷயமல்ல” என்று தெரிவித்துள்ளனர்.

உண்மையான தகவல் என்னவென்று விமான போக்குவரத்து ஆணையரகம் தான் உரிய விசாரணை நடத்தி கண்டுபிடிக்க வேண்டும்.

BJP Tejasvi Surya annamalai indigo emergency exit dgca order

இந்த சம்பவம் நடந்த டிசம்பர் 10ஆம் தேதி திருச்சியில் பாஜக இளைஞர் அணி மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ளதான் தேஜஸ்வி யாதவும், அண்ணாமலையும் திருச்சி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

கோலி அடித்த சதம்: ரசிகர் செய்த சம்பவம்!

தமிழ்நாடு சர்ச்சை: ஆளுநர் அடித்த பல்டி!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.