எம்பி தேர்தல்: பாஜக குறி வைக்கும்  எட்டு தொகுதிகள் இதோ!

அரசியல்

மக்களவைத் தேர்தல் 2024 இல் வர வேண்டியிருக்கிறது.   குஜராத், இமாச்சல் பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒருவேளை பாஜகவுக்கு சாதகமாக வரும் பட்சத்தில் இந்த சூட்டோடு சூடாக 2023 ஆம் ஆண்டே மக்களவைத் தேர்தலை நடத்தி முடிக்கவும் திட்டமிட்டிருக்கிறது பாஜக.

அந்த வகையில் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் எம்பி தேர்தலுக்கான வேலைகளைத் தொடங்கிவிட்டது பாஜக. தமிழ்நாட்டிலும் அதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன.

நவம்பர் 12 ஆம் தேதி சென்னையில்  பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில நிர்வாகிகளோடு முக்கிய ஆலோசனை நடத்திய அமித் ஷா,  ‘இதே திசையில் இன்னும் வேகமாக செல்லுங்கள்’ என்று பாஜகவினருக்கு பூஸ்ட் கொடுத்துள்ளார்.

மேலும் தமிழகத்துக்கு மத்திய அமைச்சர்களை அதிகமாக பிரதமர் மோடி அனுப்பிக் கொண்டிருக்கிறார். மத்திய அமைச்சர்கள் வருகை மூலமாக தமிழ்நாட்டுக்கு மோடி அரசு செய்து வரும் மக்கள் நலத்திட்டங்களை  தமிழ்நாடு மக்களுக்கு எடுத்துச் செல்லுங்கள்’ என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இதற்குப் பின்னால் பாஜகவின் பக்கா திட்டம் இருக்கிறது. அதாவது வரும் எம்பி தேர்தலில் பாஜக போட்டியிட விரும்பும் தொகுதிகளுக்குத்தான் மத்திய அமைச்சர்கள் அதிகமாக அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ‘அமித் ஷா சென்னை வந்து சென்றபிறகு வரும் எம்பி தேர்தலில் பாஜக போட்டியிடத் தயாராகும் தொகுதிகள் பற்றிய முக்கிய தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து மின்னம்பலத்திடம் சில முக்கிய தகவல்களை பகிர்ந்துகொண்டனர் பாஜக முக்கிய நிர்வாகிகள்.

“தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று அண்மையில் நாமக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. இதுகுறித்து கருத்து தெரிவித்த அண்ணாமலை, ‘அதிமுகதான் பெரிய கட்சி. அவர்கள் சொல்வதில் தவறில்லை’ என்று கூறினார். சில மாதங்களுக்கு முன்பு வரை ‘பாஜக தலைமையில்தான் கூட்டணி’ என்றெல்லாம் சொல்லி வந்தது பாஜக.

ஆனால் இப்போது எதார்த்தம் உணர்ந்து  வரும் எம்பி தேர்தலில் அறுவடை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு சில வியூகங்களை அமைத்திருக்கிறோம்.
அதாவது தமிழ்நாட்டில் எட்டு எம்பி தொகுதிகளை மட்டும் தேர்ந்தெடுத்து அங்கே பாஜக வெற்றிபெறுவதற்கான வேலைகளை தீவிரமாக செய்து வருகிறோம்.

அந்த எட்டு தொகுதிகள் எவையென்றால் தென் சென்னை, வேலூர், ஈரோடு, கோவை, சிவகங்கை. ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகள்தான்.
இந்த எட்டு தொகுதிகளில் மட்டும் தீவிர கவனம் செலுத்தும்படி தேசியத் தலைமையிடம் இருந்து மாநிலத் தலைமைக்கு தகவல் வந்துள்ளது.

ஏற்கனவே 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.  கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கோவை ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது. இந்த நிலையில் வரும் எம்பி தேர்தலில் எட்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெறுவதை இலக்காக வைத்துள்ளது பாஜக.

பாஜக பத்து தொகுதிகள் வரை அதிமுக கூட்டணியில் கேட்டுப் பெறும். ஆனபோதும் தீவிர கவனம் செலுத்துவது இந்த எட்டு எம்பி தொகுதிகளில்தான்.  

தென் சென்னை தொகுதியில் 1998 இல் ஜனா கிருஷ்ணமூர்த்தி பாஜக சார்பில் போட்டியிட்டு இரண்டாம் இடம் வந்துள்ளார். வேலூரில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் போட்டியிட்ட புதிய நீதிக் கட்சித் தலைவர்  ஏ.சி. சண்முகம்  8,500 வாக்கு வித்தியாசத்தில்தான் தோல்வியைத் தழுவினார். அதேபோல  கன்னியாகுமரி, கோவை தொகுதிகள் பாஜகவுக்கு பலமுள்ள தொகுதிகளாக அறியப்பட்டவை. 

இது தவிர சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய தொகுதிகளையும் இம்முறை பாஜக குறி வைத்துள்ளது.  இந்த தொகுதிகளில் உள்ள தேவேந்திர குல வேளாளர்கள் வாக்குகளையும்  அதிமுக, அமமுக  மூலமாக முக்குலத்தோர் வாக்குகளையும் பெற  விரும்புகிற்து பாஜக.

அதேநேரம் சிவகங்கை தொகுதியில் பாஜக கூட்டணியில் அமமுக பொதுச் செயலாளர்  டிடிவி தினகரனும் கண் வைத்திருக்கிறார் என்கிறார்கள்.  ஒருவேளை பாஜக அதிமுக கூட்டணியில் அமமுகவும் இடம்பெற்று சிவகங்கை தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட்டால் அதற்கு பதில் தங்களுக்கு சாதகமான வேறு ஒரு தொகுதியை பாஜக தேர்வு செய்யும்” என்கிறார்கள்.

அமித் ஷா வந்து சென்றதில் இருந்து இந்த எட்டு தொகுதிகள் குறித்து கமலாலயத்தின் சீனியர்கள் மத்தியில் சீரியசாக பேசப்படுகிறது.

ஆரா

டி20: பாகிஸ்தான் தோல்வி-அக்தருக்கு ஷமி கொடுத்த பஞ்ச்!

கைலாசாவில் வேலை வாய்ப்பா? விசாரிக்கிறது போலீஸ்

+1
0
+1
4
+1
1
+1
1
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.