annamalai left to Delhi

இன்று டெல்லி புறப்படுகிறார் அண்ணாமலை

அரசியல்

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை இன்று (அக்டோபர் 1) டெல்லி செல்கிறார்.

அதிமுக தலைவர்களான அண்ணா, ஜெயலலிதா குறித்து அண்ணாமலை தொடர்ந்து அவதூறான தகவல்களை பேசி வந்தார். தற்போதைய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.

இதையடுத்து கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார். 24 ஆம் தேதி அதை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

25ஆம் தேதி கூடிய அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுகிறது என்ற தீர்மானம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இவ்வளவு நடந்த பிறகும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவெடுக்கும் என்று மட்டுமே கூறினார்.

இந்த நிலையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு கோவை விமான நிலையத்திலிருந்து விஸ்தாரா விமானத்தில் அண்ணாமலை டெல்லி புறப்படுவதாக தமிழக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணியை விரிவு படுத்த வேண்டும் என்று பாஜகவின் மாநில தலைவர்களுக்கு தேசிய தலைமை உத்தரவிட்டிருந்த நிலையில்…

தேஜகூவின் இரண்டாவது பெரிய கட்சியான அதிமுக வெளியேறியதால், பிரதமர் மோடி வரையில் வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது.

எனினும்… இந்த முடிவு இறுதியானது என்றும்,  2024 மக்களவைத் தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல் எதிலும் அதிமுக பாஜக கூட்டணி வராது என்றும் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே. பி. முனுசாமி மீண்டும் மீண்டும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை பலவீனப்படுத்தியதாக அண்ணாமலை மீது பாஜகவின் மற்ற தலைவர்களும் தேசிய தலைமைக்கு புகார்களை தெரிவித்து இருக்கிறார்கள்.  இதற்கிடையே தமிழகத்தின் தேசிய ஜனநாயகக் கூட்டணி விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் டெல்லி அறிக்கை கேட்டதாகவும் தகவல்கள் வந்தன.

இந்தப் பின்னணியில் தான் அண்ணாமலை இன்று டெல்லி செல்கிறார்.

டெல்லியில் அவர் பாஜக தேசிய தலைவர் நட்டா, பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி. எல். சந்தோஷ் ஆகியோரையும்  உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திப்பார் என்று பாஜக வட்டாரங்களில் கூறுகிறார்கள்.

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

காவிரி விவகாரம்… அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

ரன்வீர் சிங் தான் சக்திமான்? சீக்ரெட்டை உடைத்த டோவினோ தாமஸ்!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0