கடலின் குரலோடு மோடியின் மனதின் குரல்!

Published On:

| By Kavi

பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை கடலுக்குள் சென்று ரேடியோ மூலம் கேட்டிருக்கிறார்கள் தமிழக பாஜகவினர். தமிழ்நாடு பாஜக மாநிலச் செயலாளர் அ.அஷ்வத்தாமன் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.

மனதின் குரல் நிகழ்ச்சியில் மாதம் தோறும் கடைசி ஞாயிறு அன்று பிரதமர் மோடி மக்களோடு உரையாடி வருகிறார். 2014ஆம் ஆண்டு தொடங்கி ஆல் இந்தியா ரேடியோ, தூர்தர்ஷன் ஆகியவற்றின் மூலம் பிரதமரின் இந்நிகழ்ச்சி ஒலிபரப்பப்படுகிறது.

https://twitter.com/minnambalamnews/status/1639940632457383936

இன்று 99ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் உடல் உறுப்பு தானம், ஆஸ்கர் விருது, வந்தே பாரத் ரயிலின் முதல் பெண் ஓட்டுநர், கொரோனா பரவல் ஆகியவற்றைக் குறித்துப் பேசினார்.

இந்நிகழ்ச்சியை வித்தியாசமான முறையில் கடலுக்குள் சென்று மீனவர்களுடன் சேர்ந்து படகில் அமர்ந்து கேட்டுள்ளார் அஷ்வத்தாமன்.

திருவான்மியூர் குப்பத்திலிருந்து கடலில் சுமார் 2 கிமீ வரை படகில் மீனவர்களுடன் சென்ற அவர், அங்கிருந்தபடியே மனதின் குரல் நிகழ்ச்சியை ஆல் இந்தியா ரேடியோ மூலம் கேட்டார்.

ஈசிஆர் மீனவர் சங்கத் தலைவர் ராஜா கேசரி உள்ளிட்டோர் அஷ்வத்தாமனுடன் இந்நிகழ்ச்சியைக் கேட்டனர். கடலில் படகில் அமர்ந்தபடியே நிகழ்ச்சியை கேட்ட அவர்கள் பிரதமர் காசி தமிழ் சங்கமம் குறித்து பேசிய போது, அனைவரும் கைத்தட்டி மகிழ்ந்தனர்.

இதுகுறித்து நம்மிடம் கூறிய அஷ்வத்தாமன், “பிரதமரின் மன்கி பாத் நிகழ்ச்சியே அவர் மக்களோடு பேசுவதுதான். அதனால் இந்த நிகழ்வில் பிரதமர் பேசும் விஷயங்களை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்லவேண்டியதும், பரப்ப வேண்டியதும் பாஜகவினரின் கடமை. இதை வெறும் சடங்காக மட்டும் செய்துவிடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அந்த வகையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் மனதின் குரல் நிகழ்ச்சியைக் கொண்டு செல்வதற்கான ஒரு முயற்சியாகத்தான் கடலுக்குள் சென்று மீனவர்களோடு கேட்டோம். பிரதமரின் மனதின் குரலை கடலின் குரலோடு கேட்டு மகிழ்ந்தோம். இன்னும் வெவ்வேறு தளங்களில் மனதின் குரல் நிகழ்ச்சியை மக்களிடம் எடுத்துச் செல்வோம்” என்றார் அஷ்வத்தாமன்.

பிரியா

கவிக்கோ மன்றத்தில் அண்ணா, கலைஞர் படம் ஏன் இல்லை?: கொளுத்திப் போட்ட கோவி.லெனின்

இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel