டிஜிட்டல் திண்ணை: பொன்னார், நயினார், வானதி புறக்கணிப்பு- அண்ணாமலை கூட்டத்தில் நடந்தது என்ன?

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் இன்று (மே 27) சென்னை அமைந்தகரையில் உள்ள அய்யாவு மஹாலில் நடந்த தமிழக பாஜக ஆலோசனைக் கூட்ட புகைப்படங்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. அவற்றை பார்த்துக் கொண்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது .

”தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடந்து முடிந்த பிறகு ஒவ்வொரு கட்சியிலும் அது பற்றிய ஆலோசனைக் கூட்டங்கள் நடந்தன.

அதேபோல தமிழ்நாடு பாஜகவிலும் ஏப்ரல் கடைசி வாரத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், அதற்கிடையில் பாஜக தனது வேட்பாளர்களுக்கு தேர்தலுக்காக கொடுத்த நிதியைப் பங்கிடுவது தொடர்பாக பாஜக நிர்வாகிகளுக்குள் பலத்த மோதல் ஏற்பட்டது. குறிப்பாக தென்சென்னை தொகுதியில் இது குறித்து பாஜகவினருக்குள்ளேயே பிரச்சினை ஏற்பட்டு போலீசிலும் புகார் செய்யப்பட்டது. திருவாரூரில் கத்திக் குத்து சம்பவங்களும் நடந்தன.

நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் நிறுவன ஊழியர்கள் 4 கோடி ரூபாய் ரயிலில் எடுத்துச் சென்று பிடிபட்டு அதுவும் சர்ச்சையாகியிருந்தது. நயினாரும் இது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் மீதே வருத்தத்தில் இருந்தார்.

இந்த நிலையில், நிர்வாகிகள் கூட்டம் நடத்தினால் பல வேட்பாளர்களும் மாநில நிர்வாகிகளும் கொந்தளிப்பாக கருத்துக்களை வெளிப்படுத்துவார்கள் என்ற நிலை ஏற்பட்டதால்… முக்கிய நிர்வாகிகள் வெளி மாநிலங்களுக்கு பிரச்சாரம் செய்யும் காரணத்தினால் கூட்டம் தள்ளி வைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.

இந்த பின்னணியில் தான் இன்று மே 27-ஆம் தேதி சென்னை அமைந்தகரையில் இருக்கிற அய்யாவு மஹாலில் பாஜகவின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நாடாளுமன்ற வேட்பாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.

பொதுவாக காலை 10 மணிக்கு கூட்டம் என்றால் 11:30 அல்லது 12 மணிக்கு மேல் தான் அண்ணாமலை கூட்டத்திற்கு வருவார். ஆனால், இன்று காலை 10 மணிக்கு கூட்டத்துக்கு 10.30க்கே வந்து விட்டார். 10.30 முதல் 12 மணி வரை எமகண்டம் என்பதால் அதற்கு முன்பாகவே கூட்டத்துக்கு வந்து விட்டார் என்கிறார்கள் பாஜக நிர்வாகிகள்.

கூட்டம் ஆரம்பித்த உடனேயே தலைமை உரை என்ற அடிப்படையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் அண்ணாமலை பேசினார்.

தேர்தல் நிதி தொடர்பான பிரச்சனைகளை எழுப்புவதற்கு வேட்பாளர்களும் மாவட்ட நிர்வாகிகளும் தயாராக இருந்த நிலையில், அண்ணாமலை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்,

‘இப்போது நமது கவனமெல்லாம் ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை தினத்தில் நாம் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தே இருக்க வேண்டும். தேர்தல் களத்தில் நமது பிரச்சினைகளை பற்றி யாரும் பேச வேண்டாம். தேர்தலில் உங்கள் தொகுதியில் என்னென்ன பிரச்சனைகள் இருந்தன யார் செயல்பட்டார்கள் யார் செயல்படவில்லை என்பதெல்லாம் எனக்கும் தெரியும்.

ஜூன் 4 வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியாக கேட்டறிந்து கொள்வோம். அதன் பிறகு உரியவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்’ என்று எடுத்த எடுப்பிலேயே அதற்கு ஒரு அணை போட்டு விட்டார் அண்ணாமலை.

மேலும், ’முதலில் நமது கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரையும் பாராட்டியே ஆக வேண்டும். ஏனென்றால் போரின் போது தரைப்படையாக செயல்பட்டவர்கள் வேட்பாளர்கள் தான். எதிரிகளின் ஈட்டியாக இருந்தாலும் குண்டாக இருந்தாலும் அதை முதலில் நெஞ்சுரத்தோடு முதலில் எதிர்கொண்டவர்கள் நமது வேட்பாளர்கள் தான். யார் முதலில் குண்டு வாங்குகிறார்கள் என்பது தான் முக்கியம்.

தேர்தல் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் 2026 தான் நமது இலக்கு. அதை நோக்கி நாம் அடுத்த பாய்ச்சலை நடத்த வேண்டும். அர்ஜுனன் போல இலக்கில் கவனமாக இருக்க வேண்டும். அடுத்த 25 வருடம் அடுத்த 50 வருடம் தமிழ்நாடு எப்படி இருக்க வேண்டும் பாஜக எப்படி இருக்க வேண்டும் என்று நாம் யோசிக்க வேண்டும்’ என்றெல்லாம் பேசினார் அண்ணாமலை.

மேலும் ’நான் ஜெயலலிதா பற்றி அவர் இந்துத்துவவாதி என்று சொன்னதற்கு அதிமுகவில் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதுபற்றியும் இந்த கூட்டத்தில் விளக்கினார் அண்ணாமலை.
’ஒடிசாவிலே தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான வி.கே. பாண்டியன் பற்றி நமது பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களும் பேசியது இங்கே கடுமையான எதிர்ப்புகளை சந்தித்தது.

ஸ்டாலின் அறிக்கை விட்டார். அவரை தொடர்ந்து அவரது கூட்டணி கட்சியினர் அனைவரும் இதை பெரிய இஷ்யு ஆக்கிவிட்டனர். நம்மால் அதற்கு போதிய விளக்கம் தர முடியவில்லை. இந்த நிலையில் தான் ஜெயலலிதா ஒரு இந்துத்துவ தலைவராக இருந்தார் என்று நான் தெரிவித்தேன். உடனே அதிமுகவினர் இதற்கு பதில் சொல்ல ஆரம்பித்தனர். அதிமுகவினர் இதை பெரிதாக பேசுவார்கள் என்று எதிர்பார்த்துதான் நான் அதைப் பேசினேன். இப்படித்தான் பிரச்சனையை திசை திருப்ப வேண்டும்.

ஜெயலலிதா கர சேவையை ஆதரித்தவர்தான், ராமர் கோவிலை அயோத்தியில் கட்டாமல் வேறு எங்கே கட்டுவது என்று கேட்டவர் தான் ஜெயலலிதா. அதையெல்லாம் நாமும் பேச வேண்டும்’ என்று பேசினார் அண்ணாமலை.

அதற்குப் பிறகு வேட்பாளர்கள் சிலர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தார்கள். ஏற்கனவே அவர்களிடம் கேட்டுக் கொண்டது போல பிரச்சினைகள் பற்றிய பேச்சு தவிர்க்கப்பட்டு விட்டது.

முன்னாள் ஆளுநரும் தென் சென்னை தொகுதி வேட்பாளருமான தமிழிசை பேசியபோது, ‘நான் எல்லா உயரத்தையும் எட்டியாச்சு. ஆளுநராக இருந்துவிட்டேன், மாநில தலைவராக இருந்திருக்கிறேன். இனி எல்லா வகையிலும் உழைப்பேன். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி பாஜகவை ஆட்சியில் அமரவைக்க எல்லா தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’ என்று பேசினார் தமிழிசை.

இந்தக் கூட்டத்தின் முக்கியமான அம்சம் என்னவென்றால் தமிழ்நாடு பாஜகவின் சட்டமன்ற கட்சி தலைவரும் நெல்லை பாஜக வேட்பாளராகவும் போட்டியிட்ட 4 கோடி ரூபாய் விவகாரத்தில் நெருக்கடியில் இருக்கிற நயினார் நாகேந்திரன் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கன்னியாகுமரி பாஜக வேட்பாளரும் முன்னாள் பாஜக மாநில தலைவருமான பொன் ராதாகிருஷ்ணன் பங்கேற்கவில்லை . தேசிய மகளிர் அணி தலைவரான வானதி சீனிவாசன் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இந்த கூட்டம் நடந்த அமைந்தகரை பகுதி மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்டது. மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட வினோஜும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. வினோஜ் தரப்பில் விசாரித்தபோது, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் போட்டியிடும் இமாச்சல் பிரதேச மாநிலம் ஹமிர்புர் தொகுதியில் அவர் தேர்தல் பணியில் இருப்பதாக தெரிவித்தனர்.

இரண்டாம் கட்டத்தில் பேசிய அண்ணாமலை, ’இந்த மேடையில் இருப்பவர்கள் கீழே அமரலாம். கீழே இருப்பவர்கள் மேடைக்கு வரலாம்’ என்றும் பேசியது பாஜகவுக்குள் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மத்தியப் பிரதேசத்தில் எதிர்பாராததை எதிர்பார்க்கலாமா? காங்கிரஸ் வெல்லப்போகும் தொகுதிகள் எத்தனை?

பெற்றோரை சந்தித்த விஜய்: புகைப்படம் வைரல்!

+1
0
+1
9
+1
0
+1
2
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *