நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பாஜக தலைவர்கள் தொடர்ந்து எங்களுடன் பேசி வருகின்றனர் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பில் அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஹோட்டலில் இன்று (ஜூலை 1) காலை நடைபெற்றது.
இதில் மாநில நிர்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களும் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில்,
“இன்று நடைபெற்ற கூட்டத்தில் திருச்சியைத் தொடர்ந்து அடுத்த மாநாட்டை கொங்கு மண்டலத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம். விரைவில் அதற்கான தேதியை அறிவிப்போம்.
கொங்குமண்டலம் என்பது எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் எஃகு கோட்டை. அங்குள்ள தொண்டர்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். எடப்பாடிக்கு ஆதரவாக இல்லை என்பது நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தேர்தலில் தெரிந்துவிட்டது.” என்றார்.
தொடர்ந்து அவர், “ தேர்தல் கூட்டணி பாஜக தலைவர்கள் தொடர்ந்து எங்களுடன் பேசி வருகின்றனர். எனினும் இதுகுறித்து தேர்தல் சமயத்தில் அறிவிக்கப்படும்.
கடந்த காலத்தில் எடப்பாடி அரசை காப்பாற்றி கொடுத்தது நாங்கள் தான். அதற்குரிய செயல் அவரிடம் இல்லை. கடந்த நான்கரை ஆண்டுகளாக பொறுத்திருந்தோம்.
இனிமேலும் இந்த தவறை செய்யக்கூடாது என்பது தான் எங்களது அரசியல் ஆலோசகர் சொல்லியிருக்கிற பாடம். தமிழக மக்கள் தந்த பாடம்.
தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து திமுக செய்யும் ஒவ்வொரு தவறுகளையும் கண்டித்து நான் தான் அறிக்கை வெளியிட்டு வருகிறேன். நாங்கள் திமுகவின் பி டீம் இல்லை. எடப்பாடி தான் திமுகவின் ஏ டூ இசட் டீமாக செயல்பட்டு வருகிறார்.
அதிமுக தலைவர்கள் குறித்து அவதூறாக பேசுவதற்கு தமிழகத்தில் யாருக்கும் அருகதையில்லை. அண்ணாமலை பேசியதை கண்டித்து ஏற்கெனவே விரிவான கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
”எடப்பாடியுடன் இணைவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை” : பண்ருட்டி ராமச்சந்திரன்