“இம்முறை 400க்கும் மேல்” என சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தமிழில் பேசினார்.
சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் இன்று(மார்ச் 19) பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசிக்கொண்டிருக்கும் போதே மேடைக்கு வந்தார் பிரதமர் மோடி.
கூட்டணி கட்சித் தலைவர்கள் கை குலுக்கி,சால்வை அணிவித்து பிரதமர் மோடியை வரவேற்றனர்.
தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “கோட்டை மாரியம்மனை வணங்கி எனது உரையை தொடங்குகிறேன்.
தமிழ்நாட்டில் பாஜகவுக்கும், எனக்கும் கிடைத்து வரும் மிகப்பெரிய மக்கள் ஆதரவை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது.
நேற்று கோவையில் மக்கள் வெள்ளத்தில் நீந்திக்கொண்டே பயணம் செய்தேன்.
தமிழ்நாட்டில் எனக்கும் பாஜகவுக்கும் என்டிஏ கூட்டணிக்கும் கிடைக்கும் ஆதரவை பார்த்து திமுகவுக்கு தூக்கமே தொலைந்துபோய்விட்டது.
இந்தமுறை ஏப்ரல் 19 அன்று விழுகிற ஒவ்வொரு ஓட்டும் பாஜகவுக்கும் என்.டி.ஏ கூட்டணிக்கும்தான் என தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்” என்று கூறிய பிரதமர் மோடி “இம்முறை 400க்கும் மேல்….” என தமிழில் பேசினார்.
“வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு, வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டுக்கு, நவீன உள்கட்டமைப்புக்கு, மூன்றாவது பொருளாதாரத்திற்கு 400ஐ தாண்ட வேண்டும்” என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, “என்.டி.ஏ கூட்டணி இப்போது வலுவான கூட்டணியாக உருவாகியிருக்கிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரது திறமை, ஆற்றல், தொலைநோக்கு பார்வை ஆகியவற்றை கொண்டு தமிழகத்தை புதிய உயரத்துக்கு கொண்டு செல்ல உத்வேகம் கிடைத்திருக்கிறது.
என்.டி.ஏ கூட்டணியில் இணந்துள்ள பாமகவை வரவேற்கிறேன். நான் இந்த முறை சேலம் வரும்போது எனக்கு பல நினைவுகள் வருகிறது. 50 ஆண்டுகளுக்கு முன் கைலாஷ் மானேஸ்வர் யாத்திரை செல்லும் போது என்னுடைய குழுவில் இந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் இருந்தார்.
அவருடைய பெயர் ரத்தினவேல். அவர் சேலத்தை பற்றிய பெருமைகளை என்னிடம் சொல்லிக்கொண்டே வந்தார். அவர் சொன்னதை கேட்டு சேலம் மீது எனக்கு மிகப்பெரிய ஈர்ப்பே வந்துவிட்டது.
அவர் இப்போது இல்லை. ஒரு விபத்தில் உயிரிழந்துவிட்டார். சேலம் வந்ததும் அவரது நினைவு எனக்கு வருகிறது.
நான் சேலத்தில் கால் வைக்கும் போது என்னுடைய நெருங்கிய நண்பர்கள் நினைவுக்கு வந்தனர். கே.என்.லக்ஷ்மன் நினைவுக்கு வந்தார். தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற பாடுபட்ட அற்புதமான மனிதர். எமெர்ஜென்சி காலத்தில் கூட பல தடைகளை மீறி கட்சியை நடத்த பாடுபட்டவர். பல பள்ளிகளை நடத்தியவர்.
இப்படி பல நினைவுகள் சுழலும் போது, சேலம் ஆடிட்டர் ரமேஷ் நினைவும் வந்தது. கட்சிக்காக தனது உயிரையே தியாகம் செய்தவர். கட்சிக்காக நேர்மையாக உழைத்தவரை கொலை செய்துவிட்டார்கள்” என நா தழுதழுத்து பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
CSK-விடம் உதவி கேட்ட அஸ்வின்… அவரின் ஆசை நிறைவேறுமா?
ஒரே மேடையில் இரு ஓபிசி தலைவர்கள் : பாஜக பொதுக்கூட்டத்தில் அன்புமணி பேச்சு!