தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியத் தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜக புகார் அளித்துள்ளது.
மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் தலைமையிலான குழு நேற்று(நவம்பர் 11) டெல்லியில் உள்ள இந்தியத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜிவ் குமாரை அவரது அலுவலகத்தில் சந்தித்தது.
இந்த சந்திப்பில், மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி பொய் பேசி வருவதால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அர்ஜுன் ராம் மெக்வால் தலைமையிலான குழு புகார் அளித்தது.
இது தொடர்பாகப் பத்திரிகையாளர்களிடம் பேசிய அர்ஜுன் ராம் மெக்வால், “ நான், நாடாளுமன்ற உறுப்பினர் அருண் சிங் மற்றும் சில பாஜக நிர்வாகிகள் அடங்கிய குழு இந்தியத் தலைமை அதிகாரியை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்.
கடந்த நவம்பர் 6 ஆம் தேதி மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ராகுல் காந்தி இந்திய அரசியலமைப்பை பாஜக அழித்துவிடும் என்று பொய் பேசியுள்ளார். இதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் இப்படி நடந்துகொள்ளக் கூடாது என்று தேர்தல் ஆணையம் எச்சரித்த பின்பும் ராகுல் காந்தி இதைத் தொடர்ந்து செய்து வருகிறார்.
மேலும் மொழி, மகாராஷ்டிராவின் முதலீடுகள் உள்ளிட்ட விஷயங்களைப் பற்றி தவறான தகவல்கள் கூறி மகாராஷ்டிரா மக்களிடையே சண்டை மூட்டி விட நினைக்கிறார். இது நியாயமான தேர்தலுக்கு வழிவகுக்காது.
அதனால் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 353-இன் படி ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தோம்” என்று தெரிவித்தார்.
முன்னதாக கடந்த நவம்பர் 6ஆம் தேதி மும்பையில் மகா விகாஸ் அகாதி கூட்டணி சார்பாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி “ பாஜக மற்றும் ஆர். எஸ்.எஸ் இந்திய அரசியலமைப்பை அழிக்க நினைக்கிறது. ஒருவர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக வேண்டுமானால், அந்த நபர் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இருக்க வேண்டும்” என்று பேசியிருந்தார்.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குறிப்பிட்டிருக்கிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
துணை முதல்வர் உதயநிதியின் துணை செயலாளராக ஆர்த்தி நியமனம்!
பியூட்டி டிப்ஸ்: திடீர் மச்சம்… அழகா, ஆபத்தா?
விரைவு விசாவை நிறுத்திய கனடா அரசு: பாதிக்கப்படும் இந்திய மாணவர்கள்!