தமிழ் மொழியில்  தொழில்கல்வி: பாஜக ஆர்பாட்டம்!

அரசியல்

தமிழக பாஜக இன்று (அக்டோபர் 27) மாவட்டத் தலைநகரங்கள் முழுவதும் தமிழக  அரசைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்துகிறது. தமிழ் மொழியை காக்க திமுக அரசு தவறிவிட்டதாக நடத்தப்படும் ஆர்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடலூரில் பங்கேற்கிறார்.  

மத்திய உள்துறை  அமைச்சர் அமித் ஷா தலைமையிலான  நாடாளுமன்ற அலுவல் மொழிக் கமிட்டியின் பரிந்துரைகள் அண்மையில்  குடியரசுத் தலைவரிடம்  அளிக்கப்பட்டது.

அந்த  அறிக்கையில், இந்தி மொழி பேசும் மாநிலங்களில் உயர் தொழில் கல்வி இந்தியிலேயே இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

ஆங்கிலத்தின் இடத்தில் இந்தியை வைப்பதான இந்த முயற்சிக்கு எதிராக தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.

திமுகவின் மாணவரணியும், இளைஞரணியும் சேர்ந்து தமிழகம் முழுதும் இந்தித் திணிப்பை எதிர்த்து ஆர்பாட்டங்கள் நடத்தின.

மத்திய அரசின் இந்தித் திணிப்பு போக்கு தொடர்ந்தால் அடுத்த கட்ட போராட்டம் டெல்லியில் நடக்கும் என்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி எம்.எல்.ஏ. எச்சரித்திருந்தார்.

நேற்று (அக்டோபர் 26) கவிஞர் வைரமுத்து தலைமையில் தமிழ் அமைப்புகளும் அமித் ஷாவின் பரிந்துரையை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள்.

இந்த பின்னணியில் இந்த விவகாரத்தில் திமுகவுக்கு பதில் தரும் வகையில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று (அக்டோபர் 27)  திமுக அரசின் தமிழ் விரோதப் போக்கைக் கண்டிப்பதாகக் கூறி பாஜக ஆர்பாட்டம் நடத்துகிறது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடலூர் மாவட்டத்தில் ஆர்பாட்டத்தில் பங்கேற்கிறார்.

தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு கொடு,  மொழி காக்க போராடிய தலைவர்களின் வாழ்க்கையை  பாடத் திட்டங்களில்  இடம்பெற செய்யவேண்டும், தமிழ் மொழிக் கல்வியை முதன்மைப்படுத்து,

உருவாக்கு உருவாக்கு தொழில் கல்வி பாடங்களை தமிழில் உருவாக்கு, உருது படிக்க உதவித் தொகை தமிழுக்கு மட்டும் தயக்கம் ஏன்?,

தமிழ் படிக்கும் மாணவர்களுக்கும் உதவித் தொகை வழங்கிடு,  தமிழுக்கு தனி அமைச்சரை நியமித்திடு போன்ற முழக்கங்கள் இந்த ஆர்பாட்டங்களில் எழுப்பப்பட்டன.

ஆர்பாட்டங்களில் ஈடுபட்ட பாஜகவினர் ஆங்காங்கே கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

வேந்தன்  

அம்பேத்கர் சிலை: திருமா கொடுக்க ஸ்டாலின் திறந்தார்!

தமிழக மீனவர்கள் 7 பேருக்குச் சிறை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *