திமுக அரசை கண்டித்து வரும் 27 ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக பா.ஜ.க, மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த ஏப்ரல் 2ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவின் 37வது கூட்டத்துக்குத் தலைமை தாங்கிப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,
“மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்லாமல் இணைப்பு மொழியாக இருக்கும் ஆங்கிலத்துக்கு மாற்று மொழியாக இந்தியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று பேசியது சர்ச்சைக்குள்ளானது.
இந்தச் சூழலில், அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்குழுவின் 11வது அறிக்கை கடந்த மாதம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
அதில், “ஆங்கில வழிக் கல்வியை இந்தி வழிக்கல்வியாக மாற்ற வேண்டும். இந்தி மொழியைக் கட்டாயமாக்காவிட்டால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்திலும் முதல்வர் முதல் பல கட்சி தலைவர்களும் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். தமிழகம் முழுவதும் திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து பதிலளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை. மூன்று மொழியைக் கற்க வேண்டும் என்பது மத்திய அரசின் கல்விக் கொள்கையாக இருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, தமிழகத்தில் கடந்த அக்டோபர் 18ம் தேதி கூடிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இந்தி எதிர்ப்பு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் திமுக அரசை கண்டித்து வரும் 27 ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில், “தாய்மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் திறனற்ற திமுக அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அக்டோபர் 27ஆம் தேதி தமிழக பாஜகவின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும். திமுகவின் கபட நாடகங்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவோம்! ” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெ.பிரகாஷ்
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!
ஆடைத் துறையில் நிதி நெருக்கடி: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!