மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி, பால் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று (நவம்பர் 15) பாஜக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு அந்தியூரில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.
அவர், “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எதைச் செய்கிறார்களோ இல்லையோ, ஒவ்வொரு விஷயத்தைப் பார்த்துப் பார்த்து விலையை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆட்சிக்கு வந்தவுடன் கட்டுமான பொருட்கள் விலையை உயர்த்தியிருக்கிறார்கள். பின்னர் சொத்து வரி, மாநகராட்சியில் குடிநீர் வரி, பெட்ரோல் டீசல் விலை, ஆவின் பொருட்கள் ( மூன்று முறை ), மின்சாரக் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியிருக்கிறார்கள்.
தற்போது ஆவின் பாலின் விலையை மீண்டும் உயர்த்தியிருக்கிறார்கள். தொடர்ந்து திமுக ஆட்சி 16 மாதங்களாக விலை உயர்வை மட்டுமே தாரக மந்திரமாக வைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.
விளம்பரப்படுத்தக் கூடிய முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் மாறியுள்ளார். ”விளம்பரமேனியா” என்னும் நோய் முதலமைச்சருக்கு வந்திருக்கிறது.
தமிழக அரசு பாலின் கொள்முதல் விலையை 32-ல் இருந்து 35 ஆக உயர்த்தியிருக்கிறார்கள். ஆனால் பால் விலையை ஒரு லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தியுள்ளார்கள்.
48 ரூபாய் இருந்த ஆரஞ்ச் பால் பாக்கெட் விலை 60 ரூபாய் உயர்ந்திருக்கிறது. இடையில் இருக்கக் கூடிய 25 ரூபாய் எங்குச் செல்கிறது என்றால் அதற்குப் பெயர் தான் திராவிட மாடல்.
விவசாயிகளிடம் இருந்து பாலை வாங்கி அதைப் பதப்படுத்தி விற்பனை செய்வதற்கு 40 சதவீதம் கமிஷனாம். அதனால் தான் ஆவின் நிறுவனம் இன்று நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
நீங்கள் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டு ஒவ்வொரு முறையும் பால் விலையை உயர்த்துவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.
உலகிலேயே அதிக பால் உற்பத்தி செய்யக் கூடிய நாடாக இந்தியா மாறியிருக்கிறது. அதற்கேற்ப விவசாயிகளுக்கு லாபம் அளிக்க வேண்டியது அரசின் கடமை.
ஆவின் நிறுவனம் ஒரு நாளைக்கு 32 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது. ஆனால் கடந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு ஆவின் நிறுவனம் 36 லட்சம் பால் கொள்முதல் செய்தது.
ஒரு நாளுக்கு 4 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் குறைந்துள்ளது. ஆவின் நிறுவனம் என்பதே ஒரு திவாலான நிறுவனம்.
எத்தனையோ முறை குஜராத் அரசையும் பிரதமர் நரேந்திர மோடியையும் திட்டுகிறீர்கள். பாஜக எங்களுடைய செலவில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அமைச்சர்களைக் குஜராத்தில் இருக்கும் அமுல் பால் பண்ணைக்கு அழைத்துச் செல்கிறோம். செலவு முழுவதுமே எங்களுடையது.
தொண்டர்களிடம் இருந்து பணத்தை வாங்கி அமைச்சர்களைக் குஜராத்திற்கு அழைத்துச் செல்கிறோம்.
நீங்கள் இரண்டு நாள் சுற்றுலாவாக அங்கு வந்து எப்படி அமுல் நிறுவனம் மட்டும் லாபத்தை ஈட்டுகிறது என்று பார்க்க வேண்டும்.
விற்கக்கூடிய பணத்தில் 82 சதவீதம் விவசாயிகளுக்குத் திரும்பச் செல்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
அமைச்சர் நாசருக்கு வாய் கோளாறு இருக்கிறது. அதனால் தான் ஸ்டாலினுக்கு நிர்வாகத்தில் கோளாறு ஏற்படுகிறது” என்று பேசினார்.
மோனிஷா
“இதில் நடிக்கும்போது உண்மையாகவே கர்ப்பமாக இருந்தேன்” – கயல் ஆனந்தி
பிரியா மரணம் : “திமுக ஆட்சியில் மருத்துவத்துறை அழிந்து விட்டது” – அண்ணாமலை