தேர்தல் காலகட்டத்தில் நெல்லை எக்ஸ்பிரஸில் 4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட விவகாரம் தற்போது சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் இருக்கிறது.
இந்த விசாரணையை எதிர்த்து தமிழ்நாடு பாஜகவின் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
இதற்கிடையில் ஆரம்பத்தில் இந்த வழக்கை தாம்பரம் காவல்துறையினர் விசாரித்தபோது, உடனடியாக சம்பந்தப்பட்ட நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஏன் விசாரணைக்காக அழைக்கவில்லை என்ற கேள்வி போலீஸ் தலைமையிடத்தில் எழுந்தது. அதன் காரணமாகவே இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.
சிபிசிஐடி ஏடிஜிபி வெங்கட்ராமன், ஐ. ஜி. அன்பு, டிஎஸ்பி சசிதரன் ஆகியோர் இந்த வழக்கு குறித்து ஒவ்வொரு நாளும் ஆலோசனை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பாஜக தரப்பிலிருந்து சிபிசிஐடி போலீஸ் அதிகாரிகளுக்கு சில தகவல்கள் சென்றுள்ளன.
’நீங்கள் ஐபிஎஸ் அதிகாரிகளாக இருக்கிறீர்கள். உங்களுடைய எதிர்கால பிரமோஷன் உள்ளிட்ட பணி தொடர்பான விஷயங்கள் மத்திய அரசின் கையில் தான் உள்ளன. மீண்டும் பாஜக ஆட்சிதான் மத்தியில் அமையப் போகிறது. எனவே இந்த விசாரணையை கவனமாக செய்யுங்கள்’ என்று சிபிசிஐடி அதிகாரிகளுக்கு பாஜக தரப்பிலிருந்து தனிப்பட்ட முறையில் சில அழுத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இதே நேரத்தில் தான் சிபிசிஐடி போலீஸ் தரப்பில் இருந்து இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பாஜகவின் மாநில தொழில் பிரிவு தலைவர் கோவர்தனன், மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது.
மேலும், பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகனுக்கும் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது.
இது குறித்து விசாரணை அதிகாரிகள் வட்டாரத்தில் பேசியபோது, “ஏப்ரல் 6-ஆம் தேதி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சுமார் 4 கோடி ரூபாயை எடுத்துச் சென்ற மூன்று பேர் தாம்பரத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த விஷயத்தில் ஆரம்ப கட்டம் முதலே போலீஸாருக்கு நன்கு தெரியும்.
அதாவது நான்கு கோடி ரூபாய் பணத்தோடு எழும்பூர் ரயில் நிலையத்தில் மூன்று பேர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறப்போவது முன்கூட்டியே போலீஸுக்கு தெரிந்து விட்டது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த போலீசார் அவர்களோடு எழும்பூரில் இருந்து ரயிலில் ஏறினர். அந்த மூன்று பேர் கையில் பணத்தோடு வந்ததும் இந்த போலீசார் தான் எழுந்து அவர்களுக்கு இடம் கொடுத்துள்ளார்கள்.
ரயில் எழும்பூரில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் போலீஸார் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, ’நீங்க யாருக்காக பணம் எடுத்துட்டுப் போறீங்க? எதுக்காக எடுத்துட்டுப் போறீங்க?’ என்று விசாரித்து முதலில் அந்த மூன்று பேருடைய செல்போன்களையும் வாங்கி வைத்துக் கொண்டனர்.
அங்கிருந்தபடியே தாம்பரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தேர்தல் பறக்கும் படைக்கும் தகவல் அனுப்பப்பட்டது. அதனால் தான் தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் நின்றபோது சரியாக அந்தப் பெட்டியில் ஏறி பணத்தை தாம்பரம் போலீஸ் மற்றும் பறக்கும் படையால் கைப்பற்ற முடிந்தது.
எனவே இந்த பணப்பரிமாற்றத்தின் ஆரம்ப கட்டத்தில் இருந்தே போலீஸ் கண்காணித்து வருகிறது. வழக்கு விசாரணை தீவிரமாகவே நடக்கும்” என்கிறார்கள்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கோவை: யானை தாக்கி பாரதியார் பல்கலை காவலாளி பலி!
இது தவறான வழிகாட்டுதல் : தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் பதில்!
Comments are closed.