ஆருத்ரா மோசடி நபர்களுடன் பாஜக தலைமை: நிர்மல் வழியில் அண்ணாமலை மீது இன்னொரு புகார்!

அரசியல்

ஆருத்ரா மோசடியில் ஈடுபட்டவர்களுடன் தமிழக பாஜக தலைமை நெருக்கமாக இருப்பதாகவும், பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே தமிழக பாஜகவில் பொறுப்பு வழங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டி பாஜக பொருளாதார பிரிவு மாநில செயலாளர் கிருஷ்ண பிரபு ராஜினாமா செய்துள்ளார்.

எந்த காலத்திலும் கட்சி வளராது

இதுகுறித்து அவர் இன்று (ஏப்ரல் 13) வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநில தலைவர் அண்ணாமலைக்கு, நான் பொருளாதாரப் பிரிவின் மாநில செயலாளராக இருந்து வருகிறேன். கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்கக் கூட தகுதி இல்லாத சிலரை நீங்களும், கேசவ விநாயகமும் பொறுப்பில் அமர்த்தி அழகு பார்க்கிறீர்கள்.

நீங்கள் சொல்வதைப் போல கட்சி உறுப்பினர்களிடமும் நிர்வாகிகளிடமும் அவசியமில்லாத விஷயங்களுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வதால் எந்த காலத்திலும் கட்சி வளராது.

அதற்கும் மேல் நேர்மாறாக இங்கே அவர்களது சுய லாபத்திற்காகவும், மதம் சார்பற்ற கட்சி என்று சொல்லிக்கொண்டு எங்களிடமிருந்தும், தொண்டர்கள் நிர்வாகிகளிடம் இருந்தும் பணம் வசூலிக்க சொல்லியும், மேலும் பணத்தைப் பெற்றுக் கொண்டும் பல விதமான அரசியல்களை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆருத்ரா மோசடி நிர்வாகிகளுடன் நெருக்கம்

எங்களை நீங்கள் ஜனநாயகத்துக்கு எதிராக வற்புறுத்தி சில விஷயங்களையும் கோரிக்கைகளையும் செய்ய சொல்வதாலும், என்னைப் போன்ற நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சிக்கும் உங்களுக்கும் உண்மையாக வேலை பார்த்த .நிர்மல் குமாரை போன்ற நிர்வாகிகளும் பல இன்னல்களுக்கு ஆளாகி எந்த ஒரு கட்சி வேலையிலும் செயல்பட விடாமல் தடுக்கப்படுகின்றனர்.

மேலும் ஆருத்ரா போன்ற மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மாநில தலைமைக்கு நெருக்கமாக இருந்து வருகிறார்கள். இதை கண்டும் காணாமல் இருப்பதற்கு எனது மனம் கொள்ளவில்லை. இந்தக் கட்சி என்னையும் என் குடும்பத்தாரையும் பழுது பார்த்து விட்டது.

அண்ணாமலை சரிபட செயல்படவில்லை

மேலும் இந்த பொருளாதார பிரிவின் பிரச்சனைகளை நேரடியாக உங்களுக்கும், கட்சி அலுவலகத்துக்கும் சொல்லியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் நான் எனது பொருளாதாரப் பிரிவின் மாநில செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன்.

இதற்கு முழு காரணமாக இருக்கும் பொருளாதார பிரிவின் மாநில தலைவர் எம்.எஸ்.ஷா, மதுரை மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் நரசிங்க பெருமாள் இவர்களை எல்லாரையும் வழிநடத்தும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு அண்ணாமலை ஆகிய நீங்கள்தான் சரிபட செயல்படவில்லை என்று குறிப்பிடுகிறேன்.

பணம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் இந்த கட்சியில் பொறுப்பு வழங்கப்படுகிறது என்பது ஊர்ஜிதமான உண்மை. இதற்கு பலவிதமான ஆதாரங்கள் உள்ளன. இதற்கும் மேல் பாரதிய ஜனதா கட்சியில் என்னை அர்ப்பணித்தேன் என்றால் எனது உயிருக்கே பாதிப்பு வரும் என்று நினைத்து இந்த கட்சியில் இருந்து நான் நிரந்தரமாக ராஜினாமா செய்கிறேன்.” என்று கிருஷ்ண பிரபு தனது ராஜினாமாவுக்கு அடுக்கடுக்கான காரணங்களை குறிப்பிட்டுள்ளார்.

நிர்மல் குமாரை தொடர்ந்து…

பாஜகவில் இருந்து ஐடி விங் செயலாளர் நிர்மல் குமார் கடந்த மாதம் 5ம் தேதி விலகினார். அதனைத்தொடர்ந்து அக்கட்சியில் இருந்து பல நிர்வாகிகள் கொத்து கொத்தாக வெளியேறி வருகிறார்கள். அப்படி விலகும் சிலர் அண்ணாமலைக்கு எதிராக பல புகார்களை முன் வைத்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது கிருஷ்ண பிரபு அண்ணாமலை மீது கடுமையாக குற்றஞ்சாட்டி ராஜினாமா கடிதத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

திமுக ஊழல் பட்டியல்

இதற்கிடையே நாளை காலை 10.15 மணிக்கு தி.மு.க.வினரின் ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாக அண்ணாமலை இன்று ட்விட்டரில் பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இன்று காலை 9.30 மணி அளவில் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தி.மு.க. பைல்ஸ்‘ என்கிற தலைப்போடு வெளியிட்டிருக்கும் வீடியோவில் முன்னாள் முதலமைச் சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதி மாறன், அமைச்சர் உதயநிதி, மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா, மு.க.அழகிரியின் மகன் துரை உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

ஆனால் அதற்கு ஒருநாள் முன்னதாக பொதுமக்களிடம் பணமோசடி செய்த ஆருத்ரா நிர்வாகிகளுடன் தமிழக பாஜக தலைமை நெருக்கமாக இருப்பதாகவும், பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே தமிழக பாஜகவில் பொறுப்பு வழங்கப்படுகிறது என்றும் பாஜக பொருளாதார பிரிவு மாநில செயலாளர் கிருஷ்ண பிரபு குற்றம் சாட்டி கட்சியில் இருந்து விலகியுள்ளது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

முதல்முறையாக நயன்தாராவுடன் நடிக்கும் மாதவன்

பஞ்சாபில் துப்பாக்கிச் சூடு: தமிழக வீரர்கள் வீரமரணம்!

bjp president closed with aarudhra scam
+1
0
+1
1
+1
1
+1
3
+1
1
+1
0
+1
1

1 thought on “ஆருத்ரா மோசடி நபர்களுடன் பாஜக தலைமை: நிர்மல் வழியில் அண்ணாமலை மீது இன்னொரு புகார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *