“எனது உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்துச் சென்று எரித்து நேரத்தை வீணடிக்காமல், கோவை குண்டுவெடிப்பு பற்றி உங்கள் கட்சித் தலைவரை பேச சொல்லுங்கள்” என அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையைக் கண்டித்து அவரது உருவபொம்மையை இன்று (அக்டோபர் 28 ) கடலூரில் திமுகவினர் எரித்தனர்.
அந்த உருவபொம்மையை காலணியாலும் திமுக தொண்டர்கள் அடித்து ஆவேசத்தை வெளிப்படுத்தினர். பின்னர் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே நேற்று ( அக்டோபர் 27 ) திமுகவை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை, ”கடலூர் பகுதி கொள்ளை அடிக்கக் கூடிய கும்பலின் கூடாரமாக உள்ளது.
வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் என்னை கடலூருக்குள் விடமாட்டேன் என்று சொன்னார்.
கடலூர் என்ன உங்கள் அப்பன் வீட்டு சொத்தா ? கடலூரில் என்னை எதுவும் செய்ய முடியாது. பாரதிய ஜனதா கட்சி உள்ளே வந்துவிட்டது.” என்று பேசினார்.
இந்நிலையில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தை அவதூறாக பேசிய அண்ணாமலையைக் கண்டித்து கடலூர் திமுக நகர செயலாளர் ராஜா தலைமையில் அண்ணாமலையின் உருவபொம்மையை இன்று (அக்டோபர் 28 ) தீயிட்டு எரித்தனர். இதனால் கடலூரில் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (அக்டோபர் 28 ) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்
“எனது உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்துச் சென்று எரித்து நேரத்தை வீணடிக்காமல், கோவை குண்டுவெடிப்பு பற்றி உங்கள் கட்சித் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பேச சொல்லுங்கள் என்று திமுகவினரை கேட்டுக்கொள்கிறேன்.
அதுவே தமிழக மக்களுக்கு அவர் ஆற்றும் பெரும் சேவையாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச் செல்வதை ஏற்கமுடியாது: உயர் நீதிமன்றம்!
ஒரே நாடு ஒரே காவல்துறை சீருடை : மோடி யோசனை!