வடமாநிலத்தவர்கள் விவகாரத்தில் உத்தரப் பிரதேச பாஜக செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான பிரசாந்த் உம்ராவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
தமிழ்நாட்டில் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில நாட்களாக வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.
ஆனால் இவை போலி வீடியோக்கள் என்றும் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் உத்தரப் பிரதேச பாஜக செய்தி தொடர்பாளரான பிரசாந்த் உம்ராவ்,
தமிழக முதல்வர் ஸ்டாலினும் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் இருக்கும்படியான புகைப்படத்தை பகிர்ந்திருந்தார், பீகார் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடந்த போதிலும் தேஜஸ்வி யாதவ் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார் என்று பதிவிட்டிருந்தார்.
அதுபோன்று தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக 12 வடமாநில தொழிலாளர்கள் தூக்கிலிடப்பட்டதாகவும் அவர் ஒரு தகவலை வெளியிட்டிருந்தார்.
இதனால் அவர் மீது தமிழ்நாடு காவல்துறை ஐபிசி சட்டப்பிரிவு 153-கலவரத்தைத் தூண்டுதல், 153ஏ – மதம், இனம், பிறந்த இடம், வசிக்கும் இடம், மொழியின் அடிப்படையில் குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல், 504 -அமைதியை மீறும் நோக்கத்துடன் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.
இந்நிலையில் அவர் முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், பொய்ச் செய்திக்கு தான் பலிகடா ஆகிவிட்டதாகவும், வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு பரப்பவில்லை. அரசியல் நோக்கத்தோடு என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை நாளை நீதிபதி ஜஸ்மீத் சிங் விசாரிக்கிறார்.
–பிரியா
அரசுப் போக்குவரத்து தனியார் மயமாவது உறுதி: டிடிவி தினகரன்
”ஹே குறுகுறுனு கண் குறுவுது”: கண்ணை நம்பாதே ஃபர்ஸ்ட் சிங்கிள்!