வரும் 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை நான் பார்த்துக்கொள்கிறேன். ஒரு தடவை தவறு செய்துவிட்டோம் என்று தெரிந்த பிறகு, நாம் புதிய பாதைக்கு செல்ல வேண்டும் என ராமதாஸ் பேசியது பாஜக – பாமக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பட்டானூரில் பாமகவின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், கௌரவத் தலைவர் மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, பேராசிரியர் தீரன், பு தா அருள்மொழி, முன்னாள் அமைச்சர் ஏ.கே மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இக்கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், ”கட்சி தொடங்கி 35 ஆண்டுகள் கடந்தும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. நாம் ஆட்சிக்கு வந்து இருந்தால், 4 நாட்களுக்கு முன் நடத்திய தனி இட ஒதுக்கீடு போராட்டத்தை நடத்தி இருக்க வேண்டியதில்லை.
ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் பெற்றால் வெற்றி நம் பக்கம். இந்த இலக்கை எட்ட கடுமையாக உழைக்க வேண்டும். 2026-ம் ஆண்டு கூட்டணி ஆட்சிதான். யாருடன் கூட்டணி என்பதை நான் பார்த்துக்கொள்கிறேன். நிறைய பாடங்களை நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம்.
ஒரு தடவை தவறு செய்தால், மீண்டும் தவறு செய்ய வேண்டும் என்று அர்த்தமில்லை. தவறு செய்துவிட்டோம் என்று அனைவருக்கும் தெரிந்த பிறகு, மீண்டும் புதிய பாதைக்கு நாம் செல்ல வேண்டும். அது எந்த பாதை என்பதை அடுத்த ஆண்டு பொதுக்குழுவிலோ அதற்கு முன்போ நான் முடிவு செய்வேன்.
நாம் இடம்பெறும் கூட்டணி தான் அடுத்து ஆட்சி அமைக்கும். அந்த ஆட்சியில் நாம் பங்கேற்போம். தமிழகம், புதுவையில் ஆட்சி அமைக்கப்போவது நம் கூட்டணிதான். அப்போது இங்கு வந்திருப்பவர்கள் அமைச்சர்களாக இருப்பார்கள். தமிழ்நாட்டில் இனி திமுக ஆட்சி வரக்கூடாது என சபதம் ஏற்போம்” என ராமதாஸ் பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
“விருப்பமில்லையென்றால் வெளியேறு” : மேடையில் ராமதாஸ் – அன்புமணி இடையே வார்த்தை மோதல்!