நீட் தேர்வு குறித்து ஆளுநரிடம் கேள்வி கேட்டவருக்கு எதிராக பாஜக புகார் கொடுத்துள்ளது.
2023 ஆகஸ்ட் 12ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில் சேலம் உருக்காலையில் பணியாற்றும் அம்மாசியப்பன் கலந்துகொண்டார். இவரது மகள் நீட் தேர்வில் 623 மதிப்பெண் பெற்று, இந்திய அளவில் 878ஆவது ரேங்க் பெற்றார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் ஆளுநர் நடத்திய நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பிய அம்மாசியப்பன், “நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் அளிப்பீர்கள்” என்று கேள்வி எழுப்பினார். உடனே ஆளுநர் மாளிகை அதிகாரிகள் வந்து அவரது மைக்கை பிடுங்கிச் சென்றனர்.
அம்மாசியப்பன் கேள்விக்கு பதிலளித்த ஆளுநர் ரவி, “நீட் தேர்வு தேவை என்பதில் நான் எப்போதும் உறுதியாக இருப்பேன். மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன்” என்று பதிலளித்தார்.
இந்த சம்பவம், நிகழ்ச்சி நடந்த அரங்கில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து அம்மாசியப்பன் செய்தியாளர்களுக்கும் பேட்டி அளித்தார்.
“நீட் தேர்வுக்கு பின்னால் கோச்சிங் செண்டர்கள் தான் இருக்கிறது. கடந்த ஐந்து வருடமாக தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்று கூறுகிறோம். பள்ளிகளில் பயிற்சி நிறுவனங்களுடன் சேர்ந்து தான் மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது.
எனது மகளுக்காக ரூ.20 லட்சம் செலவு செய்திருக்கிறேன். எல்லா பெற்றோர்களாலும் செலவு செய்ய முடியுமா. ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை செலவு செய்ததை காட்டிலும் இதற்கு தான் அதிகம் செலவாகிறது. நான் ஜெயித்துவிட்டு வந்துதான் இங்கு பேசுகிறேன்… Ban NEET. அரசை நம்புகிறோம்” என ஆவேசமாக பேட்டி அளித்தார்.
ஆளுநருக்கு எதிராக கேள்வி எழுப்பி, மத்திய அரசுக்கு எதிராக பேட்டி அளித்திருந்த நிலையில், அம்மாசியப்பன் கலைஞர் நினைவிடம் மற்றும் அவரது புகைப்படத்துடன் நின்று எடுத்துக்கொண்ட போட்டோக்களும், அவர் திமுக கட்சித் துண்டு அணிந்திருப்பது போன்ற போட்டோக்களும் இணையத்தில் வைரலாகின.
இந்நிலையில் அம்மாசியப்பனுக்கு எதிராக பாஜகவினர் புகார் மனு கொடுத்துள்ளனர்.
சேலம் கிழக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள், மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமையில் சென்று இரும்பாலை செயல் இயக்குனர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.
அந்த மனுவில், “மத்திய அரசு நிறுவனமான சேலம் உருக்கு ஆலையில் பணியாற்றும் அம்மாசியப்பன் மத்திய சிவில் சேவைகள் (நடத்தை) விதிகளை மீறி செயல்பட்டுள்ளார்.
மத்திய அரசின் கொள்கைக்கு எதிராக பேசியுள்ளார். அதோடு தனது பெயரை வெளிப்படையாக ஊடகத்திடம் சொல்லியுள்ளார். அவரது பணி சேர்ப்பு ஆவணத்தை சரிபார்க்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். அவர் பொய்யான இருப்பிட சான்றிதழை அளித்துள்ளதாக நாங்கள் கேள்விப்பட்டோம். அவர் மீது சேலம் உருக்காலை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் சேலம் பாஜக தலைவர் சண்முகநாதன் கூறிகையில், “தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அரசுக்கு எதிரான கருத்துக்களை அம்மாசியப்பன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு அதிகாரியாக இருந்தாலும் சரி, மாநில அரசு அதிகாரிகளாக இருந்தாலும் சரி விதிகளை மீறி செய்தியாளர்களைச் சந்திக்கக் கூடாது.
மேலும் கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த அம்மாசியப்பன் நிலம் கொடுத்த சேலத்தைச் சேர்ந்த நபர் என முறைகேடாக இரும்பாலையில் பணியில் சேர்ந்துள்ளதாகவும், திமுகவிற்கு கொள்கை பரப்புச் செயலாளர் போல பணியாற்றி வருகிறார். இது முழுக்க முழுக்க திமுகவின் அரசியல். அவர் மீது இரும்பாலை நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லையெனில் இரும்பாலை வளாகம் முன்பு பாஜக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்” என தெரிவித்தார்.
ஆளுநரை எதிர்த்து கேள்வி கேட்டவரின் வேலையை காலி செய்யும் வகையில் பாஜகவினர் மனு கொடுத்திருப்பது அரசியல் அரங்கில் பேசு பொருளாகியுள்ளது.
பிரியா
“துறை மாற்றத்தால் மதுரையில் ஜிஎஸ்டி கவுன்சில் நடத்தமுடியவில்லை” – பிடிஆர்