BJP people came with the vote ink and joined the protest!

”எங்கள் ஓட்டை காணவில்லை” -விரலில் மையுடன் போராடிய பாஜகவினர்!

அரசியல்

கோவையில் வாக்காளர் பட்டியலில் இருந்து தங்களது பெயரை நீக்கியதாக பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஏற்கனவே வாக்களித்தவர்கள் இன்று (ஏப்ரல் 25) கலந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் 18வது நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜுன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் 1௦2 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் நடந்தது.

தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற அன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “கோவையில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இல்லை.

ஒரு வீட்டில் கணவருக்கு ஓட்டு உள்ளது, மனைவிக்கு ஓட்டு இல்லை, கணவருக்கு ஒரு வாக்குச்சாவடியிலும், மனைவிக்கு ஒரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வந்த பலருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. பல வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை.

பெயர் நீக்கத்தில் அரசியல் இருக்குமோ என சந்தேகம் எழுகிறது” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கோவையில் இன்று (ஏப்ரல் 25) “எங்கள் ஓட்டை காணவில்லை” என்று பாஜகவினர் மற்றும் பீப்பிள் அண்ணாமலை என்ற குழுவை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.

எங்கள் பெயர் வாக்குபதிவு லிஸ்டில் இல்லாத காரணத்தால் வாக்களிக்க முடியவில்லை என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சில பாஜகவினரின் கைகளில் தேர்தல் வாக்குப்பதிவின்போது வைக்கப்பட்ட மை இருந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே வாக்களித்து விட்டு தங்களுக்கு வாக்கு இல்லை என்று இவர்கள் கூறியது விவாதத்தையும் நகைப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் விளக்கம்:

முன்னதாக கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் இது பற்றி அளித்த விளக்கத்தில், கோவை மாவட்டத்தில் ஜனவரி 22 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 30,81,594 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியலை பொறுத்தவரை அக்டோபர் மாதத்தில் வரைவு வாக்காளர் பட்டியலும், அதன் பின்னர் நடைபெறும் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்திற்கு பின்பு, ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்படுகிறது.

ஒவ்வொருமுறை வாக்காளர் பட்டியல், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வெளியிடப்படும் பொழுதும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சார்ந்தவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களது முன்னிலையிலேயே வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் பொழுது, வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்களை சேர்த்தல், இடம் பெயர்ந்த மற்றும் இறந்த வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்தல் ஆகிய பணிகள் நடைபெறும்.

இப்பணியில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு, வாக்கு சாவடி அலுவலர்கள் மட்டுமன்றி, அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட வாக்கு சாவடி நிலை முகவர்களையும் இப்பணியில் ஈடுபடுத்தி, வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இப்பணியில் அனைத்து நிலைகளிலும், வாக்காளர்கள் தங்களின் ஆட்சேபனையை தெரிவிக்க வழிவகை உள்ளது.

இது தவிர, வாக்காளர் பட்டியலின் தூய்மையை உறுதி செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் படி தொடர் நடவடிக்கை ஆண்டு தோறும்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளக் கோரி, தேர்தல் ஆணையத்தால், பொதுமக்களுக்கு தொடர் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது..

எளிய முறையில் வாக்காளர் தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்து கொள்ள ஏதுவாக, தேசிய வாக்காளர் சேவை தளம் மூலமாகவும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமாகவும் பிரத்யேக வசதி ஏற்படுத்தபட்டு உள்ளது.

எனவே, இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் படி, உரிய நடைமுறைகளை பின்பற்றியே வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது என்பது இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

வாக்காளர்களுக்கு இதில் ஏதேனும் கூடுதல் விபரங்கள் தேவைப்படின் அவர்கள் சம்பந்தப்பட்ட வாக்கு சாவடி நிலைய அலுவலரையோ, வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தையோ, மாவட்ட தேர்தல் அலுவலகத்தையோ அணுகலாம் என கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி” தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்து 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மன்சூரை சேர்த்துக்கொள்ள தயங்கும் காங்கிரஸ் : ஏன்?

மலையாளத்தில் மாஸ் எண்ட்ரி கொடுக்கும் எஸ்.ஜே.சூர்யா

+1
1
+1
6
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *