ராஜன் குறை
எந்த ஓர் அரசாக இருந்தாலும் அதன் முக்கிய பொறுப்பு என்ன? சட்டம், ஒழுங்கை சீராக நிர்வகிப்பது, குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது. ஆனால், மணிப்பூர் என்ற சிறிய மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியால் முழுமையான சட்டம், ஒழுங்கு சீர்குலைவைத் தடுக்க முடியவில்லை. மாநிலத்தில் கடும் வன்முறையும், மோதல்களும் தலைவிரித்து ஆடுகின்றன. மாநில அமைச்சரின் வீடே கொளுத்தப்படுகிறது. நாட்டுக்குப் பெருமை தேடித்தந்த விளையாட்டு வீரர்கள் கண்ணீர் மல்க ஒன்றிய அரசிடம் அமைதியை மீட்டிட வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
ஆனால், பிரதமர் ஒரு வார்த்தை கூட மணிப்பூர் குறித்து பேசாமல் மெளனம் காக்கிறார். எதிர்க்கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் மணிப்பூருக்கு நேரிலேயே சென்று அகதி முகாம்களில் தங்கியுள்ளோருக்கு ஆறுதல் கூறி, அமைதி திரும்ப வேண்டும் என அனைத்து தரப்பினருக்கும் வேண்டுகோள் விடுத்தார். பிரதமரோ ஓர் அறிக்கை கூட வெளியிட மறுக்கிறார்.
பாரதீய ஜனதா கட்சியின் மாநில அரசும் சரி, ஒன்றிய அரசும் சரி… கலவரத்தை தடுக்க வழியில்லாமல் இருக்கின்றன. அதற்கு முக்கிய காரணம், கலவரத்தில் அவர்கள் கட்சிக்கே முக்கிய பங்கு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால் மணிப்பூர் மக்கள் தொகையில் மூன்று பிரிவுகள் இருக்கின்றன. சமவெளியில் வசிக்கும் மெய்தி இனத்தவர் ஐம்பது சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள். இவர்கள் பழைய மன்னராட்சி காலத்திலிருந்து செல்வாக்கு மிக்கவர்களாய் இருக்கிறார்கள்.
மெய்தி மன்னர்கள் பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து கெளடீய வைஷ்ணவ பார்ப்பனீய இந்து மதத்தைப் பின்பற்றினர். இவர்களைத் தவிர தொன்றுதொட்டு மலைப்பகுதியில் வாழ்ந்துவரும் பழங்குடி மக்கள் உள்ளார்கள். அவர்களில் குகி எனப்படும் இனமும், நாகா எனப்படும் இனமும் குறிப்பிடத்தக்கவை. மலைவாழ் மக்களில் கணிசமானோர் கிறிஸ்துவ மதத்தை தழுவியவர்கள்.
கலவரத்துக்கு இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. மலைகளில் குகி இனத்தவர் வசிக்கும் நிலப்பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்று கூறி அவர்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்படுவது. இரண்டாவது, மெய்தி இனத்தவரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இரண்டுமே குகி இனத்தவரை பாதிக்கும் பிரச்சினைகள்.
அதனால் அவர்கள் ஊர்வலமாகச் சென்றபோது கலவரம் மூண்டது. கிறிஸ்துவ வழிபாட்டுத் தலங்கள் குறிவைத்து தாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இன அடையாளங்களுக்கு இடையே இருந்த முரண் இப்போது மத அடையாளம் சார்ந்ததாக மாற்றப்படுவதாகக் கூறுகிறார்கள். இது பாரதீய ஜனதா கட்சியின் மீது ஐயத்தை அதிகரிக்கிறது. ஏனெனில் அவர்கள் அரசியல் எப்போதுமே மதப் பெரும்பான்மைவாத அரசியலாகத்தான் இருந்திருக்கிறது.
கலவரத்தில் ஈடுபடுபவர்கள் முன்னேற்பாட்டுடன், அணி திரண்டு, ஆயுதங்களுடன் செல்வதாக குற்றம்சாட்டப்படுகிறது. உதாரணமாக ஐம்பது இருசக்கர வாகனங்களில் அவர்கள் ஒரு படையாக நீண்ட தூரம் பயணம் செய்து தாக்குதலில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.
ஆளத் திறமையற்ற மோடி அரசு
பரகால பிரபாகர் ராவ் என்பவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணர், அரசியல்வாதி, விமர்சகர். ஒரு காலத்தில் பாஜக கட்சியிலும் இருந்துள்ளார். அதன்பின் பிரஜா ராஜ்யம் கட்சியில் இருந்தார். அதிலிருந்தும் விலகிவிட்டார். அவர் சமீபத்தில் “The Crooked Timber of New India” என்றொரு நூலை எழுதியுள்ளார்.
ஒரு மரப்பலகை வளைந்து போய்விட்டால், கோணலாகி விட்டால் அது எந்த பொருளும் செய்ய பயன்படாது. இந்தியா அப்படி வீணாகிப் போகிறது என்பதுதான் அவர் விமர்சனம். அந்த நூலிலும் சரி, அவர் “The Wire” தளத்துக்கு அளித்த நேர்காணலிலும் சரி, நரேந்திர மோடியும் அவரது அமைச்சர்களும் முற்றிலும் திறமையற்றவர்கள், ஆளத் தெரியாதவர்கள் என்று சாடுகிறார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மோடி அரசு கடுமையாகத் தேக்கமடையச் செய்துள்ளது என்று அவர் குற்றம் சாட்டுகிறார். இவர் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பால் உருவான தேக்கத்தைச் சரி செய்ய உற்பத்தியில் கவனம் குவிக்கும் அரசு, மக்களின் வாங்கும் சக்தியை மேம்படுத்த எதுவும் செய்வதில்லை என்பதை அவர் முக்கிய குற்றச்சாட்டாக வைக்கிறார். இது பல்வேறு பொருளாதார நிபுணர்கள் பாஜக அரசின் மீது வைக்கும் குற்றச்சாட்டாகும்.
பாரதீய ஜனதா கட்சிக்கென்று பொருளாதார கோட்பாடோ, அரசியல் பொருளாதார தத்துவமோ கிடையாது என்று பரகலா பிரபாகர் கூறுகிறார். முன்னொரு காலத்தில் அவர்கள் பொருளாதாரக் கொள்கை காந்தீய சோஷலிசம் என்றார்கள். சுதேசி பொருளாதாரம் என்றார்கள். இன்றைக்குக் கட்டுப்பாடற்ற முதலீட்டிய வளர்ச்சியை, கார்ப்பரேட் நலன்களை, குறிப்பாக அதானி போன்ற தகிடுதத்தக்காரர்களை ஆதரிக்கிறார்கள்.
பாரதீய ஜனதா கட்சியின் அரசியல் வெறுமை
மணிப்பூரில் நடப்பவற்றையும், பரகால பிரபாகர் கூறுவதையும் இணைத்துப் பார்க்கும்போது நமக்கு ஒரு திட்டவட்டமான கேள்வி எழுகிறது. பாரதீய ஜனதா கட்சியிடம் உண்மையிலேயே அரசியல் என்று ஒன்று உள்ளதா என்பதே அந்தக் கேள்வி. அரசியல் என்பதை நாம் இரண்டு விதமாகப் புரிந்து கொள்ளலாம்.
ஒன்று, அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும், ஒரு பெரிய உரையாடலை, சகவாழ்வைக் கட்டமைக்கும் தேசிய அரசியல். இந்த அரசியலை காந்தி, நேரு காலத்திலிருந்து காங்கிரஸ் கட்சி செய்து வருகிறது. சமீபத்தில் அந்த பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகத்தான் ராகுல் காந்தி பாரத் ஜாடோ யாத்ரா என்று தேசத்தை ஒருங்கிணைக்கும் நடைப்பயணத்தை மேற்கொண்டார்.
மற்றொன்று சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வை நீக்க முன்னுரிமை கொடுக்கும், வலியோருக்கு எதிராக எளியோரை அணிதிரட்டும் சமூக நீதி அரசியல். விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழை எளியவர்கள் ஆகியவர்களின் நலன்களை முதன்மைப்படுத்தும் அரசியல். ஆதிக்க ஜாதியினருக்கு எதிராக பிற்படுத்தப்பட்டவர்களை, தாழ்த்தப்பட்டவர்களை அணிதிரட்டி சாமானியர்கள் அரசியல் அதிகாரத்தைப் பெற வகை செய்யும் அரசியல். அதை தி.மு.க, ஆர்.ஜே.டி, வி.சி.க, கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட பல மாநிலக் கட்சிகள், வெகுஜன அரசியல் கட்சிகள் செய்கின்றன.
பாரதீய ஜனதா கட்சி இந்த இரண்டு வகையிலும் சேராது. அவர்கள் அரசியல் என்பது முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் ஆகிய சிறுபான்மை மத அடையாளங்களுக்கு எதிராக பெரும்பான்மை மத அடையாளமாக இந்துக்களைக் கட்டமைப்பது, அணிதிரட்டுவது. இது உள்ளபடி அரசியலே கிடையாது. ஏனெனில் இந்துக்களுக்கும், பிற மதத்தவருக்கும் எந்த அரசியல் முரணும், வர்க்க முரணும் கிடையாது. நாட்டின் அனைத்து துறைகளிலும், பொருளாதார வாழ்விலும், கலாச்சார வாழ்விலும் அனைத்து மதத்தினரும் இணைந்துதான் பங்கேற்கிறார்கள்.
அதில் இன்னொரு முக்கிய பிரச்சினை என்னவென்றால், நாட்டின் முக்கியமான அரசியல் முரணே இந்துக்கள் என்று அடையாளமாகும் மக்களுக்குள் உள்ள ஜாதி முரண்தான். ஜாதி ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களைப் பிறருடன் சமமானவர்களாக,சம வாய்ப்புள்ளவர்களாக மாற்றும் சமூக நீதி அரசியலுக்கும், அதை எதிர்க்கும் பிற்போக்கு சக்திகளுக்கும் இடையிலான முரணே இந்திய மக்களாட்சியின் முக்கிய அரசியல் முரணாக உள்ளது.
மராத்திய பார்ப்பனர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ், இந்து மகாசபா ஆகியவற்றின் உருவாக்கமான பாரதீய ஜனதா கட்சி சமூக நீதி அரசியலை எதிர்கொள்ள எந்த ஒரு கொள்கையையும், கோட்பாட்டையும் வகுக்கவில்லை. முன்னுக்குப் பின் முரணாக நாங்கள் ஜாதி பார்ப்பதில்லை என்பார்கள்; ஆனால் பார்ப்பனர்களின் பிற்போக்கு கொள்கைகளை ஆதரிப்பார்கள். சமஸ்கிருதத்தை படிக்கத் தெரியாமலேயே கொண்டாடுவார்கள். பிள்ளையாருக்கு யானைத் தலையைப் பொருத்தியது பிளாஸ்டிக் சர்ஜரி என்று பிதற்றுவார்கள்.
இத்தகைய காரணங்களால் பாரதீய ஜனதா கட்சியால் நேர்மறையாக ஓர் அரசியல் அணி திரட்டலைச் செய்யவே முடியாது. அவர்களின் உண்மையான ஆதரவு தளம் என்பது பிற்போக்கு மனோபாவம் கொண்ட பார்ப்பன, உயர்ஜாதி சக்திகளும், தடையின்றி பொருளாதார சுரண்டலை மேற்கொள்ள விரும்பும் பனியா முதலீட்டிய சக்திகளுமாகத்தான் இருக்க முடியும்.
ஆனால், அது வெகுஜன அரசியலுக்கு போதாது என்பதால் மற்ற கட்சிகளைப் பிளப்பது, கட்சி அணியினரையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் விலைக்கு வாங்குவது என்பது போன்ற வழிமுறைகளில்தான் அவர்கள் பல மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்க முடிகிறது. சமீபத்திய செய்தி மீண்டும் தேசியவாத காங்கிரஸை பிளந்து அஜித் பவாரை மராத்திய அரசில் சேர்த்திருப்பதுதான்.
முழுக்க முழுக்க சந்தர்ப்பவாத அரசியல் என்பதைத்தவிர இதில் கொள்கையோ, லட்சியமோ எதுவும் கிடையாது. ஒவ்வொரு மாநிலத்திலும் பிற கட்சியினரை விலைக்கு வாங்குவதையே அரசியலாகக் கொண்டுள்ளார்கள். இதன் காரணமாகத்தான் கர்நாடகாவில் வரலாறு காணாத ஊழல் ஆட்சியை எடியூரப்பா, எஸ்.ஆர்.பொம்மை தலைமையில் உருவாக்கினார்கள். மத்தியப் பிரதேசத்தில் பூதாகாரமான வியாபம் ஊழலை அனுமதித்தார்கள்.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் அடாவடி செயல்பாடுகள்
இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம், அதன் சுயாட்சி நிறுவனங்கள், நிர்வாக நெறிமுறைகள் அனைத்தையும் திட்டமிட்டுச் சீர்குலைத்து வருகிறது பாரதீய ஜனதா கட்சி. அதன் மிகச் சிறந்த உதாரணமே தமிழ்நாட்டு ஆளுநர் ரவியின் அத்துமீறிய செயல்பாடுகள்.
சென்ற வாரம் ஆர்.என்.ரவி நடத்திய அத்துமீறல் நாடெங்கும் கண்டிக்கப்பட்டது. அமலாக்கத் துறையால் நீதிமன்றக் காவலில் எடுக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழ்நாட்டு அமைச்சரவையிலிருந்து நீக்குவதாக தான்தோன்றித்தனமாக அறிவித்தார். ஒரு சில மணி நேரங்களிலேயே உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்படி அந்த உத்தரவை நிறுத்திவைப்பதாகக் கூறினார்.
மாநில முதல்வர் ஸ்டாலின், அவரது இரண்டு கடிதங்களுமே அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது என்பதால் மாநில அரசால் புறக்கணிக்கப்படுவதாகப் பதில் எழுதினார். மாநிலத்தின், நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளும் முதல்வருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
ஆளுநர் தன் நடவடிக்கைக்குச் சொல்லும் காரணம் வேடிக்கையானது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீது விசாரணை நடைபெறுவதால் அவர் பதவியில் நீடித்தால் சாட்சியங்களைக் கலைத்து விடுவாராம். இது போன்ற ஓர் அபத்தமான வாதத்தை எப்படிக் கூற முடிகிறது என்பதுதான் வியப்புக்குரிய செய்தி.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2014ஆம் ஆண்டு பதவியேற்றபோது அவர் மீது சி.பி.ஐ தொடர்ந்த கிரிமினல் வழக்கு, போலி என் கெளண்டரில் ஷஹாபுதீன் கொல்லப்பட்ட வழக்கு, பம்பாய் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. கிரிமினல் வழக்கை எதிர்கொண்டுள்ளவர் உள்துறை அமைச்சராகலாமா என்று யாராவது கேட்டார்களா?
பின்னர் 2019 தேர்தலுக்குப் பிறகு அமித் ஷாவுக்கு துணை மந்திரிகளாக (Ministers of state) மூன்று பேரை நியமித்தார் மோடி. அதில் அஜய் மிஸ்ரா தேனி என்ற லக்கிம்பூர் புகழ் அமைச்சர் மீது கொலை வழக்கு ஒன்று நிலுவையில் இருந்தது. உள்துறை அமைச்சகத்தில் இணைய எப்படிப்பட்ட தகுதி அது என்று வியக்காமல் இருக்க முடியாது.
அடுத்து நிதிஷ் பிர்மானிக் என்பவர். இவர் தேர்தலின் போது கொடுத்த தகவலின்படி இவர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தன. கொலை வழக்கு, கொலை செய்ய முயற்சி, கொள்ளையடிப்பதற்கான தயாரிப்பில் ஈடுபட்டது, பெண்களை இழிவாக நடத்தியது, ஏமாற்று என ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இவர் மீது பதியப்பட்டு வழக்குகள் நடந்துகொண்டிருந்தன.
மூன்றாவதாக நித்தியானந்த் ராய் என்பவர் மீதும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்தன. ஆக, உள்துறை அமைச்சகம் என்பதே பல்வேறு கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பணியாற்றும் இடமாக மாறியதாக பத்திரிகை செய்திகள் கூறின.
இப்படிப்பட்ட பின்னணியில்தான் ஆர்.என்.ரவி, செந்தில் பாலாஜி விஷயத்தில் எடுத்த நடவடிக்கையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அத்துமீறி அடாவடியாகச் செயல்படும் நோக்கத்தைத் தவிர நாம் வேறு எதையாவது அதில் பார்க்க முடியுமா என்பதே கேள்வி.
இது ஒரு புறமிருக்க, ஆர்.என்.ரவியின் ஓயாத சனாதன பிரச்சாரம் இன்னொரு சுவாரஸ்யம். சங்கராச்சாரியார் கூட இப்படி தினசரி சனாதனத்துக்குப் புது விளக்கம் கூற மாட்டார். இதை ஏன் ஆர்.என்.ரவி செய்கிறார் என்பதையும் நாம் பரிசீலிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பாஜக-வை வளர்க்க பார்ப்பனரல்லாதோர் தலைமை முக்கியம் என்று கருதி மாஜி ஐ.பி.எஸ் அண்ணாமலையை மாநில தலைவராக்கியுள்ளார்கள். அவர் கட்சியிலுள்ள செல்வாக்கான பார்ப்பனர்கள் பலரை ஓரம் கட்டி வருகிறார். அவருக்கு எதிராக எஸ்.வி.சேகர் போன்ற பார்ப்பன பிரமுகர்கள் கடுமையாக போர்க்குரல் எழுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில், பார்ப்பனர்களை மகிழ்விக்கவே ஆளுநர் தினமும் சனாதன புகழ் பாடுகிறாரோ என்று எண்ணாமலிருக்க முடியவில்லை. சனாதனம் என்றால் என்னவென்று திட்டவட்டமாகக் கூறாமல் வள்ளுவரும் சனாதனம், வள்ளலாரும் சனாதனம் என்றெல்லாம் அடித்து விடுவதன் மூலம் சனாதனம் என்ற வார்த்தையை எப்படியாவது நல்ல வார்த்தையாக மாற்றிவிட வேண்டும் என்ற பார்ப்பனர்களின் தவிப்புக்கு ஆர்.என்.ரவி வடிகாலாக விளங்குகிறார்.
பாரதீய ஜனதா கட்சியின் உள்ளீடற்ற வெற்று அரசியலின் முக்கிய வெளிப்பாடுதான் ஆர்.என்.ரவியின் சனாதன பிரச்சாரம். பார்ப்பனீயத்தையும் காப்பாற்ற வேண்டும், பார்ப்பனரல்லாதோரையும் இந்து என்று அணிதிரட்ட வேண்டும் என்றால் என்ன தான் செய்வார்கள் பாவம். அர்த்தமற்ற அரசியலும், அலங்கோல ஆட்சியுமாக பாஜக செயல்பாட்டின் அங்கமே ஆர்.என்.ரவி.
கட்டுரையாளர் குறிப்பு:
ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com