செஸ் விளம்பரத்தில் மோடி படம் ஒட்டிய பாஜக!

Published On:

| By christopher

சென்னையில் செஸ் விளம்பர பேனரில் மோடியின் புகைப்படத்தை பாஜகவினர் ஒட்டியுள்ளனர்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. நேரு உள் விளையாட்டரங்கில் நாளை மாலை நடைபெறும் துவக்க விழாவில் பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்தியாவில் முதன்முறையாக நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகிறது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் அதிகாரபூர்வ சின்னமான ‘தம்பி’ சிலை வைக்கப்பட்டுள்ளது. நேப்பியர் பாலம் செஸ் போர்டு போன்று வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. கலைவாணர் அரங்கம் உள்ளிட்ட பெரிய கட்டிடங்களில் செஸ் ஒலிம்பியாட் விளம்பர பலூன் பறக்கவிடப்பட்டுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் செஸ் வீரர்களுக்கான வரவேற்பு பாடல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இந்த பாடல் உட்பட செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோடி படம் ஏன் இடம்பெறாமல் முதல்வர் ஸ்டாலின் படம் மட்டும் உள்ளது என்று பாஜகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழகத்தின் பல மாவட்டங்களில் நடந்த செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இதுகுறித்து கேள்வி எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வரவேற்பு விளம்பரங்களில் முதலமைச்சருக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் பிரதமர் மோடியின் உருவப்படம் இடம் பெற வேண்டும். இல்லை என்றால் பாஜக சார்பில் பிரதமர் மோடியை வரவேற்று தனியாக பேனர்கள் வைக்கப்படும் என்று பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்திருந்தார்.

இந்தசூழலில் சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விழாவிற்காக தமிழக அரசு வைத்துள்ள விளம்பரங்களில் பிரதமர் மோடி படத்தை பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி ஒட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அதில், தமிழகத்தில் நடக்கவுள்ள செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பிரதமரின் புகைப்படத்தை இடம்பெற செய்யாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தமிழக அரசு தவிர்த்துள்ளது. தற்போது செஸ் போட்டி விளம்பர பாதகையில் நான் பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஒட்டியது போன்று மற்ற மாவட்ட பாஜக தலைவர்களும் ஒட்ட வேண்டும் என்று பேசி உள்ளார்.

பாஜகவினரின் இந்த செயலுக்கு மன்னார்குடி திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். “மற்றவரின் உழைப்பு மீது ஸ்டிக்கர் ஒட்டும் பழக்கத்தை தங்களது கூட்டாளிகளிடமிருந்து பாஜகவினர் கற்றுக்கொண்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பொதுச்சொத்துகளை வேண்டுமென்றே பாஜகவினர் கேவலப்படுத்துவது போலீசாருக்கு புரியவில்லையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அவரைத் தொடர்ந்து திமுகவினர் பலரும் பாஜகவினரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel