வைஃபை ஆன் செய்ததும் அதிமுக பற்றிய அப்டேட்டுகள் யு ட்யூபில் வழிந்தன. அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. அதுமட்டுமல்ல ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்த வேட்பாளரான தென்னரசுதான் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
தீர்ப்புக்குப் பிறகு சென்னையில் இருந்து அவசரமாக நேற்று இரவு ஈரோட்டில் அவசர ஆலோசனை நடத்தினார் எடப்பாடி பழனிச்சாமி. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அவை தலைவர் தமிழ் மகன் உசேன் மூலமாக தென்னரசுவை ஆதரிக்கும் கடித படிவத்தை இறுதி செய்து இன்று காலை அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் சேர்த்து விட்டார்.
பிப்ரவரி 4ஆம் தேதி காலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை ஓ பன்னீர்செல்வம் ஆதரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து பிப்ரவரி 4 பிற்பகலில் ஓ பன்னீர்செல்வம் ஒரு அறிக்கையை வெளியிட்டார். செய்தியாளர்களை சந்தித்த பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் வைத்திலிங்கம், இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் அதிமுக வேட்பாளரை தான் ஆதரிப்பதாக பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையை வாசித்தார்.
தனது அறிக்கையை செய்தியாளர் சந்திப்பின் முன் நின்று சொல்வதற்கு கூட பன்னீர்செல்வம் விருப்பமில்லாமல் அப்செட் ஆகி இருக்கிறார். இதே நேரம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் பன்னீரை விட எடப்பாடி பழனிசாமிக்கு அதிக லாபம் இருப்பதை அறிந்த பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள்.
பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான மருது அழகுராஜ் தனது சமூக தள பக்கத்தில் இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றியும் அதற்குப் பிறகான நகர்வுகள் பற்றியும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
’எம்ஜிஆர் வகுத்துத் தந்த கட்சியின் அடிப்படை சட்ட விதிகள், எடப்பாடியின் நிதியாலும் சரி வரப் புரிந்து கொள்ளப்படாத நீதியாலும் கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கப்படுகிறது’ என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் அதிமுக அண்ணாமலை- எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சமுதாய ரீதியில் இணைந்து செயல்படுவதாகவும் அவர் பகிரங்கமாக பதிவிட்டிருக்கிறார்.
மேலும் கடைசிவரை பாஜகவுக்கு விசுவாசமாக இருந்ததற்கு பன்னீர் செல்வத்துக்கு அண்ணாமலை கொடுத்த பரிசு இதுதான் என்றும் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கொந்தளிக்கிறார்கள்.
இப்போது தேர்தல் ஆணையத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் சார்பில் கொடுக்கப்படும் படிவத்தில் கையெழுத்திடும் பொதுக்குழு உறுப்பினர்கள் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் கலந்து கொண்டவர்கள் ஆவார்கள்.
அந்த பொதுக் குழுவை எதிர்த்து தான் பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அந்த வழக்கு கடந்த ஆறு மாத காலமாக நடந்து தீர்ப்புக்காக தற்போது ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் எந்த பொதுக்குழுவை எதிர்த்து பன்னீர்செல்வம் வழக்கு நடத்தினாரோ, அந்தப் பொதுக்குழு உறுப்பினர்கள் சேர்ந்து இரட்டை இலைக்கான வேட்பாளரை கையெழுத்திட்டு தேர்தல் ஆணையத்திடம் கொடுக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எந்த மாதிரி எடுத்துக் கொள்வது என்கிறார்கள் பன்னீர் ஆதரவாளர்கள்.
எது நடந்தாலும் பாஜக சொல் படி இன்னமும் பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டிருக்கிறார்… ஆனால் பாஜகவோ அதிமுக என்ற கட்சி எடப்பாடி வசம் இருப்பதை உறுதி செய்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு எடப்பாடியை ஆதரிக்க துணிந்து விட்டது.
இந்த இடைத்தேர்தல் முடிந்த பிறகு பன்னீர்செல்வத்தை மேலும் ஓரங்கட்டி அரசியலில் இருந்து அகற்றும் முடிவில் எடப்பாடி தீவிரமாக செயல்படுவார். அதை பாஜக பார்த்துக் கொண்டுதான் இருக்கப் போகிறது.
எனவே இப்போது பாஜக அல்லது திமுக உள்ளிட்ட வேறு கட்சிகளுக்கு சென்று விடுவது என்ற ஆலோசனைகளில் இறங்கி விட்டார்கள் பன்னீர்செல்வத்தை சுற்றி இருக்கும் ஆதரவாளர்களே” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
வாத்தி இசை வெளியீட்டு விழா: முறுக்கு மீசை, தாடியுடன் கெத்து காட்டிய தனுஷ்
பரந்தூரில் நிலம் கையகப்படுத்துவது எங்கள் வேலை அல்ல! : மத்திய அமைச்சர்