எதிர்க்கட்சிகளை பாஜக வெளிப்படையாகவே மிரட்டுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மணீஷ் சிசோடியா கைது குறித்து கூறியுள்ளார்.
டெல்லி முன்னாள் துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா டெல்லி மதுபானக் கொள்கை மூலம் ஊழல் செய்ததாக சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.
தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே மணீஷ் சிசோடியாவை விடுதலை செய்ய வேண்டுமென 9 தலைவர்கள் பிரதமர் மோடிக்குக் கூட்டாகக் கடிதம் எழுதியிருந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தனியாகக் கடிதம் எழுதினார்.

அதில், சட்ட நடைமுறைகளையும், 70 ஆண்டுகள் பழமையான நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் கொச்சைப்படுத்திக் கைது செய்யப்பட்டுள்ள மணீஷ் சிசோடியாவை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் உங்களில் ஒருவன் கேள்வி பதில் தொடரில் முதல்வர் ஸ்டாலினிடம் மணீஷ் சிசோடியா கைது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர், `எதிர்க்கட்சிகளை மறைமுகமாக அல்ல, வெளிப்படையாகவே மிரட்டுகிறது பாஜக என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இது.
தன் வசம் இருக்கும் விசாரணை அமைப்புகளை அரசியல் நோக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது கண்டிக்கத்தக்கது. பிரதமருக்கு இது தொடர்பாகக் கடிதம் எழுதி இருக்கிறேன். எதிர்க்கட்சிகளைத் தேர்தல் மூலமாக வெல்லலாமே தவிர விசாரணை ஆணையங்கள் மூலமாக வெல்ல நினைக்கக் கூடாது` என குறிப்பிட்டுள்ளார்.
பிரியா