புதுச்சேரி மாநிலத்தில் பாஜகவும் என்.ஆர்.காங்கிரஸும் இணைந்து செயல்படும் வேளையில், பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுமாறு என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் முதல்வர் என்.ரெங்கசாமியை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15ஆவது சட்டபேரவைக்கான தேர்தல் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்து முடிந்தது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளையும் பாஜக 6 தொகுதிகளையும் வென்றன. இதன்மூலம் 16 தொகுதிகளைக் கைப்பற்றிய என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. அதன்படி, புதுச்சேரி முதல்வராக 4ஆவது முறையாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் என்.ரங்கசாமி, 2021ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி பதவியேற்றார்.
ஆனால், முதல்வர் பதவியேற்புக்குப் பின் அமைச்சரவை பதவியேற்கவில்லை. அதற்கு, அம்மாநிலத்தில் நிலவிய இழுபறியே காரணம். நீண்ட இழுபறிக்கு பிறகு 2021ம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி புதுச்சேரி துணைநிலை ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜனிடம் அமைச்சரவை பட்டியலை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
அதில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லட்சுமி நாராயணன், ஜெயக்குமார் மற்றும் சந்திர பிரியங்கா ஆகிய 3 பேரும், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நமச்சிவாயம் மற்றும் சாய் சரவணன் குமார் ஆகிய 2 பேரும் இடம்பெற்றிருந்தனர். இதையடுத்து அவர்கள், ஜூன் 27ம் தேதி (2021) பதவியேற்றுக் கொண்டனர்.
அதாவது, முதல்வர் என்.ரங்கசாமி பதவியேற்று கிட்டத்தட்ட ஒன்றரை மாதத்துக்குப் பிறகு இந்த 5 அமைச்சர்களும் பதவியேற்றனர். அதேநேரத்தில், பாஜக அமைச்சர்களுடன் இணைந்து ஆட்சி நடத்திவரும் முதல்வர் ரங்கசாமி, தாம் பதவியேற்று ஒரு வருடம் காலமாகியும், பிரதமர் மோடியைப் போய்ச் சந்திக்கவில்லை. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, அதற்கு அடுத்த நாள் (ஆகஸ்ட் 9) பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பட்ஜெட் தாக்கலுக்கான ஒப்புதல், மாநிலத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார். பிரதமர் மோடியிடம் முதல்வர் ரங்கசாமி கோரிக்கை வைத்ததையடுத்து, மத்திய அரசும் அதற்கு ஒப்புதல் வழங்கியது. அதன்பிற்கு, புதுவை மாநிலத்தில் 2022 – 23ஆம் நிதி ஆண்டிற்காக ரூ. 10,696.61 கோடிக்கான பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் (ஆகஸ்ட் 11) தாக்கல் செய்து உரையாற்றினார்.
அப்போது, பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கப்படும் எனவும் அவர் அப்போது அறிவித்தார். அது மட்டுமின்றி முதல்வர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநரான தமிழிசை செளந்தரராஜனிடமும் இணக்கமாகவே நடந்துவருகிறார். அரசு விழாவோ அல்லது பிற நிகழ்வுகளிலோ இருவரும் இணைந்தே செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஆகஸ்ட் 12ம் தேதி, சென்னை திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் கோயிலில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, சாமி தரிசனம் செய்தார்.
அப்போது புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும் கோயிலுக்கு வருகை தந்தார். இதனைத்தொடர்ந்து இருவரும் இணைந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது தமிழிசை சௌந்தரராஜன், ராக்ஷா பந்தனையொட்டி, ரங்கசாமிக்கு ராக்கி கயிறு கட்டினார்.
அதுபோல், ஆகஸ்ட் 19ம் தேதி நடைபெற்ற புதுச்சேரி வீராம்பட்டினத்தில் நடைபெற்ற தேரோட்டத்தில், துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட பலர் தேரை வடம்பிடித்து இழுத்தனர். இப்படி, புதுச்சேரி மாநிலத்தில் பாஜகவும் என்.ஆர்.காங்கிரஸும் இணைந்து செயல்படும் வேளையில், பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுமாறு என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் முதல்வர் என்.ரெங்கசாமியை நேரில் சந்தித்து இன்று (செப்டம்பர் 26) வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்த வீடியோவில், “நாம் ஏன் நம் மாநில உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டும். பாஜக யாரால் வெற்றிபெற்றது என்று எல்லோருக்கும் தெரியும். இதில் சந்தேகம் இருந்தால் மீண்டும் அவர்கள் தேர்தலை சந்திக்கட்டும். முதல்வர் நீங்கள்தான் எல்லாவற்றையும் பேச வேண்டும்” என அவர்கள் முதல்வர் ரங்கசாமியிடம் கோரிக்கை வைக்கின்றனர்.
ஜெ.பிரகாஷ்
ஆர்.எஸ்.எஸ். பேரணி: உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு! அன்று ஆடியோ, இன்று வீடியோ: திமுக உட்கட்சித் தேர்தலில் திருப்பங்கள்!
அப்ப பாண்டிச்சேரி இனிமேல் பீகார் போலவா, இல்ல மகாராஷ்ட்ரா போலவா,,,?
நச்சு சக்தி பிஜேபி மாநில கட்சியை அழித்து விடும்