வைஃபை ஆன் செய்ததும் வாட்ஸ் அப் கேள்விகளை எதிர்பாராமல் ஒரு தகவலை வேகமாக டைப் செய்யத் தொடங்கியது.
”தமிழக பாஜக பற்றி பல்வேறு சர்ச்சைக்குரிய விஷயங்கள் ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் பாரதிய ஜனதா கட்சி முன்பு போல இல்லை. தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் வளர்ந்து வருகிறது என்று அந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் சொல்வது இயல்பு.
ஆனால் எதிர்க் கட்சியான திமுகவின் முக்கிய அமைச்சர்கள் பகிரங்கமாக மேடைகளில் பாஜக பற்றி கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
சமீபத்தில் திருச்சியில் நடந்த திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே. என். நேரு பேசும்போது திமுகவுக்கும் அதிமுகவுக்குமான போட்டி அண்ணன் தம்பி போட்டியாக இருந்தது.
ஆனால் இப்போது சகல அதிகாரங்களையும் கையில் வைத்திருக்கும் பாஜகவோடு மோத வேண்டி இருக்கிறது என்று பேசினார்.
அடுத்த சில நாட்களில் வேலூர் மாவட்டத்தில் திமுக பொதுக்குழு உறுப்பினர் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளரான மூத்த அமைச்சர் துரைமுருகன்,
’பாஜக பிசாசு போல உருவெடுத்து வருகிறது. எதிரியாக அதிமுகவை பார்த்தோம். ஆனால் இப்போது பாஜக வளர்ந்து வருகிறது. அதனால் பணபலம் அதிகார பலத்தில் நம்முடன் சமமாக போராடுவார்கள். அவர்களை வீழ்த்துவதற்கு நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’ என்று பேசினார்.
இவ்வாறு திமுகவை சேர்ந்தவர்கள், அதுவும் களப்பணியில் புகழ்பெற்ற நேரு போன்றவர்களே பாஜக கள ரீதியாக வளர்வதாகவும் அதை எதிர்த்து நாம் போராட வேண்டும் என்றும் பொது மேடைகளில் பகிரங்கமாக பேசியிருக்கிறார்கள்.
சமீபத்தில் தமிழக பாஜகவின் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலையும், ‘மோடி உச்சபட்ச செல்வாக்கோடு இருக்கும் இந்த நேரத்தில் நாம் பாஜகவை தமிழகத்தில் வளர்க்க வேண்டும். இதை நான் மோடியிடமே சொல்லி இருக்கிறேன்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விரிவான ஆய்வுகளோடு டெல்லி மேலிடத்துக்கு ஒரு அறிக்கையை அனுப்பி வைத்துள்ளார்.
அதில் தமிழக பாஜக பொதுமக்களிடம் நன்றாக போய் சேர்ந்துள்ளது. ஊடகங்கள் உதவியோடும் சமூக தளங்களிலும் நாம் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். ஆனால் களத்தில் கட்டமைப்பு ரீதியாக கட்சி வளர்ந்திருக்கிறதா என்றால் இன்னும் நான் எதிர்பார்த்த அளவுக்கு பாஜக வளரவில்லை,
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆர்ப்பாட்டங்களுக்கும் பொதுக் கூட்டங்களுக்கும் செல்லும்போது நமக்கு கூட்டம் அதிகமாக வருகிறது. அதே நேரம் தமிழகத்தில் ஏற்கனவே பல தலைவர்களுக்கு திரண்ட கூட்டம் தேர்தலின்போது ஓட்டாக மாறியிருக்கிறதா என்பது சந்தேகம் தான்.
இந்த வகையில் தமிழக பாஜக இன்னும் எதிர்பார்த்த வளர்ச்சியை அடையவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு ஒன்றியத்திலும் அந்த இலக்கை எட்ட நாம் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். பூத் கமிட்டியை அமைத்து கொண்டிருக்கிறோம்’ என்று அந்த ரிப்போர்ட்டில் தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை.
மத்திய உளவுத்துறை உட்பட தேசிய தலைமை மேற்கொண்ட ஆய்வுகளில் தமிழகத்தில் பாஜக ஏறுமுகமாக இருக்கிறது என்றே ரிசல்ட் வந்திருக்கிறது. அதே நேரம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இங்கே கட்சி வளர்ச்சி பற்றி தான் மிகைப்படுத்தி சொல்லிவிட்டதாக பிற்காலத்தில் எந்த புகாரும் தன் மீது வந்துவிடக்கூடாது என்பதற்காக உள்ளது உள்ளபடியான நிலையை தலைமையிடம் எடுத்துச் சென்றிருக்கிறார்.
இதனால் அண்ணாமலையை வியப்பாக பார்த்திருக்கிறது தேசிய தலைமை என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
டிஎன்பிஎஸ்சி திட்ட அறிக்கையை மாற்றியமைத்திடுக : பன்னீர்
“குறுகிய பார்வை” : தீபிகா ஆடை சர்ச்சை குறித்து ஷாருக்