உயர்சாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ஆதரவு தெரிவித்துள்ளார்.
உயர் ஜாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை அறிவித்தது.
அப்போது, உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பர்திவாலா, பேலா திரிவேதி ஆகியோர் தீர்ப்பளித்தனர்.
10 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என தலைமை நீதிபதி லலித் மற்றும் நீதிபதி ரவீந்திர பட் ஆகியோர் தீர்ப்பளித்தனர்.
எனினும் இந்த வழக்கில் அதிகபட்சமாக மூன்று நீதிபதிகள் உயர் ஜாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு என தீர்ப்பளித்துள்ளதால் அந்த தீர்ப்பு இறுதியாக ஏற்றுக்கொள்ளப்படும்.
இதனையடுத்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகவும், ஆதரவாகவும் பல்வேறு கட்சியினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தீர்ப்பை வரவேற்கிறோம்!
அதன்படி உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி ஆதரவு தெரிவித்துள்ளார்.
அவர், “உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்கிறோம். இந்த சட்டம் வரவேண்டும். இந்தியா முழுமைக்கும் பொதுவானது என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தினோம். இந்த நாட்டில் இருக்கிற அனைவருக்கம் சம உரிமை, சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
இந்த சட்டமானது ஏற்கனவே அமலில் இருக்கும் இடஒதுக்கீட்டிற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு இருக்கிறது என்பதை மிக மிக தெளிவாக இந்த அமர்வின் தீர்ப்பு தெளிவுப்படுத்தி இருக்கிறது.
ஜாதி என்பதை தாண்டி மனிதநேயம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தான் இன்று இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.” என்று நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
10% இட ஒதுக்கீடு : ”அடிப்படை தரவு இன்றி வழங்கப்பட்ட தீர்ப்பு!” – பாமக வழக்கறிஞர் பாலு
“நூற்றாண்டு கால போராட்டத்தில் பின்னடைவு”- 10% இட ஒதுக்கீடு தீர்ப்பு குறித்து ஸ்டாலின்