பாஜக எம்பிக்கள் கபடியை ஊக்குவிக்க வேண்டும்: மோடி

Published On:

| By Prakash

’தினைப் பொருட்கள் குறித்து பிரசாரம் செய்ய வேண்டும்’ என பிரதமர் மோடி பாஜக எம்.பிக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், டிசம்பர் 29 வரை நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தொடரில், இந்திய – சீனா எல்லையில் வீரர்கள் மோதிக் கொண்ட விவாகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் வரும் நாள்களில் தாக்கல் செய்யப்பட வேண்டிய மசோதாக்கள் குறித்து பாஜக எம்பிக்களுடன் பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (டிசம்பர் 20) ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பிரகலாத் ஜோஷி, முரளிதரண், பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் பங்குபெற்றனர்.

இதில் பேசிய பிரதமர் மோடி, ”பாஜக எம்பிக்கள் தாங்கள் நடத்தும் கூட்டங்களில் தினைப் பொருட்கள் குறித்து பிரச்சாரம் செய்ய வேண்டும். தானியங்களின் நுகர்வு அதிகரிப்பது விவசாயிகளுக்கு நிதி உதவியாக இருக்கும். அதேபோல், விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதை பாஜக எம்பிக்கள் ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக, கபடி உள்ளிட்ட இந்திய விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரகலாத் ஜோஷி, ”ஐநாவுக்கு இந்திய அரசு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் 2023ஆம் ஆண்டு சர்வதேச தினை ஆண்டாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தினை உணவு வகைகளில் உள்ள ஊட்டச்சத்து குறித்து பிரசாரம் செய்ய பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும், தினை உணவின் முக்கியத்துவத்தை கூறும் வகையில், ஜி20 விருந்தினர்களுக்கு தினை வகையிலான உணவை வழங்கலாம் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்” என்றார்.

2023ஆம் ஆண்டு சர்வதேச தினை ஆண்டாக கொண்டாடப்படும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று (டிசம்பர் 20) தினை வகைகளை கொண்ட உணவுகள் சமைக்கப்பட்டது. இதற்காக கர்நாடக மாநிலத்திலிருந்து பிரபல சமையல் கலைஞர் வரவழைக்கப்பட்டிருந்தார்.

இந்த மதிய உணவில் ராகி தோசை, ராகி ரொட்டி, தினை தயிர் சாதம், ராகி அல்வா, தினை வகைகளான கேக், குளிர்பானங்கள் என 18 வகை உணவுகள் தயார் செய்யப்பட்டன. இவ்விருந்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இவ்விருந்தை, மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஏற்பாடு செய்திருந்தார்.

ஜெ.பிரகாஷ்

சென்னை குப்பை லாரி நேர வழக்கு: தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

மா.செ. கூட்டம்: பன்னீருக்கு போட்டியாய் எடப்பாடியும் அறிவிப்பு!