மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பாஜகவைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து அரசியலில் இருந்து விலகியுள்ளனர்.
இன்று காலை பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும் டெல்லி கிழக்கு தொகுதி பாஜக எம்பியாக இருப்பவருமான கௌதம் கம்பீர், தன்னை அரசியலிலிருந்து விடுவிக்குமாறு பாஜக தேசிய தலைவர் ஜே. பி. நட்டாவுக்கு கோரிக்கை வைத்தார்.
கிரிக்கெட் பொறுப்புகளில் கவனம் செலுத்த உள்ளதால் அரசியல் பணியிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ள கௌதம் கம்பீர், மக்களுக்குச் சேவை செய்ய வாய்ப்பு அளித்த பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் நன்றி என கூறியிருந்தார்.
இது டெல்லி பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், மற்றொரு பாஜக எம்.பி.யான ஜெயந்த் சின்ஹாவும் விலகியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசாரிபாக் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி.யான ஜெயந்த் சின்ஹா, நேரடி தேர்தல் கடமைகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு ஜே.பி.நட்டாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
“உலகளாவிய பருவநிலை மாற்றம் தொடர்பான தனது வேலைகளில் கவனம் செலுத்த வேண்டி இருப்பதால் தன்னை தேர்தல் அரசியலிலிருந்து விடுவிக்க வேண்டும்.
கடந்த பத்து ஆண்டுகளாக ஹசாரிபாக் மக்களுக்குச் சேவை செய்யும் பாக்கியம் கிடைத்தது. எனக்கு வாய்ப்பளித்த பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு நன்றி” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பாஜக தனது விரைவில் முதல்கட்டமான 100 மக்களவை தொகுதி வேட்பாளர்களின் பட்டியலை அறிவிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த 29-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த தேர்தலில் புதிய முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க பாஜக தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படும் நிலையில்,
இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து இரு எம்.பி.க்கள் விலகியிருப்பது பாஜகவுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
தற்போது விலகியுள்ள ஜெயந்த் சின்ஹா, விமான போக்குவரத்துத் துறையின் முன்னாள் இணை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திமுக தொகுதி பங்கீட்டு குழுவிடம் வேல்முருகன் வைத்த இரண்டு டிமாண்ட்!
ஜோஷ்வா இமை போல் காக்க – விமர்சனம்!