மீண்டும் சர்ச்சை : கோபுரத்தின் மீது ஏறி கொடியேற்றிய பாஜகவினர்!

அரசியல்

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் வீடுகள், உயர்ந்த கட்டடங்கள், வணிக நிறுவனங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ள நிலையில், கடலூரில் சிவன் கோயிலின் ராஜகோபுரத்தின் மீது ஏறி பாஜகவினர் கொடியேற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீப நாட்களாக பாஜகவினரின் செயல்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி மதுரையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசியது, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள பாரத மாதா ஆலயத்திற்குள் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தது, பல்கலைக் கழக தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தது, பொள்ளாச்சியில் லாரி மீது கல் வீசி பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியது என அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கினர்.

இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 14), காலையில் கடலூர் தலைநகரான திருப்பாதிரிப்புலியூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாடலீஸ்வரர் சிவன் கோயிலின் ராஜகோபுரத்தின் உச்சியில் ஏறி தேசிய கொடியேற்றி செல்ஃபி எடுத்துக்கொண்டு சோசியல் மீடியாக்களிலும் பகிர்ந்துள்ளனர் பாஜகவினர்.

இந்த விவகாரத்தைப்பற்றி கோயில் நிர்வாகத்தினரிடம் கேட்டோம்… “கோயில் ராஜகோபுரத்தின் சாவி கோயிலுக்கு பந்தல் போடும் பரிசு என்ற பரசுராமன் வைத்திருந்தார். நீண்டநாட்களாகக் கோயிலின் நம்பிக்கைக்குரியவராகச் சேவை செய்துவருகிறார் என்று அவரிடமிருந்து சாவியை வாங்காமல் விட்டுவிட்டோம். நேற்று முன் தினம் ஆடிமாதம் விசேஷம் என்பதால் கோபுரத்தின் மேல் விளக்கு ஏற்ற அனுமதித்தோம். இதனால் சாவியை பரசுராமனே வைத்திருந்தார்.

அதைப் பயன் படுத்திக்கொண்டு பாஜக மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் நிர்வாகிகளை அழைத்து வந்து ராஜகோபுரத்தின் மேலே ஏறி கொடியேற்றிவிட்டு செல்ஃபி எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள் பாஜகவினர். இதுதொடர்பாக போட்டோ ஆதாரத்துடன் புகார் கொடுத்து எஃப்ஐஆர் போடச்சொல்லி நேற்று இரவு 8.00 மணி வரையில் போராடியும் பலன் இல்லை” என்கிறார்கள் பாடலீஸ்வரார் கோயில் நிர்வாகத்தினர்.

மேலும் அவர்கள், “இதுவே சாதாரண இளைஞர்கள் ராஜகோபுரத்தில் ஏறியிருந்தால் சும்மா இருப்பார்களா பாஜகவினர். இந்து கடவுளை இழிவுபடுத்திவிட்டார்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்டிருப்பார்கள், கோபுரத்தின் மீது ஏறியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறைக்கு அனுப்பிய பிறகுதான் அமைதியாகியிருப்பார்கள். இன்று அவர்களே ஏறியிருக்கிறார்கள். அவர்கள் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை” என்றும் கூறுகிறார்கள்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் விசாரித்த போது, “இந்த சம்பவம் தெரிந்ததும் அறநிலையத் துறை இணை ஆணையர் ஜோதி மற்றும் ஏசி சந்திரன் ஆகியோர் விசாரணை செய்தனர். கோயில் நிர்வாக அதிகாரி சிவக்குமார் மூலமாகக் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா புகாரைப் பெற்றுக்கொண்டு, டிஎஸ்பி கரிகாலன் பாரி சங்கரிடம் வழக்குப்பதிவு செய்வது தொடர்பாக பேசியுள்ளார்.

இந்நிலையில் டிஎஸ்பி, எஸ்பி சக்தி கணேசனைத் தொடர்புகொண்டு வழக்குப் பதிவு செய்ய அனுமதி கேட்டுள்ளார்.

அதற்கு எஸ்பி, புகாரைப் பெற்றுக்கொள்ளச் சொல்லுங்கள், நான் அனுமதி கொடுத்த பிறகு வழக்குப் பதிவு செய்யச் சொல்லுங்கள் என்று தடைபோட்டுள்ளார்” என்கிறார்கள் கடலூர் காவல்துறையினர்.
வணங்காமுடி

மோடி மாநிலத்தில் கோயிலை இடித்த பாஜகவினர்: மக்கள் போராட்டம்!

+1
1
+1
4
+1
1
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *