bjp members arrested in nellai

பாஜகவினர் போராட்டம்: விபூதி பட்டை இட்டவர்கள் வலுக்கட்டாயமாக கைது!

அரசியல்

நெல்லையில் பாஜகவினர் போராட்டத்தால் இன்று (செப்டம்பர் 11) விபூதி பட்டை, சந்தனம், குங்குமம் வைத்துக் கொண்டு வந்தவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ய முயன்றனர்.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்றார்.

இது நாடு முழுவதும் உள்ள பாஜகவினர், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மத்தியில் பெரும் விவாதப்பொருளானது. இதே கூட்டத்தில் கலந்து கொண்ட திராவிடர் கழக தலைவர் வீரமணி சனாதனமும் இந்து மதமும் வேறு வேறு அல்ல என்று பேசினார்.

இந்தக் கூட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டதற்கு பாஜக கண்டனம் தெரிவித்தது.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் தார்மிக உரிமையை சேகர்பாபு இழந்து விட்டார் என்றும் விமர்சித்தது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து சேகர்பாபு பதவி விலக வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழகம் முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்த முடிவு செய்தது.

அதன் படி நெல்லை பாளையங்கோட்டையில் அமைந்துள்ள நெல்லை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் அலுவலகத்தை நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் முற்றுகையிட போவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் நெல்லை மாநகர காவல் உதவி ஆணையாளர் பிரதீப் தலைமையில் அறநிலையத் துறை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

போராட்டத்திற்கு வேன் மற்றும் கார் பைக்குகளில் வந்த பாஜகவினரை ஆங்காங்கே தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.

இதனை கண்டித்து நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் புவனேஸ்வரி தலைமையில் பாஜகவினர் சாலையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணாவில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை அலுவலகம் அமைந்திருக்கக் கூடிய சாலையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியும் தீவிரப் படுத்தப்பட்டது.

இதனிடையே அவ்வழியாக விபூதி பட்டை இட்டவர்கள், சந்தனம் குங்குமத்துடன் வந்தவர்களையும் பாஜகவினர் தான் சாலை மறியலுக்கு வருகிறார்கள் என எண்ணி வலுக் கட்டாயமாக வேனில் ஏற்ற முயன்றனர்.

வேறு வேலைகளுக்காக அவ்வழியாக வந்ததாக அவர்கள் தெரிவித்தாலும் தீவிர விசாரணைக்கு பிறகே அவர்களை செல்ல அனுமதித்தனர்.
சாலையில் சென்றவர்களையும் கைது செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சாலை மறியல் போராட்டத்தில் திமுகவிலிருந்து தற்போது பாஜகவில் இணைந்த முன்னாள் மேயர் புவனேஸ்வரி மற்றும் நெல்லை மத்திய மாவட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆனால் நெல்லை பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சரவணன்

”கலக்கமடைந்துள்ளேன்”: ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை!

செந்தில்பாலாஜி ஜாமீன்: அமலாக்கத்துறை பதில் என்ன?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *