நடிகர் விஜய் குறித்து ட்விட்டரில் அவதூறாக கருத்து பதிவிட்ட தமிழ்நாடு பாஜக பெண் நிர்வாகி உமா கார்கி இன்று (ஜூன் 20) கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த கல்வியாண்டில் 234 தொகுதிகளில் முதல் 3 இடங்களை பிடித்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழையும் ஜூன் 17 ஆம் தேதி வழங்கினார்.
சென்னை நீலாங்கரையில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் அவர்களது பெற்றோருடன் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு பரிசு வழங்குவதற்கு முன்பு நடிகர் விஜய் பேசும்போது, “பாட புத்தகங்களை தாண்டி படிக்க வேண்டும். எல்லா தலைவர்களை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
அம்பேத்கர், பெரியார், காமராஜர் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்” என்று பேசினார்.
விஜய்யின் பேச்சை விமர்சித்து உமா கார்கி கடந்த ஜூன் 18 ஆம் தேதி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், “பெரியாரைப்பத்தி படிங்க…விசய் சோசப்பு. ஏன்? உன் மகளை நீ கட்டப்போறியாக்கும்?’ என்ற அவதூறான பதிவை வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்கம் போலீசில் புகார் அளித்திருந்தது. அந்த புகாரின் அடிப்படையில் இன்று கோவை சைபர் கிரைம் உமா கார்கியை கைது செய்தனர்.
கோவையில் நேற்று பாஜக சமூக ஊடக செயல் வீரர்கள் கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அண்ணாமலை உமா கார்கிக்கு சிறந்த சமூக ஊடக செயல்பாட்டிற்கான விருதை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோத காவலில் உமாகார்கி?
திமுக எதிர்ப்பு அரசியல் கருத்துக்களை துணிச்சலாக வைக்கும் பெண்களை திமுக குறிவைத்துள்ளது என்று தமிழக பாஜக தொழிற்பிரிவு துணைத் தலைவர் செல்வ குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவரது அறிக்கையில், “சென்னை எழும்பூர் சைபர்கிரைம் காவல்நிலையத்திற்கு நாளை காலை விசாரணைக்கு ஆஜராக இருந்த நிலையில் இன்றே கைது செய்துள்ளது காவல்துறை.
தமிழ்நாட்டில் பல ஆயிரக்கணக்கான கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, சொத்து அபகரிப்பு வழக்குகள் நிலுவையில் இருக்கும் பொழுது காவல்துறை தன்னுடைய முழு கவனத்தையும் பாஜகவினர், ஆதரவாளர்கள் மீது பொய் வழக்குகள் மூலம் கைது செய்வதில் முனைப்பாக இருக்கிறது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது ஒட்டுமொத்த திமுகவினரின் மன உறுதியை குலைத்துள்ளது.
எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் சமூக ஊடகங்களில் அரசியல் கருத்துகளைத் துணிச்சலாக வைக்கும் பெண்களை குறிவைத்துள்ளது.
இது போன்ற கோழைத்தனமான செயல்களால் ஒருபோதும் பாஜகவினரை மிரட்ட முடியாது.
சகோதரி உமா கார்கியை சட்டவிரோத காவலில் வைத்துள்ளதா காவல்துறை? கோவையில் உள்ள எந்த அனைத்து மகளிர் காவல்நிலையத்திலும் உமா கார்கி இல்லை.
அவரை சந்திக்க குடும்பத்தினர், வழக்கறிஞர் உட்பட அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மோனிஷா
செந்தில்பாலாஜி ஆபரேஷன் தேதி: மின்னம்பலம் தகவலை உறுதி செய்த அமைச்சர் மா.சு.
செந்தில் பாலாஜி சிகிச்சையில் தலையிட்டேனா?: முதல்வரின் மச்சான் விளக்கம்!