கர்நாடகாவை போன்று பாஜகவுக்கு தோல்வி தொடருமேயானால் அவர்கள் முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வாய்ப்பிருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சேலத்தில் இன்று (ஜூன் 10) மாலை ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், “ கடந்த 10 ஆண்டு கால அதிமுகவை அகற்றிவிட்டு, மக்கள் ஆட்சியை நமக்கு கொடுத்திருக்கிறார்கள்.
எப்போதும் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டால், கட்சி பணிகளில் மந்தம் வந்துவிடும். அப்படி மந்தம் வந்துவிடக் கூடாது என்பதற்காக மிக தீவிரமான பணிகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.
எதிர்கட்சியாக இருந்த காலத்தை விடவும், இப்போது நீங்கள் ஒவ்வொருவரும் அதிகமாக உழைத்துக்கொண்டிருக்கிறீர்கள். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. அதற்காக உங்களது பாத மலர்களை தொட்டு வணங்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
நீங்கள் உறக்கமின்றி செயல்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். அதன் காரணமாகத்தான் 2 கோடி உறுப்பினர்களை சேர்த்திருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் இருக்கக் கூடிய 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறோம்.
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 100 வாக்காளர்களுக்கு ஒருவர் வீதம் பூத் கமிட்டி அமைக்கக் கூடிய பணியும் நிறைவடைந்திருக்கிறது. உறுப்பினர்களையும், பூத் கமிட்டி பொறுப்பாளர்களையும் பட்டியலில் சேர்ப்பதோடு அந்த பணி முடிவடைந்துவிடவில்லை.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் தொலைபேசி அழைப்பு செல்கிறது. தனித் தனியாக அழைத்து விசாரிக்க சொல்லியிருக்கிறேன்.
பூத் மட்ட அளவில் மிக வலுவான கட்சி திமுக தான். இனி இந்த மண்ணில் திமுகவை வீழ்த்த முடியாத அளவுக்கு, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உருவாக்கிக்கொண்டிருக்கிறேன்.
இதற்காக நீங்கள் ஒவ்வொருவரும் உறுதுணையாக இருக்கிறீர்கள். உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் உங்களுக்கு வந்து சேரும்.
நாம் முக்கியமான காலக்கட்டத்தில் இருக்கிறோம். ஒன்று கட்சியின் வளர்ச்சி, மற்றொன்று மாநிலத்தின் வளர்ச்சி. நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டுதான் வருகிறது என யாரும் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது.
பாஜக வின் செல்வாக்கு நாளுக்கு நாள் சரிந்துகொண்டிருக்கிறது. அந்த ஆத்திரத்தில் அவர்கள் எந்த முடிவையும் எப்போதும் எடுப்பார்கள்.
கர்நாடகாவில் கிடைத்த தோல்வி தொடருமேயானால், முன்கூட்டியே அவர்கள் நாடாளுமன்ற தேர்தலை நடத்த முன்வரலாம்.
முழுமையாக தேய்ந்து போவதற்கு முன்னால் தேர்தலை நடத்தலாம். எனவே நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
பிரியா
நாடாளுமன்றத் தேர்தல் : சேலத்தில் அச்சாரம் போட்ட ஸ்டாலின்
“டாஸ்மாக் வருவாய் அரசுக்கு அத்தியாவசிய தேவை” – ஐ.பெரியசாமி
ஐஸ்வர்யா முதல் அனுஷ்கா வரை: பாலிவுட் பிரபலங்களை பாட்டியாக்கிய AI கலைஞர்!
’அவரு தூங்கல… கண்ண தான் மூடி இருந்தாரு’: லபுஷேனை கலாய்க்கும் ரசிகர்கள்!