2023 ஒருநாள் உலககோப்பை தொடர், கடந்த அக்டோபர் 5 அன்று இந்தியாவில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, இந்திய வந்துள்ளது.
இந்த தொடரில், நெதர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக 2 போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான், இரண்டிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
குறிப்பாக, கடந்த அக்டோபர் 10 அன்று, இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 345 ரன்கள் என்ற இலக்கை விரட்டி, உலகக்கோப்பை வரலாற்றில் அதிக இலக்கை விரட்டிய அணி என்ற சாதனையை பாகிஸ்தான் பெற்றது.
இந்த போட்டியில், மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் கடைசி வரை ஆட்டமிழக்காமல்,
3 சிக்ஸ், 8 பவுண்டரியுடன் 121 பந்துகளில், 131 ரன்கள் சேர்த்து, அந்த அணியின் இந்த வரலாற்று வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றினார்.
இந்த போட்டிக்கு பிறகு, முகமது ரிஸ்வான் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த வெற்றி காசாவில் உள்ள நமது சகோதர, சகோதரிகளுக்கானது”, என ட்வீட் செய்திருந்தார்.
மேலும், “ஐதராபாத் மக்கள் தங்களுக்கு வழங்கிய சிறப்பான வரவேற்புக்கு நன்றி”, எனவும் அவர் கூறியிருந்தார்.
This was for our brothers and sisters in Gaza. 🤲🏼
Happy to contribute in the win. Credits to the whole team and especially Abdullah Shafique and Hassan Ali for making it easier.
Extremely grateful to the people of Hyderabad for the amazing hospitality and support throughout.
— Muhammad Rizwan (@iMRizwanPak) October 11, 2023
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனில் இயங்கி வரும் ஹமாஸ் அமைப்பு இடையே போர் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில்,
பாலஸ்தீனில் உள்ள முக்கிய நகரான காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில், இதுவரை 1400-க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அந்த நகரில் இருந்து 3.4 லட்சம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.சிங், “முகமது ரிஸ்வான் இந்த வெற்றியை காசா அல்லது பாலஸ்தீன மக்களுக்கு சமர்ப்பித்துள்ளது,
பாகிஸ்தான் எப்போதும் பயங்கரவாதத்திற்கு ஆதரவாகவே செயல்படுகிறது என்பதை காட்டுகிறது” என பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதேபோல, மகாராஷ்டிராவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ராம் கடாம், “எப்போதும் பயங்கரவாதத்திற்கு துணைபோகும் பாகிஸ்தான் மனநிலையின் ஒரு எடுத்துக்காட்டு” என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இந்த பிரம்மாண்ட கிரிக்கெட் திருவிழா நடைபெறும் நேரத்தில், குறிப்பாக, பாகிஸ்தான் தனது அடுத்த போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளவுள்ள இந்த சமயத்தில்,
பாஜக தலைவர்களின் இவ்வாறான கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முரளி
செவிலியர்களுக்கு ஊக்க மதிப்பெண்: எவ்வளவு தெரியுமா?
பிக் பாஸ் வீட்டில் துவங்கிய காதல் எபிசோட்!