டிஜிட்டல் திண்ணை: ஜிலேபி முதல் மன்னிப்பு வரை… மிரட்டல், உருட்டல்! அன்னபூர்ணாவுக்கு நடந்தது என்ன?

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் மத்திய நிதியமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ இன்பாக்சில் வந்து விழுந்தது. அது தொடர்பான வானதி சீனிவாசனின் பேட்டி லைவ் லிங்க்கும் வந்து விழுந்தது.

அதை பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“செப்டம்பர் 11 ஆம் தேதி கோவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  நடத்திய குறைகேட்பு கூட்டத்தில்   பேசிய தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தின் கௌரவ தலைவர் அன்னபூர்ணா சீனிவாசன், கோவிட் சமயத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது ஹோட்டல் இண்டஸ்ட்ரீஸும், சுற்றுலா துறையும்தான்.

அப்போது நீங்கள் (நிர்மலா சீதாராமன் ) எடுத்த நடவடிக்கைகளால்தான் இன்றைக்கும் இந்த துறை இருக்கிறது. அதேபோல 10 வருடங்களுக்கு முன்பாக எங்களைப் போன்ற தொழில்துறையினருக்கு வங்கி லோன் வேணும்னா மேனேஜரை பார்க்க 3 மாசம் காத்திருக்கணும், டிஜிஎம் பாக்க 3 மாசம் ஆகும். அப்புறம் ஜிஎம் பார்க்க  காத்திருக்கணும். ஆனா அந்த நிலை இப்ப மாறி பேங்க் காரங்க எங்களை லோன் வேணுமானு கேட்டு துரத்துறாங்க’ என்று மோடி அரசைப் புகழ்ந்துவிட்டுதான், ‘காரத்துக்கு 12% ஜிஎஸ்டி., இனிப்புக்கு 5% ஜிஎஸ்டி என இருக்கிறது. இதை ஒரே மாதிரி ஆக்குங்கள்’ என்றெல்லாம் கோரிக்கை வைத்தார்.

‘வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. எங்களது கஸ்டமர். வருவாங்க ஜிலேபி சாப்பிடுவாங்க. சண்டை போடுவாங்க. அவங்கதான் வட இந்தியாவுல அதிகமான மக்கள் ஸ்வீட் சாப்பிடறதால இனிப்புக்கு ஜிஎஸ்டி கம்மி’னு சொன்னாங்க’ என்று போகிற போக்கில் சில உண்மைகளையும் சொன்னார்.  இதையெல்லாம் கேட்டு சிரித்து ரசித்துக் கொண்டிருந்தார்கள் வானதியும் நிர்மலாவும்.

தமிழ்நாடு ஏற்கனவே ஜிஎஸ்டி விவகாரத்தில்  பல கோரிக்களையும் புகார்களையும் எழுப்பிக் கொண்டிருக்கும் நிலையிlல் அன்னபூரணா சீனிவாசனின் இந்த சுவாரஸ்யமான வீடியோ வைரலானது.

11 ஆம் தேதி மாலை முதலே சீனிவாசனுக்கு பல போன் அழைப்புகள். ஹோட்டல் சங்கத்தினர்,  தமிழ்நாட்டின் பல்வேறு ஹோட்டல் உரிமையாளர்கள்  அவருக்கு போன் செய்து,  ‘அன்னபூரணா ஜிலேபி மாதிரியே ஸ்வீட்டா பேசிட்டீங்கண்ணா’ என்று நன்றியும் வாழ்த்தும் தெரிவித்தார்கள்.

அதேநேரம் பாஜக முகாமைச் சேர்ந்தவர்கள் அவருக்கு போன் செய்து, ‘என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க… எம்.எல்.ஏ.மேடம் உங்க கடையில ஜிலேபி சாப்பிட்டது ஒரு தப்பா?’ என்று  எதிர்மறையாகவும் பேச ஆரம்பித்தார்கள்.

இதற்கிடையே பாஜக நிர்வாகி செல்வகுமார் போன்றவர்கள், ‘அன்னபூர்ணா சீனிவாசன் திமுக ஆதரவாளர்’ என்று சமூக தளங்களில் பதிலடி கொடுக்க ஆரம்பித்தனர். இதையெல்லாம் பார்த்து வருத்தமாகிவிட்டார் அன்னபூர்ணா சீனிவாசன்.

இந்த நிலையில்தான் செப்டம்பர் 12 ஆம் தேதி இரவு 8.30க்கு  கோவையில் இருந்த நிர்மலா சீதாராமனை சந்தித்து அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கேட்கும் வீடியோ ஒன்று வெளியானது. கோவில்பட்டியில் இருந்து தினேஷ் என்பவர் மூலம் இந்த வீடியோ வெளியிடப்பட்டதாக தெரிகிறது. அதையடுத்து இதை பாஜக ஐடி விங் நிர்வாகிகள் வேகவேகமாக பரப்பினார்கள்.

அதாவது நிர்மலா சீதாராமனைப் பார்த்து பொது இடத்தில் கேள்வி கேட்ட அன்னபூர்ணா சீனிவாசன்   ஹோட்டலில்  பார்த்து மன்னிப்பு கேட்கிறார் என்று கெத்தாக இந்த வீடியோவை பரப்பினர் பாஜகவினர். ஆனால் அதுவே பாஜகவினருக்கு பெரும் பேக் ஃபயர் ஆகிவிட்டது.

ஆக்கபூர்வமான கோரிக்கை வைத்தவரை கூப்பிட்டு மன்னிப்பு கேட்க வைத்து அதை  அவருக்கே தெரியாமல் வீடியோவாகவும் எடுத்து வெளியிடும் போக்குக்கு  தமிழ்நாடு அளவில் மட்டுமல்ல. அகில இந்திய அளவில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் கண்டனம் தெரிவித்தார்கள்.

கடந்த இருவாரங்களாக லண்டனில் இருக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  அரசியல் விவகாரங்களில் கருத்து தெரிவிக்காமல் அமைதியாகவே இருந்தார்.  இந்த விவகாரம் பாஜகவுக்கு பெரும் தலைவலி ஆகி வருவதை அறிந்ததும்  உடனடியாக இன்று (செப்டம்பர் 13)  அன்னபூர்ணா சீனிவாசனுக்கு போன் செய்து பேசினார் அண்ணாமலை.

சீனிவாசனுக்கு நன்கு அறிமுகமானவர் அண்ணாமலை.  முதலில் அந்த வீடியோ வெளியானதற்கு  மன்னிப்பு கேட்டுக் கொண்ட அண்ணாமலை என்ன நடந்தது என்று  சீனிவாசனிடம் கேட்டுள்ளார்.

’இந்த மாதிரி ஒரு ஃபங்ஷன் நடக்குது… ஃபைனான்ஸ் மினிஸ்டர் வர்றாங்க. என்கிட்ட அடிக்கடி சொல்றீங்கள்ல… அந்த  குறைகளை எல்லாம் வந்து அவங்ககிட்ட சொல்லுங்க அப்படினு வானதி மேடம்தான் என்னை கூப்பிட்டாங்க. அங்க போய்  நான் பாராட்ட வேண்டியதை பாராட்டினேன். அதேநேரம் ஜிஎஸ்டியில இப்படி சில இஷ்யுக்கள் இருக்கறதையும் சாதாரணமாதான் பேசினேன். அது வைரலாயிடுச்சு.

அதுக்குப் பிறகு செப்டம்பர் 12 ஆம் தேதி காலையில எனக்கு வானதி மேடம் போன் போட்டாங்க… ’நீங்க நேத்து பேசினதுல மினிஸ்டருக்கு ரொம்ப வருத்தம்’னு சொன்னாங்க. வானதி மேடமே என்கிட்ட சொன்னதால நானே போய் நேர்ல பாத்து சாரி கேட்குறேன்னு சொன்னேன்.

சரினு ரேடிசன் ப்ளூ ஹோட்டலுக்கு மதியம் 2 மணிக்கு வரச் சொன்னாங்க.  அங்க போய் 2.30 மணிக்கு  ஃபைனான்ஸ் மினிஸ்டரையும். எம்.எல்.ஏ.வையும் பார்த்தேன்.

‘நான் இயல்பா பேசினேன் மேடம்… தப்பா இருந்த மன்னிச்சுக்கங்க. மனசுல வச்சிக்காதீங்க. நான் எந்த கட்சிக்கும் ஆதரவோ எதிர்ப்போ இல்லை’னு சொன்னேன்.  அப்ப கூட மினிஸ்டர்,  ‘உங்க ஹோட்டல்ல வந்து அவங்க சாப்பிட்டதையெல்லாம் சொல்லுவீங்களா?’னு கேட்டார்.  அதுக்கும் சாரி கேட்டுக்கிட்டேன்.

இப்படி போய் சாரி கேட்டதை நான் யார்கிட்டையும் சொல்லலை. என்னோட நண்பர்கள்கிட்ட கூட நான் ஷேர் பண்ணிக்கல. ஆனா அதை அப்படியே ரெக்கார்ட் பண்ணி நேத்து நைட்  ஷேர் பண்ணியிருக்காங்க. இதை நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கல’ என்று வருத்தப்பட்டிருக்கிறார்.

அப்போது சில விஷயங்களை தனிப்பட்ட முறையில் அவரிடம் பகிர்ந்துகொண்ட அண்ணாமலை… பாஜகவின் ஒருங்கிணைப்பு குழுவெல்லாம் இருந்தால் கூட உடனடியாக தமிழ்நாடு பாஜக சார்பில் மன்னிப்பு கேட்டு அறிவித்தார்,

கோவை என்பது அண்ணாமலையின் அரசியல் கிரவுண்டாக இருக்கிறது. இந்த சம்பவம் கோவை மக்களுக்கு பாஜக மீது  கடும் கோபத்தை ஏற்படுத்தியிருப்பதாக அண்ணாமலைக்கு தகவல் சென்றிருக்கிறது.  இதுமட்டுமல்ல… அன்னபூர்ணா என்பது கோவையின் அடையாளமாக திகழும் உணவகம். சீனிவாசனின் தந்தை தாமோதரன் நாயுடு தொடங்கிய நிலையில் இப்போது அதை அவரது மகன் சீனிவாசன் மற்றும் அவரது மகன்  நடத்தி வருகிறார்கள்.

கோவையில் அடர்த்தியாக இருக்கும் நாயுடு சமூகத்தில் செல்வாக்கானவராகவும் இருக்கிறார் அன்னபூர்ணா சீனிவாசன். இந்நிலையில்தான் கோவையில் பாஜகவுக்கு எதிராக நாயுடு சமூகத்தினரின் கோபம் திரண்டுவிடக் கூடாது என்பதற்காக  அண்ணாமலை மன்னிப்பு கேட்டார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

பாஜகவுக்கு எதிராக வெளியில் இருந்து மட்டுமல்ல,. அக்கட்சிக்கு உள்ளே இருந்தே அதுவும் குறிப்பாக மாநில தலைவரிடம் இருந்தே இப்படிப்பட்ட அறிவிப்பு வந்ததை நிர்மலா சீதாராமனே எதிர்பார்க்கவில்லை” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

விஜய் 69 : விபரம் நாளை வெளியாகிறது….

இந்த வார ஓடிடி ரிலீஸ்: கல்பலி ரெக்கார்ட்ஸ் முதல் பச்சன் வரை!

+1
0
+1
7
+1
0
+1
2
+1
3
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *