இஸ்லாமியர்களைப் பற்றி அவதூறாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட வழக்கில் பாஜக பிரமுகர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை வழங்கி சென்னை எழும்பூர் நீதி மன்றம் இன்று (மார்ச் 8 ) உத்தரவிட்டுள்ளது.
பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக இருந்த கல்யாணராமன் மோதலை தூண்டும் வகையில் ட்விட்டரில் கருத்து பதிவிட்டதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவர் தொடர்ந்து சர்ச்சைகுரிய பதிவுகளை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தார். இதற்காக அவர் மீது பல்வேறு கண்டனங்கள் எழுந்தன.
குறிப்பாக, 2017 மற்றும் 2018 ஆகிய காலக்கட்டங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அரசியல் பிரமுகர்களையும், அரசியல் தலைவர்களையும் , மத உணர்வுகளை புண்படுத்தும்படியும் பல்வேறு கருத்துகளை சமூக வலைதளத்தில் பதிவிட்ட விவகாரத்தில் கல்யாணராமன் மீது வழக்கு பதிவு செய்தனர்.
கல்யாணராமன் மீது ஏற்கனவே குண்டர் சட்டமும் பாய்ந்திருந்தது. குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த இவர் இனிமேல் இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட மாட்டேன் என்று நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.
ஆனால், அதை மீறி சமூக வலைதளத்தில் தொடர்ந்து இரு மதங்களுக்கு இடையே உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கருத்துகளை பதிவிட்டதால் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி கல்யாணராமன் மீண்டும் கைது செய்யப்பட்டு அவர் மீது மேலும் 2 வழக்குகள் பதியப்பட்டன.
கல்யாணராமனை மீண்டும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கல்யாணராமன் மீது இரண்டாவது முறையாக போடப்பட்ட குண்டர் சட்டத்தையும் நீதிமன்றம் ரத்து செய்தது.
கல்யாணராமன் மீது சென்னை சைபர் க்ரைம் போலீசார் தாக்கல் செய்த வழக்குகளை எழும்பூர் கூடுதல் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தின் போதே 163 நாட்களையும் சிறையில் கழித்துவிட்டதால் அவரை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் , தன் மீதான நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக கல்யாணராமன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று (மார்ச் 8 ) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”என் மீதான வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக வந்துள்ள தீர்ப்பின் மீது மேல் முறையீடு செய்யப்படவுள்ளது என்பதை நண்பர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். கவலைப்பட ஒன்றுமில்லை ” என கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அதிமுக மீது கல்லெறிந்தால் அண்ணாமலை காணாமல் போவார் : ஜெயக்குமார்
IND VS AUS: நரேந்திர மோடி மைதானத்தில் 4வது டெஸ்ட் போட்டி… புள்ளி விவரம் இதோ!