காவல்துறையின் கையை கட்டிப்போட்டால் இன்னும் 5 ஆண்டுகளில் தமிழகம் சீரழிவை சந்திக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மதுரை சொக்கிக்குளத்தில் உள்ள பாஜக மதுரை மாநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கணபதி ஹோமம் மற்றும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு புதிய நிர்வாகிகளுக்கான விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று (நவம்பர் 8) கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்தி திணிக்கப்படுவதாகக் கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “பொன்முடி அவர்கள் சுயபரிசோதனை செய்து பார்க்கவேண்டும். 2019 வரை இந்தி என்பது திணிக்கப்பட்டு இருந்தது.
2020ல் புதிய கல்விக்கொள்கை வந்தபிறகு தான் இந்தி என்பது 3 ஆவது தேர்வு மொழியாக கொண்டுவரப்பட்டது. இந்தி திணிப்பு என்பது இருக்கக்கூடாது என்பது தான் பிரதமர் மோடியின் எண்ணம்.
இல்லம் தேடி கல்வி என்பதும் புதிய கல்வி கொள்கையில் இருக்கக்கூடிய ஒரு அம்சம்தான். ஆனால் அதை பெயர் மாற்றி செயல்படுத்தி வருகிறார்கள். மருத்துவமும், பொறியியலையும் தமிழில் கொண்டுவாருங்கள் என்று சொன்னது கூட பாஜக தான்” என்றார்.
கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக அண்ணாமலைக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்தது பற்றி ஆர்.எஸ்.பாரதியின் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “கோவை குண்டு வெடிப்பை முதலில் காவல்துறை சிலிண்டர் வெடிப்பு என்றே கூறி வந்தது. பாஜக இதில் தலையிடவில்லை என்றால் முபின் குடும்பத்திற்கு அரசு வேலை கூட கொடுத்திருப்பார்கள்.
ஆர்.எஸ்.பாரதி அரசியலுக்காக பேசுகிறார். உண்மையில் அவர்கள் பாஜகவுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள்” என்று கூறினார்.
மேலும் அவர், ”கட்டுக்கோப்பாக இருந்த தமிழகத்தில் மதுவும், கஞ்சாவும் வந்து இளம் தலைமுறையை சீரழித்து கொண்டிருக்கிறது. இப்போது காவல்துறையின் கையை கட்டிப்போட்டிருக்கிறார்கள்.
காவல்துறை மீது மக்களுக்கு இருந்த பயத்தையே போக்கிவிட்டார்கள். காவல்துறையினர் கையில் இருக்கும் லத்தி என்ன பூப்போட்டு, பூஜை செய்வதற்கா உள்ளது.
தவறு செய்யும்போது அதை பயன்படுத்தவேண்டும். காவல்துறையில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. காவல்துறை சீரழிந்தால் சமுதாயம் சீரழியும்.
எங்கு தேவையோ அங்கு லத்தியை உபயோகிக்கவேண்டும். ஆனால் சாத்தான்குளம், தூத்துக்குடி போன்ற நிகழ்வுகள் தவறு” என்றார்.
பிரதமர் மோடி 11ஆம் தேதி மதியம் 1.50க்கு மதுரை விமான நிலையம் வருகிறார். 2.20 மணிக்கு திண்டுக்கல் காந்திகிராமுக்கு செல்கிறார். அங்கு பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கலை.ரா
தமிழகத்தில் அடித்து வெளுக்கப் போகும் கன மழை!
அரசாணை 115: கேள்விக்குறியாகும் இளைஞர்களின் அரசு வேலை கனவு!
சென்னை மழையின் காரணமாக ஏற்படும் நிவாரண உதவி இல்லாமல் போனதற்கு முதல்வருக்கு நன்றி சொல்லலாம். சாரி.. உனக்கு படகு விட வாய்ப்பு இல்லாமல் போச்சு.