கோவை மாவட்டத்தில் பந்த் நடத்துவது குறித்து, கோவை மாவட்ட பாஜக தலைவர்கள் முடிவு எடுப்பார்கள். மாநிலத் தலைமையிலிருந்து அவர்களை கட்டாயப்படுத்த முடியாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை எம்.ஓ.பி.வைஷ்ணவ் கல்லூரியில் மோடி @20 என்ற புத்தக அறிமுக விழா இன்று (அக்டோபர் 29) நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தென் மாநில தலைவர் ஹெச்.ராஜா, மத்திய இணையமைச்சர் ஜித்தேந்திரசிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “கோயம்புத்தூர் முழு அடைப்பை பொறுத்தவரை, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை ஒரு தனிநபர் தொடுத்திருந்தார்.
உடனடியாக இந்த வழக்கானது நேற்று அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. பாஜக மாநில துணை தலைவர் பால் கனகராஜ் என்னுடைய சார்பில் வாதாடிய போது, கோவை மாவட்டத்தில் பந்த் நடத்துவது குறித்து கோவை மாவட்ட பாஜக தலைவர்கள் முடிவு எடுப்பார்கள்.
மாநில தலைவராக அண்ணாமலை பந்துக்கு அழைக்கவில்லை. இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எங்கள் தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்த வழக்கை நவம்பர் 1ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்கள். பந்த் நடத்த வேண்டுமா இல்லையா என்பதை கோவை மாவட்ட பாஜக தலைவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் காவல்துறையை அணுகி அனுமதி வாங்க வேண்டும். பாஜக மாநிலத் தலைமையிலிருந்து அவர்களை கட்டாயப்படுத்த முடியாது.
அக்டோபர் 18ஆம் தேதி மத்திய உள்துறை தமிழ்நாடு அரசிற்கு தமிழகத்தில் அசம்பாவிதங்கள் நடப்பதற்கான எச்சரிக்கையை கொடுத்தார்கள். அக்டோபர் 21-ஆம் தேதி மாலை அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அறிக்கை குறித்து மாநில உளவுத்துறை கடிதம் எழுதியுள்ளது.
4 நாட்கள் தமிழக காவல்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னிடம் அந்த அறிக்கை உள்ளது. இதை தான் நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு ஏன்.ஐ.ஏவுக்கு மாற்றப்படாமல் இருந்தால் நான் கண்டிப்பாக பந்த் அறிவித்து இருப்பேன்
திமுக பேச்சாளர் சைதை சாதிக் பேசியதை கண்டித்து சென்னையில் இன்னும் இரண்டு நாட்களில் பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அவரது பேச்சை கனிமொழி எம்.பி கண்டித்திருப்பதை நான் வரவேற்கிறேன்.” என்றார்.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக செந்தில் பாலாஜி மோசடி செய்த வழக்கில் நவம்பர் 1-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “தப்பு செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. சாராய அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் சிறைக்கு செல்வார்.” என்றார்.
மேலும், “திமுக ஆட்சியில் உள்துறை மீது கவனம் இல்லை. தேச விரோத சக்திகளை ஊக்குவிக்கிறார்கள். என்னை பற்றி முரசொலியில் அவதூறு கருத்துக்களை எழுதுகின்றனர். முரசொலியை எப்படி நான் பத்திரிக்கை என்று ஏற்றுக்கொள்ள முடியும்? .
பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 11ஆம் தேதி திண்டுக்கல்லில் இருக்கக்கூடிய காந்திகிராம் நகர்ப்புற பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவிற்கு வருகிறார்.” என்றார்.
செல்வம்
மீனவர்களைச் சிறை பிடித்த இலங்கை கடற்படை: ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்!
“சைதை சாதிக் மன்னிப்பை ஏற்க முடியாது” : குஷ்பு காட்டம்!