வைஃபை ஆன் செய்ததும் பிரதமர் மோடி அதிமுக தம்பிதுரை, தமாகா தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோருடன் விருந்து சாப்பிட்ட புகைப்படம் இன்பாக்ஸில் வந்து விழுந்தது.
அதைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ்அப் தனது மெசேஜ் டைப் செய்ய தொடங்கியது.
“தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் தொடங்கிய நடைபயணம் ஆகஸ்ட் 2ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தை எட்டிய போது… ஓ.பி.எஸ். பற்றி அண்ணாமலை தெரிவித்த கருத்து அதிமுகவினரை டென்ஷன் ஆக்கி உள்ளது.
‘ஓபிஎஸ்சை நாங்கள் புறக்கணிக்கவில்லை. அவர் தமிழகத்தின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர். தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் வேண்டுமானாலும் சேரலாம். எங்கள் நடைப்பயணத்தை வாழ்த்தலாம்’ என்ற ரீதியில் செய்தியாளர்களிடம் பேசி இருந்தார் அண்ணாமலை.
இதை அறிந்த எடப்பாடி பழனிசாமி தனக்கு நெருக்கமானவர்களிடம், ‘அண்ணாமலை எப்போதுமே இப்படித்தான். அவர் அதிமுகவில் குழப்பம் நீடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். நம்மிடம் பாஜக மேலிடத் தலைவர்கள் சரியாக இருக்கிறார்கள் என்று கருதுகிறோம். ஆனால் இங்கு அண்ணாமலை தொடர்ந்து குழப்பம் விளைவித்துக் கொண்டே இருக்கிறார்’ என்று கூறியிருக்கிறார்.
மேலும் நடைபயண துவக்க விழாவின் முன்பே… பன்னீர்செல்வத்தை அண்ணாமலை போனில் தொடர்பு கொண்டு பேசிய விவரத்தையும் அறிந்து கொண்டார் எடப்பாடி. அதனால்தான் அவர் அமித்ஷா வந்த போதும் ராமேஸ்வர துவக்க விழாவில் கலந்து கொள்ளவில்லை.
மேலும் ராமநாதபுரத்தில் தொடங்கிய நடைபயணம் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்கள் வழியாக இப்போது சென்று கொண்டிருக்கிறது. அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டத்திற்கு அண்ணாமலை பயணம் வரும்போது கூட்டணி தர்மத்துக்காக வாழ்த்த வேண்டுமா என்று எடப்பாடியிடம் கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு எடப்பாடி பழனிச்சாமி, ‘துவக்க விழாவில் அமித்ஷாவுக்கு மரியாதை கொடுத்து நம் கட்சி சார்பில் உதயகுமார் கலந்து கொண்டு விட்டார். அதனால் மாவட்டங்களில் யாரும் சென்று கலந்து கொள்ள வேண்டாம்’ என்று வாய்மொழி உத்தரவு போட்டு விட்டார்.
அதனால்தான் ராமநாதபுரம் கடந்து சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்கள் வந்த போது அதிமுக சார்பில் அண்ணாமலையின் நடைபயணத்தை அதிகாரப்பூர்வமாக யாரும் வரவேற்று வாழ்த்த வில்லை.
இதற்கிடையே ஆகஸ்ட் 2ஆம் தேதி பிரதமர் மோடி அதிமுகவின் மூத்த தலைவரும் எம்.பியுமான தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் உள்ளிட்ட தென்னிந்திய எம்பிக்களோடு விருந்து சாப்பிட்டார். இந்த விருந்துக்கும் எடப்பாடியைத் தொடர்பு கொண்டு தெரிவித்த பிறகே சென்றிருக்கிறார் தம்பிதுரை.
ஒரு பக்கம் தேசிய தலைவர்களான மோடி, அமித்ஷா, நட்டா ஆகியோர் தங்களை மதித்த போதும் அண்ணாமலை மீண்டும் மீண்டும் எடப்பாடிக்கு எதிராக கொம்பு சீவுவதிலேயே குறியாக இருக்கிறார் என்று கருதுகிறார்கள் அதிமுக பிரமுகர்கள். இதன் வெளிப்பாடாகத்தான், ‘எடப்பாடியின் அருமை மோடிக்கு தெரிகிறது. அண்ணாமலைக்கு தெரியவில்லை’ என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 4ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. கூட்டத்தில் ஆகஸ்ட் 20 மாநாடு பற்றியும் அந்த மாநாட்டுக்கு பிரதமர் மோடியை அழைப்பது பற்றியும் விவாதிக்கப்பட இருக்கிறது. நடைபயணம் அண்ணாமலை விவகாரம் பற்றியும் பேசப்படலாம் என்கிறார்கள்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
என்.எல்.சி முன் போராட அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம்!
அஜயன் பாலா இயக்கும் மனதைத் தொடும் காதல் கதை!