தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட போது அதிகாரமிக்க பொதுச்செயலாளர் பதவியில் கே.டி.ராகவன் இருந்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரின் டெல்லி தொடர்பினால் தமிழக பாஜகவில் மிகவும் செல்வாக்கான நபராக வலம் வந்தார்.
அதன்பிறகு ஒரு சர்ச்சையில் சிக்கி அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் பாஜக அரசியல் நடவடிக்கைகளில் அவர் ஈடுபடவில்லை. கே.டி.ராகவன் வளர்ச்சியை பிடிக்காத பாஜக முக்கிய தலைவர்களே அவர் பிரச்சனையில் சிக்குவதற்கு காரணமாக இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த சூழலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னாள் பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி ராகவனை இன்று சந்தித்துள்ளார். வரும் திங்கட்கிழமை மே 22-ஆம் தேதி கே. டி. ராகவனின் புதிய வீடு கிரக பிரவேசம் நடைபெற உள்ளது. அதையொட்டி இன்றே அவரை அண்ணாமலை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கே.டி ராகவனை சந்தித்த பிறகு சென்னை திரும்பிய அண்ணாமலை ஒரு ஹோட்டலில் ஓய்வெடுத்தார். அடுத்து அவர் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சி சென்னை கலெக்டர் அலுவலகம் எதிரில் கள்ளச்சாராய புழக்கத்தை கண்டித்து பாஜக ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம்.

அங்கிருந்தபடியே சென்னை பெருங்கோட்ட பொறுப்பாளர் கரு. நாகராஜனை அலைபேசியில் தொடர்புகொண்டு ”ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டம் வந்து விட்டதா…” என்று விசாரித்துள்ளார் அண்ணாமலை. நானூறு பேர் வரை வந்திருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்ததும் 5 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை கலந்துகொண்டார்.
‘பாஜகவின் சென்னை பெருங்கோட்டத்தில் நிர்வாகிகளே ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். ஆனால் ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருப்பது நானூறு பேர் வரை தானா? மாநிலத் தலைவர் கலந்துகொள்ளும் ஆர்ப்பாட்டத்தில் இன்னும் கூடுதலாக கூட்டம் வந்திருக்க வேண்டாமா?” என்று ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த நிர்வாகிகளிடம் கோபப்பட்டிருக்கிறாராம் அண்ணாமலை.
வேந்தன்