திமுக அமைச்சர்களை கடுமையாக சாடிய குஷ்பு
ஆ.ராசா, பொன்முடி ஆகியோரின் பேச்சுக்கு பாஜகவைச் சேர்ந்த குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதில், மகளிர் இலவச பேருந்து பயணம், பேறுகால விடுப்பு அதிகரிப்பு, அரசு பணிகளில் மகளிருக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு, கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் போன்ற திட்டங்கள் பெண்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
திமுகவினரின் சர்ச்சை கருத்துகள்!
இந்நிலையில் திமுக எம்.பி ஆ. ராசா, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஆகியோரின் பேச்சு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
குறிப்பாக அமைச்சர் பொன்முடியின் பேச்சு பலரால் ரசிக்கப்படவில்லை. கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்களை பார்த்து, “பேருந்தில் ஓசியில் தானே போறீங்க?” என பொன்முடி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதற்கு எதிர்கட்சி தலைவர்கள் மட்டுமின்றி திமுக கூட்டணி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, கடந்த 26ம் தேதி முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் அறிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.
அதில், ”நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்கும் பேச்சுகளைத் தவிர்த்து, மக்களுக்கான பணியைக் கவனிப்போம்” என குறிப்பிட்டிருந்தார்.
அநாகரீகமாக பேச ஸ்டாலின் அனுமதி?
இந்நிலையில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் திமுக தலைவர்களின் அவமரியாதையான பேச்சு தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு பல்வேறு கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில், சமீபகாலமாக அரசின் திட்டங்கள் மற்றும் பெண்கள் குறித்து திமுக அமைச்சர்கள் அநாகரீகமாக பேசுவதற்கு முதல்வர் ஸ்டாலின் அனுமதித்துள்ளாரா?
அமைச்சர்கள் தங்களது ஆணவ பேச்சின் மூலம் பெண்களின் கண்ணியத்தையும், மரியாதையையும் தொடர்ந்து பறித்து வருகிறார்கள்.
ஏழைகளுக்கு உதவுவது அரசின் கடமை!
எந்த பெண்ணும் ஓசி பேருந்து பயணத்தை கேட்கவில்லை. எந்த பெண்ணும் ஆதரவு கேட்டு பிச்சை எடுக்கவில்லை. ஏழைகளுக்கு உதவுவது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை நான் தெளிவாக உணர்ந்துள்ளேன்.
ஆனால் ஏதோ பெண்கள் பிச்சைக்கு காத்திருப்பது போலவும், அதனால் தாங்கள் இலவசங்களை அள்ளி வீசி வருவதாவும் திமுக கூறி வருகிறது. இது அருவருப்பானது.
திமுக மகளிர் ஏன் கண்டிக்கவில்லை?
பெண்களுக்கு வழங்கப்படும் இலவசங்களை இழிவாகப் பேசும் திமுக தலைவர்களை, சுயமரியாதை பற்றி பேசும் அதே கட்சியைச் சேர்ந்த பெண்கள் ஏன் கண்டித்து பேசவில்லை?
ஏழைகள் மீது பிச்சை காசுகளை வீசிவிட்டு பின்னர் அதனை அவர்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்கான திட்டம் என்று கூறுவது தான் திமுகவின் ஐடியா!” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
பெண்களை இழிவுபடுத்துவதுதான் திராவிட மாடலா? – டி.டி.வி.தினகரன்
ரசிகர்களுடன் பொன்னியின் செல்வன் பார்த்த த்ரிஷா