மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், பிரச்சாரத்தில் ஈடுபடமாட்டேன் என்று பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு அனைத்து கட்சித் தலைவர்கள் தொடங்கி தொண்டர்கள் வரை அனைவரும் தேர்தல் பிரச்சார்த்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வடை சுட்டு கொடுப்பது, தோசை ஊற்றி கொடுப்பது, பஜ்ஜி போட்டு கொடுப்பது, இஸ்திரி போடுவது, நடனமாடுவது என பரபரப்புக்கும் சுவாரஸ்யத்துக்கும் பஞ்சமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது தேர்தல் களம்.
இந்நிலையில் நடிகையும் , பாஜக நிர்வாகியுமான குஷ்பு தன்னால் தேர்தல் பிரச்சார்த்தில் ஈடுபடமுடியாது என்று கட்சியின் தேசிய தலைவர் நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உடல்நிலை காரணமாக தன்னால் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாது என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், “2019 ஆம் ஆண்டு டெல்லியில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, எனக்கு வால் எலும்பில் முறிவு ஏற்பட்டது. இந்த பாதிப்புக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து சிகிச்சை அளித்தாலும் குணமடையவில்லை.
இந்நிலையில் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று எனது மருத்துவக் குழு எனக்குக் அறிவுறுத்தியது, பிரச்சாரம் செய்தால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்று மருத்துவர்கள் கூறினார்கள்.
இருப்பினும் மருத்துவர்களின் அறிவுரையை ஏற்காமல் பாஜக. தொண்டராகவும், பிரதமர் மோடியின் ஆதரவாளராகவும் வலி மற்றும் வேதனையை பொருட்படுத்தாமல் என்னால் முடிந்த அளவுக்கு பிரச்சாரம் செய்தேன். தற்போது நிலைமை மோசமாகி விட்டது.
எனவே தன்னால் பிரச்சாரத்தில் ஈடுபடமுடியாது என்று கனத்த இதயத்துடன் தெரிவித்துகொள்கிறேன். சமூக வலைதளங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
“குஷ்பு தென் சென்னை தொகுதியில் போட்டியிட முயற்சி செய்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தென் சென்னை தொகுதியில் முன்னாள் ஆளுநர் தமிழிசை போட்டியிடுகிறார். சமீபத்தில் பாஜகவில் இணைந்த ராதிகா சரத்குமாருக்கு விருதுநகரில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அவரை ஆதரித்து ஜே.பி.நட்டா இன்று பிரசாரம் செய்கிறார்.
இந்நிலையில் நீண்ட நாட்களாக கட்சியில் இருக்கும் தனக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் குஷ்பு அதிருப்தியில் இருந்து வந்தார். தற்போது அவருக்கு உடல் நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை என கூறி தலைமைக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்” என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
Good Bad Ugly: இணைந்த தெலுங்கு நடிகர்… ஷூட்டிங் எப்போன்னு பாருங்க!
Good Bad Ugly: இணைந்த தெலுங்கு நடிகர்… ஷூட்டிங் எப்போன்னு பாருங்க!