பாரத மாதா நினைவிடத்தின் பூட்டை உடைத்த விவகாரத்தில், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம். பாப்பாரப்பட்டியில் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி பாஜகவினர், பாரத மாதா நினைவிடத்தின் பூட்டை உடைத்து பாரத மாதாவிற்கு மாலை அணிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து, காவல் துறையினர் பாஜக மாநிலத் துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் உட்பட 50 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதனை தொடர்ந்து, முதற்கட்டமாக பாஜக ஒன்றிய பொதுச்செயலாளர்கள் சிவலிங்கம், ஆறுமுகம், ஒன்றிய தலைவர் சிவசக்தி, மாவட்ட இளைஞரணி தலைவர் மௌனகுரு, முன்னாள் நகர தலைவர் மணி ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், பாஜக மாநிலத் துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கத்தை ராசிபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து ராசிபுரம் டி.எஸ்.பி தலைமையிலான போலீஸ் குழுவால் நேற்று (ஆகஸ்ட் 14) பிற்பகல் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பிறகு நெஞ்சு வலி ஏற்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரிடம் பென்னாகரம் நீதிமன்ற குற்றவியல் நடுவர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
விசாரணைக்கு பிறகு, கே.பி. ராமலிங்கம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வரை சிறையில் அடைக்கப்படுவார் என்று உத்தரவிட்டார்.
தற்போது கே.பி. ராமலிங்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உடல் நலம் குணமடைந்த பிறகு சிறையில் அடைக்கப்படுவார் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மோனிஷா
மீண்டும் சர்ச்சை : கோபுரத்தின் மீது ஏறி கொடியேற்றிய பாஜகவினர்!