ராகுலின் 100 கி.மீ நடைபயணத்திலேயே பா.ஜ.க ஆட்டம் கண்டுவிட்டது- கே.எஸ்.அழகிரி

அரசியல்

ராகுல் காந்தியின் 100 கி.மீ நடைபயணத்திலேயே பா.ஜ.க ஆட்டம் காண ஆரம்பித்து விட்டது என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

அவர் இன்று (செப்டம்பர் 13) வெளியிட்டுள்ள அறிக்கையில்: கடந்த 7 மாதங்களாக கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தும், பணவீக்கம் 6 சதவிகிதமாக இருந்தும் எரிபொருளுக்கான அதிக விலையை நுகர்வோர் ஏன் அதிகமாக கொடுக்க வேண்டும்?

கச்சா எண்ணெய் விலை குறையும் போது எரிபொருள் விலையை குறைத்து நுகர்வோருக்கு நிவாரணம் கிடைக்க வழி ஏற்படுத்தாதது ஏன்? பெட்ரோல் மற்றும் டீசல் விலை தேர்தலுக்காக மட்டும் மாற்றி அமைக்கப்படுகிறதா? அல்லது சர்வதேச சந்தை விலையின்படி மாற்றியமைக்கப்படுகிறதா? எனவே,

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் லிட்டருக்கு ரூபாய் 15, எரிவாயு சிலிண்டர் விலையில் ரூபாய் 150 குறைத்து, நாட்டிலுள்ள நடுத்தர வருவாய் பிரிவு மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர் ஆகியோருக்கு உடனே நிவாரணம் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2014 ஆம் ஆண்டு மே மாதம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றிற்கு 106 டாலராக இருந்தது. அப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 71 ஆகவும், டீசல் விலை ரூபாய் 55 ஆகவும் இருந்தது.

அப்போது விலை குறைப்பு எப்படி நிகழ்ந்தது ? ஆனால், இப்போது கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் 88 டாலராக இருக்கிற போது பெட்ரோல் விலை ரூபாய் 102.63, டீசல் விலை ரூபாய் 94.24, சமையல் எரிவாயு விலை ரூபாய் 1068.50 உயர்ந்திருப்பது ஏன்?

இதன்மூலம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் எரிபொருள் விலையை குறைத்து மக்களின் சுமையை குறைக்க விரும்பாத மக்கள் விரோத அரசாக பா.ஜ.க. செயல்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்றால் கடந்த 8 ஆண்டுகளில் எரிபொருட்கள் மீது கலால் வரியாக 77 லட்சம் கோடி ரூபாய் வசூலித்து மத்திய அரசு கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கிறது.

இந்திய ஒற்றுமை பயணம் குறித்து குற்றம் சாட்டுபவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். இது குறித்து கேள்வி எழுப்புபவர்கள் மகாத்மா காந்தியை படுகொலை செய்தவர்கள்.

நாதுராம் கோட்சேவின் கொள்கைகளை பின்பற்றுபவர்கள் தான் இத்தகைய கேள்விகளை கேட்கிறார்கள். சுதந்திரத்திற்கு பிறகு 52 ஆண்டுகளாக மூவர்ண தேசியக் கொடியை ஏற்றாதவர்கள் தான் இந்த கேள்வியை எழுப்புகிறார்கள்.

எம்.எம். கல்புர்கி, பன்சாரே, கவுரி லங்கேஷ் கொலைகளில் தொடர்புடையவர்கள் தான் இந்த கேள்வியை கேட்கிறார்கள். தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் பிளவுபட்ட மக்களை ஒன்று படுத்துகிறது.

மக்களோடு மக்களாக பயணிக்கிறார். மக்கள் துன்பத்தை நேரிடையாக அறிகிறார். அவர் எழுப்புகிற கேள்விகளுக்கு பதில் கூற தயாராக இல்லாத பா.ஜ.க., திசைதிருப்புகிற அரசியலை செய்கிறது. ஆனால், அதில் பா.ஜ.க. வெற்றி பெற முடியாது.

ராகுல் காந்தி மேற்கொண்டிருக்கிற இந்திய ஒற்றுமை பயணத்திற்கு பின்னாலே கன்னியாகுமரியில் தொடங்கி இந்திய மக்கள் பேராதரவு வழங்கி ஆதரித்து வருகிறார்கள்.

மக்கள் எழுச்சியை சகித்துக் கொள்ளாத பா.ஜ.க.வுக்கு வீழ்ச்சி தொடங்கி விட்டது. ராகுல்காந்தியின் 100 கி.மீ. பயணத்திலேயே பா.ஜ.க.வின் ஆட்சி ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது. இதுவே தலைவர் ராகுல் காந்திக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியின் தொடக்கமாகும் என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

நாட்டைக் காக்க ஒரு மகத்தான நடைபயணம்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *