புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பாஜக- என் ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில், அமைச்சர் சந்திரபிரியங்காவின் பதவி நீக்கத்தை பத்து நாட்கள் கழித்து நேற்று (அக்டோபர் 21) தான் மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் சந்திரபிரியங்காவை வைத்து அடுத்த கட்ட அரசியல் ஆட்டத்தை பாஜக புதுச்சேரியில் நடத்தப் போகிறது என்ற தகவல் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பி வருகிறது.
நமது மின்னம்பலம். காம் தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிகையில் கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி வெளியான பதிப்பில், பாஜகவில் இணையும் சந்திர பிரியங்கா? ராஜினாமாவின் பின்னணி ரகசியங்கள்! ரங்கசாமிக்கு செக் என்ற தலைப்பில் விரிவான செய்தியை வெளியிட்டிருந்தோம்.
முன்னாள் அமைச்சர் சந்திரகாசு மகள் சந்திர பிரியங்காவை அமைச்சராக்கி அழகு பார்த்தார் முதல்வர் ரங்கசாமி. கடந்த சில மாதங்களாகவே சந்திர பிரியங்காவின் அரசியல் செயல்பாடுகளில் திருப்தியில்லை என்று அவரை அழைத்து ராஜினாமா செய்ய சொன்னார் ரங்கசாமி. ஆனால் ராஜினாமா செய்ய மறுத்தார் அமைச்சர் சந்திர பிரியங்கா.
தனது பேச்சை மதிக்கவில்லை என்ற கோபத்தில் அக்டோபர் 8 ஆம் தேதி மாலை சட்டமன்ற அலுவலகம் சென்று தனது கையால், சந்திரபிரியங்காவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க பரிந்துரைத்து துணை நிலை ஆளுநருக்கு அவசர கடிதம் எழுதி கொடுத்தார் முதலமைச்சர் ரங்கசாமி.
இந்தக் கடித விவரம் சந்திரபிரியங்காவுக்கு தெரியவர, அவர் அக்டோபர் 10 ஆம் தேதி, தனது ராஜினாமா கடிதத்தை துணை நிலை ஆளுநரிடம் கொடுத்தார். அதில், “என்னை சுற்றி பின்னப்பட்டுள்ள வலையில் சிக்கியுள்ள நிலையில் நான் இக்கடிதத்தினை எழுதுகிறேன். தொடர்ந்து ஜாதிய ரீதியிலும், பாலின ரீதியிலும் தாக்குதலுக்கு உள்ளாவதாக உணர்ந்தேன்” என பல விஷயங்களை குறிப்பிட்டிருந்தார்.
தன்னை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் ரங்கசாமி நீக்கம் செய்ததை திசை திருப்பும் விதமாக தானே ராஜினாமா செய்தது போல் ஒரு கடிதத்தை அனுப்பினார் சந்திரபிரியங்கா. இந்த கடித குழப்பங்களால் தாமதமான நிலையில், முதலமைச்சரின் பதவி நீக்க கடிதமே மத்திய உள்துறை அமைச்சகத்தால் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. சந்திரபிரியங்கா அனுப்பிய கடிதம் முறைப்படி இல்லை என்பதாலும் அவருக்கு முன்பே முதலமைச்சர் பதவி நீக்க கடிதத்தை அனுப்பிவிட்டதாலும்… வேறு வழியில்லாமல் உள்துறை அமைச்சகம் முதலமைச்சரின் கடிதத்தையே சட்டப்படி அங்கீகரித்தது.
இந்த நிலையில் புதுச்சேரியில் நடைபெற்றுவரும் பாஜக என். ஆர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்த்து பாஜக ஆட்சி அமைத்து சந்திர பிரியங்காவை முதல்வராக்கி புதுச்சேரியில் முதல் தலித் பெண்ணை முதல்வராக்கினோம் என்ற அரசியல் செய்ய போவதாகவும், இன்னொரு பக்கம் முதல்வர் ரங்கசாமி திமுக காங்கிரஸ் கூட்டணி அமைத்து முதல்வர் பதவியை தக்கவைத்துக்கொள்ள போகிறார் என்ற செய்திகளும் கடந்த சில நாட்களாக உலாவி வருகிறது.
இதுபற்றி என்.ஆர். காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, “சந்திர பிரியங்காவுக்கு முதல்வர் கனவும் ஆசைகளும் அதிகமாக இருப்பது உண்மைதான். அவர் தலித் என்று சொல்வதே ஒரு சர்ச்சையாகி வருகிறது. கோணமுட்டி என்ற சமூகத்தைச் சார்ந்தவர். இந்த சமூகத்தினர் பேரளம், மாயவரம், போன்ற பகுதிகளில் பத்து பத்து குடும்பங்கள் உள்ளனர். சந்திரகாசு எம். எல். ஏ, அமைச்சராகும்போதே இந்த சாதி பிரச்சினை உருவானது, அப்போது முதல்வர் ரங்கசாமிதான் அதை விடுங்கப்பா சந்திரகாசு என் நண்பன் என்று கூறி விட்டார்.
நாங்கள் பாஜகவில் இருந்தாலும் ரங்கசாமி மீது எப்போதும் மரியாதை உண்டு, அவரை செயல்பட முடியாமல் முடக்கி போட்டு வைத்துள்ளது பாஜக” என்றார்கள்.
திமுக எம். எல். ஏ. சிவாவிடம் கேட்டோம். ”புதுச்சேரியில் நடப்பது அனைத்தும் டிராமாதான். ஆட்சியை கலைக்க முடியாது, அதற்காக திமுக, காங்கிரஸ் எப்போதும் துணை போகாது. அதேநேரம் என். ஆர். காங்கிரசுக்கும் முட்டு கொடுக்கமாட்டோம்’ என்றார்.
அதிமுக எம். எல். ஏ. அன்பழகன் இதுபற்றி கூறும்போது, “சந்திர பிரியங்கா பாஜகவுக்கு மாறினால் எம். எல். ஏ. பதவி கட்சித் தாவல் சட்டத்தில் பறிபோய்விடும். அடுத்தது பாஜக எம். எல். ஏ. க்களே கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள். அதனால் ஆட்சியும் கலையாது, பாஜக ஆட்சியும் அமையாது” என்றார்.
தலித் அமைச்சர் ராஜினாமா செய்துவிட்டதால் இன்னொரு தலித்துக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும். அதனால் ராஜவேல் அல்லது அவரது அண்ணன் மகன் லட்சுமிகாந்தனுக்கு கொடுக்க வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர் தலித் சமூகத்தினர், ஆனால் முதல்வர் ரங்கசாமி தன்னை சந்தித்த நாடார் சமூகத்தைச் சார்ந்த எம். எல். ஏ. திருமுருகனுக்கு எலுமிச்சை பழம் கொடுத்து ஆசீர்வாதம் கொடுத்துள்ளார்.
அதேநேரம், ”சந்திரபிரியங்கா மட்டும் தனியாக கட்சி மாறினால்தானே கட்சித் தாவல் சட்டம் அமலுக்கு வரும்? வேறு வகையான திட்டங்கள் இருக்கின்றன. விரைவில் பார்ப்பீர்கள்” என பாஜக வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது.
புதுச்சேரியில் என். ஆர் காங்கிரஸ் 10 எம். எல். ஏ. க்கள், பாஜக 6 எம். எல். ஏ.க்கள், திமுக 6 எம். எல். ஏ.க்கள், காங்கிரஸ் 2 எம். எல். ஏ.க்கள், 6 சுயேச்சைகள் அதில் 3 சுயேச்சைகள் பாஜகவுக்கு ஆதரவு, 3 சுயேச்சைகள் என். ஆர். காங்கிரஸுக்கு ஆதரவு என்பதே புதுச்சேரி சட்டமன்ற நிலவரம்.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
–வணங்காமுடி
“நீங்கள் தான் சீக்ரெட் ஆப் மை எனர்ஜி” : திருவண்ணாமலையில் ஸ்டாலின் பேச்சு!
INDvsNZ: 274 ரன்கள் இலக்கு.. நியூசிலாந்தை பழி தீர்க்குமா இந்தியா?